இலங்கை அணிக்கும் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கும் இடையில் மூன்றாவதும் இறுதியுமான ரெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 4 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது.போட்டியின் இன்றைய நான்காம் நாள் ஆட்டத்தின்போது இலங்கை அணி இந்த வெற்றியை தனதாக்கிக் கொண்டது.
இந்த வெற்றியின் மூலம் ரெஸ்ட் போட்டித் தொடர் 1 க்கு 1 என்ற கணக்கில் சமநிலையில் முடிவடைந்துள்ளது. இந்தப் போட்டி இளஞ்சிவப்பு பந்தைப் பயன்படுத்தி ஆடப்பட்ட பகல் இரவுப் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்றைய தினம் 5 விக்கெட் இழப்பிற்கு 81 ஓட்டங்கள் என்ற நிலையில் காணப்பட்ட இலங்கை அணி இன்று தனது முதலாவது பந்து ஓவரில் குசல் மெண்டிசின் விக்கெட்டை இழந்தது.
உடல் உபாதைக்கு உள்ளான குசல் ஜனித் பெரேரா தனது உடல் ஆரோக்கியத்தையும் கவனத்திற்கொள்ளாது துடுப்பெடுத்தாட ஆடுகளத்தில் நுழைந்தார். அந்த நிலையில் இருந்து இலங்கையின் வெற்றியை குசல் ஜனித் பெரேராவும் டில்றுவன் பெரேராவும் உறுதிப்படுத்தினர்.
6 விக்கெட் இழப்பிற்கு 144 ஓட்டங்களைப் பெற்று வெற்றி இலக்கைத் தாண்டினர். ஒரு போட்டித் தடை காரணமாக அணித் தலைவர் தினேஷ் சந்திமால், தனிப்பட்ட காரணங்களுக்காக முன்னாள் தலைவர் அஞ்சலோ மத்தியுஸ் மற்றும் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் திமுத் கருணாரத்ன ஆகியோர் இல்லாமல் பெற்றுக்கொண்ட இந்த வெற்றியானது பல சவால்களுக்கு மத்தியில் பெற்றுக்கொள்ளப்பட்ட வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment