கொத்துக்குண்டுகள் மற்றும் அதனுடன் தொடர்புபட்ட தடைசெய்யப்பட்ட ஆயுதங்கள் குறித்த அமைப்பின் தலைமைப்பொறுப்பை இலங்கை பொறுப்பேற்றுள்ளதன் காரணமாக இலங்கை தனது நாட்டில் கொத்துக்குண்டுகள் பயன்படுத்தப்பட்டமைக்கான ஆதாரங்கள் கிடைப்பது குறித்து தெளிவுபடுத்த வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதி தருணத்தில் பொதுமக்களிற்கான பாதுகாப்பு வலயங்கள் என அறிவிக்கப்பட்ட பகுதியில் பெருமளவில் காணப்பட்ட மக்கள் மத்தியில் கொத்துக்குண்டுகள் பயன்படுத்தப்பட்டதை அனைத்து ஆதாரங்களும் உறுதி செய்கின்றன என சர்வதேச நீதி மற்றும் உண்மைக்கான திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளார் யஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.
இலங்கை படையினர் தடை செய்யப்பட்ட ஆயுதங்களை பயன்படுத்தினர் என்ற குற்றச்சாட்டுகள் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டுள்ளன எனவும் குறிப்பிட்டுள்ள அவர் 2016 இல் ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளரே இதற்கான சுயாதீன சர்வதேச விசாரணையை கோரியிருந்தார் எனினும் அது நடைபெறவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
தடைசெய்யப்பட்ட ஆயுதத்தினை முற்றாக ஒழிப்பதற்காக குரல்கொடுக்கும் அமைப்பின் தலைமைத்துவத்தை ஏற்றுக்கொண்டுள்ள இலங்கை அதன் கடந்த காலத்தை மறைக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment