தீவிரவாதத்தை ஒழிக்க, எல்லைக்கு அப்பாலிருந்து சட்ட விரோதமாக நடைபெறும் ஆயுத வர்த்தகத்தைத் தடுக்கும் வழி முறைகளை ஐநா பலப்படுத்த வேண்டும் என்று இந்தியா எச்சரித்துள்ளது.சிறு துப்பாக்கிகள் மற்றும் இலகுரக ஆயுதங்களின் சட்டவிரோத விற்பனையை தடுப்பது மற்றும் ஒழிப்பதற்காக, புரோகிராம் ஆப் ஆக்ஷன் (பிஓஏ) என்ற பெயரில் ஒரு செயல் திட்டத்தை ஐநா வகுத்துள்ளது. இந்த திட்டம் தொடர்பான ஆய்வு கூட்டம் நியூயார்க்கில் உள்ள ஐநா தலைமையகத்தில் நடைபெற்றது. இதில் இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் நிதி திவாரி பேசியதாவது:
தீவிரவாதம், நாடுகடந்த திட்டமிட்ட குற்றச்செயல்கள், போதைப்பொருள் கடத்தல், கடல் கொள்ளை ஆகியவற்றால் இந்தியா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இவற்றில் சட்டவிரோத சிறு துப்பாக்கிகள் மற்றும் இலகுரக ஆயுத வர்த்தகம் முக்கிய பங்கு வகிக்கிறது.
எனவே, 2001 முதல் ஐநாவின் பிஓஏ திட்டத்தை செயல்படுத்துவதற்கு இந்தியா அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. இதனால் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. எனினும், இன்னும் மேற்கொள்ள வேண்டிய பணிகள் உள்ளன.
சம்பந்தப்பட்ட நாடுகள், சர்வ தேச அமைப்புகள் பிஓஏ திட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்தபபோதிலும், எல்லைக்கு அப்பாலிருந்து சிறு துப்பாக்கிகள், வெடிபொருட்களின் சட்டவிரோத வர்த்தகம் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. எனவே, பிஓஏ திட்டத்தை அமல்படுத்தும் நடைமுறைகளை மேலும் பலப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Post a Comment