சமீபத்தில் நடந்த மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் முதல் இன்னிங்சின் போது பாதுகாப்பு வேலியை ஏறிக்குதித்து மைதானத்துக்குள் வந்த இளைஞர், பேட்டிங் செய்து கொண்டிருந்த விராட் கோலியை கட்டிபிடித்தார். பின்னர், கோலியுடன் அவர் செல்பி எடுத்துக்கொண்டார். ராஜ்கோட்டில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியிலும் இரு ரசிகர்கள் இவ்வாறு வேலி தாண்டி வந்து கோலியுடன் செல்பி எடுத்தனர்.இந்நிலையில், விஜய் ஹசாரே தொடரில் மும்பை அணிக்காக விளையாடிவரும் ரோஹித் சர்மாவுக்கும் இதே அனுபவம் கிடைத்துள்ளது. பீகாருக்கு எதிரான காலிறுதி போட்டியின் போது, பாதுகாப்பு வேலியை தாண்டிக்குதித்து வந்த ஒரு ரசிகர், ரோஹித் சர்மாவின் கால்களில் விழுந்தார். அவரை தூக்குவதற்கு ரோஹித் முயற்சித்தார்.
இதனைத்தொடர்ந்து அந்த ரசிகர் ஒரு படி மேலே சென்று ரோஹித்தை கட்டிப்பிடித்து கன்னத்தில் முத்தம் கொடுத்தார். ஆனால், ஹெல்மெட் போட்டிருந்ததால் அவரின் முகத்தில் முத்தம் படவில்லை. இரண்டாவது முறையும் அந்த ரசிகர் முத்தம் கொடுக்க முயற்சிக்கவே, ரோஹித் சர்மா சற்று விலகி தனது அதிருப்தியை தெரிவித்தார்.
இதனை அடுத்து, மீண்டும் ரோஹித்தின் கால்களில் விழுந்த ரசிகர், வெற்றிகரமாக எதையோ சாதித்த திருப்தியில் டாட்டா காட்டிக்கொண்டே மைதானத்தில் இருந்து துள்ளி குதித்தபடி வெளியேறினார். கேலரியில் அமர்ந்திருந்த தனது நண்பரிடம் அந்த ரசிகர் உற்சாகமாக தனது மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டார். இந்த வீடியோ காட்சி சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகின்றது.
இந்த போட்டியில் ரோஹித் சர்மா 33 ரன்கள் அடித்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார். எனினும், மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான சர்வதேச ஒருநாள் போட்டி இருப்பதால், விஜய் ஹசாரே தொடரில் இருந்து அவர் இந்த போட்டியுடன் வெளியேறுகிறார்.
Post a Comment