
அந்நாட்டின் ஆன்டிகுவா நகரில் உள்ள சர் விவியன் ரிச்சர்ட்ஸ் ஸ்டேடியத்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்து வீச்சினை தேர்வு செய்தது.
தொடர்ந்து பேட்டிங் செய்த வங்காளதேச அணியில் லிட்டன் தாஸ் (25) தவிர்த்த மற்ற அனைவரும் குறைந்த ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் அந்த அணி முதல் இன்னிங்சில் 18.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 43 ரன்களை எடுத்தது.
இதனை அடுத்து விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 68 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 201 ரன்களை எடுத்தது.
இந்த டெஸ்ட் போட்டியில் வங்காளதேச அணி மிக குறைந்த ரன்களை எடுத்துள்ளது. வெஸ்ட் இண்டீசில் வேறு எந்த அணியையும் விட மிக குறைந்த ரன்களை எடுத்த அணியாகவும் வங்காளதேசம் உள்ளது.
டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் 141 வருட வரலாற்றில் கடந்த 2015ம் ஆண்டில் நாட்டிங்ஹாம் நகரில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலிய அணி 18.3 ஓவர்களில் 60 ரன்களை எடுத்திருந்தது. இதுவே முதல் இன்னிங்சில் குறைந்த ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து முடிந்த முதல் போட்டியாகும்.
இதற்கு அடுத்து 18.4 ஓவர்கள் என்ற கணக்கில் குறைந்த ரன்களை எடுத்துள்ள வங்காளதேச அணி 2வது இடத்தினை பெற்றுள்ளது.
Post a Comment