உலக கோப்பை கால்பந்து தொடரில் நேற்று முன்தினம் இரவு சோச்சி நகரில் அரங்கேறிய 2-வது சுற்று ஆட்டத்தில் (நாக்-அவுட்) இரண்டு முறை சாம்பியனான உருகுவே அணி, ஐரோப்பிய சாம்பியனான கிறிஸ்டியானா ரொனால்டோ தலைமையிலான போர்ச்சுகலை எதிர்கொண்டது.முதல் வினாடியில் இருந்தே இரு அணி வீரர்களும் ஆக்ரோஷமான ஆட்டத்தில் ஈடுபட்டனர். 6-வது நிமிடத்தில் ரொனால்டோ இலக்கை நோக்கி அடித்த பந்து தாழ்வாக ஓடி நேராக உருகுவே கோல் கீப்பர் பெர்னாண்டோ முஸ்லெராவின் கையில் சிக்கியது. 7-வது நிமிடத்தில் உருகுவே முதல் கோல் போட்டது. சக வீரர் லூயிஸ் சுவாரஸ் தூக்கியடித்த பந்தை உருகுவேயின் எடின்சன் கவானி தலையால் முட்டி சரியாக கோலுக்குள் அனுப்பினார். இதனால் உருகுவே 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. பதிலடி கொடுக்க போராடிய போர்ச்சுகல் வீரர்களின் முயற்சிக்கு முதல் பாதியில் பலன் இல்லை.
பிற்பாதியில் 55-வது நிமிடத்தில் போர்ச்சுகல் பதில் கோல் திருப்பியது. கார்னரில் இருந்து குயரீரோ அடித்த பந்தை, சக வீரர் பெபே துள்ளிகுதித்து தலையால் முட்டி கோலாக மாற்றினார். 35 வயதான பெபே, உலக கோப்பை போட்டியில் அதிக வயதில் கோல் அடித்த போர்ச்சுகல் வீரர் என்ற சிறப்பை பெற்றார்.
ஆனால் போர்ச்சுகல் வீரர்களின் உற்சாகம் அதிக நேரம் நீடிக்கவில்லை. 62-வது நிமிடத்தில் கவானி மீண்டும் ஒரு அற்புதமான கோல் போட்டு அசத்தினார். பென்டாகுர் குறுக்கே தட்டிக்கொடுத்த பந்தை கவானி, வலுவாக ஓங்கி உதைத்த போது, அது வளைந்து கோலுக்குள் புகுந்தது. 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்ற நிலையில் உருகுவே வீரர்கள் தடுப்பாட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்தினர்.
எப்படியாவது மேலும் ஒரு கோல் திணித்து சமனுக்கு கொண்டு வந்து விட வேண்டும் என்று போர்ச்சுகல் வீரர்கள் களத்தில் ஆவேசம் காட்டினர். 70-வது நிமிடத்தில் போர்ச்சுகல் பொன்னான வாய்ப்பை கோட்டை விட்டது.
குயரீரோ அடித்த பந்தை முன்னோக்கி வந்து தடுத்த உருகுவே கோல் கீப்பர் முஸ்லெராவின் கையில் பந்து பிடிபடவில்லை. அவர் தடுமாறி கீழே விழுந்து கிடக்க, அச்சமயம் மற்றொரு போர்ச்சுகல் வீரர் பெர்னர்ட்டோ சில்வா பந்தை கம்பத்திற்கு மேல்வாக்கில் தூக்கியடித்து சொதப்பி விட்டார். இதன் பிறகு ஒரு சில முறை நெருங்கி வந்து கோல் வாய்ப்பு வீண் ஆகின.
பந்து போர்ச்சுகல் அணியினர் வசமே (61 சதவீதம்) அதிகமாக வலம் வந்த போதிலும், உருகுவே வீரர்களின் வலுமிக்க தடுப்பு அரணை உடைக்க முடியவில்லை. போர்ச்சுகல் அணி, ரொனால்டோவை தான் முழுமையாக நம்பி இருந்தது. அவரை எழுச்சி பெற முடியாத அளவுக்கு உருகுவே வீரர்கள் முடக்கினர்.
வழக்கமான நேரத்திற்கு பிறகு காயம் உள்ளிட்ட விரயத்துக்காக 6 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டது. போர்ச்சுகல் வீரர்கள் தங்களது ஒட்டுமொத்த ஆற்றலையும் ஒன்று திரட்டி உச்சக்கட்ட தாக்குதலில் இறங்கினர். எதிரணி செய்த பவுலுக்கு ‘பிரிகிக்’ வாய்ப்பு கொடுக்காததால் நடுவரிடம் முட்டிமோதிய ரொனால்டோ மஞ்சள் அட்டை எச்சரிக்கைக்கு உள்ளானார்.
‘இனி இழப்பதற்கு எதுவும் இல்லை’ என்ற சூழலில் போர்ச்சுகல் கோல் கீப்பர் பாட்ரிசியோ தனது வலையை விட்டு எதிர்முகாமுக்குள் தைரியமாக நுழைந்து விளையாடினார். ஒரு முறை பந்தை தலையால் முட்டவும் முயற்சித்தார். கடைசி நிமிடத்தில் போர்ச்சுகல் மாற்று ஆட்டக்காரர் குரேஸ்மா அடித்த நல்ல ஷாட்டை, உருகுவே கோல் கீப்பர் தடுத்து நிறுத்த அத்துடன் ‘நீயா-நானா’ சவால் முடிவுக்கு வந்தது.
பரபரப்பான ஆட்டத்தின் முடிவில் உருகுவே அணி 2-1 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகலை வீழ்த்தி கால்இறுதிக்கு முன்னேறியது. உருகுவே அணி கால்இறுதியில் முன்னாள் சாம்பியன் பிரான்சை 6-ந்தேதி சந்திக்கிறது
Post a Comment