பிரேசில் முன்னாள் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வாவை (72) சிறையில் அடைக்க அந்த நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கடந்த 2003-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை பிரேசிலின் அதிபராக லூயிஸ் இனாசியோ லுலா பதவி வகித்தார். அவரது ஆட்சிக் காலத்தில் அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவன ஒப்பந்தங்களை தனியார் நிறுவனத்துக்கு வழங்கியதில் லஞ்சம் பெறப்பட்டதாக புகார் எழுந்தது. சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனம் லுலாவுக்கு ரூ.6.5 கோடி மதிப்புள்ள வீட்டை அன்பளிப்பாக அளித்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கில் லுலாவுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இதில் அவரின் சிறை தண்டனை 12 ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டது. இதனை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் அவர் மீண்டும் மேல்முறையீடு செய்தார்.
இந்த வழக்கில் நேற்றுமுன்தினம் தீர்ப்பு வழங்கப்பட்டது. முன்னாள் அதிபர் லுலா உடனடியாக சரணடைந்து தனது 12 ஆண்டு கால சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கண்டிப்புடன் உத்தரவிட்டது. அதன்படி அடுத்த ஒரு வாரத்தில் லுலா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார் என்று அந்த நாட்டு போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Post a Comment