தனது இரண்டு சகோதரிகளும் படித்து அரசு உத்தியோகத்தில் பணியாற்றும்போது, பிளஸ் 2 பெயிலாகி, ஒரு டெக்ஸ்டைல் மில் மேனேஜர் விதார்த்தை திருமணம் செய்து கொண்டு, மகனுடன் நடுத்தர வாழ்க்கை நடத்துகிறார் ஜோதிகா. அவரது சின்ன உலகத்தில் மகிழ்ச்சி நிரம்பி வழிந்தாலும், அப்பா மற்றும் சகோதரிகளின் குத்திக்காட்டுகின்ற செயல், ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற வெறியை தூண்டுகிறது.
என்ன செய்து தன்னை நிரூபிக்கலாம் என்று யோசிக்கும்போது, பண்பலை வானொலி ஒன்றில் நள்ளிரவு நிகழ்ச்சி தொகுப்பாளர் வேலையை வாங்கி தருகிறது, அவரது வாயாடி இமேஜ். பகலில் அந்த சின்ன குடும்பத்தின் தலைவி. இரவில் வக்கிர ஆண்களின் கேள்விகளுக்கு பக்குவமாக பதில் சொல்கின்ற தொகுப்பாளர். இந்த இரட்டை வாழ்க்கையில் ஜோதிகா சந்தித்தது என்ன? சாதித்தது என்ன என்பது மீதி கதை.
இந்தியில் வித்யாபாலன் நடிப்பில் வெளியான, தும்ஹாரிசுலு படத்தின் தமிழ் ரீமேக் இது. இந்தி படம்தான் என்றாலும், அதை தனது பாணியில் தமிழுக்கு மாற்றிக் கொடுத்துள்ளார் ராதாமோகன். ஜோதிகாதான் படத்தை சுமக்கும் ஒன்உமன் ஆர்மி. நிறைய காட்சிகள் அவர் நடித்துள்ள 36 வயதினிலே, மகளிர் மட்டும் ஆகிய படங்களை நினைவுபடுத்தினாலும், நடுத்தரக் குடும்பத்தின் தலைவியாக நன்கு வாழ்ந்து காட்டியிருக்கிறார்.
அதுவும் அந்த பண்பலை ரேடியோ நிலையத்தில் கண்கள் விரிய, விரிய அடுத்தகட்டத்தை நோக்கி நகர்வது, சில ஆண்களுடைய வக்கிரமான கேள்விகளுக்கு வாய் மணக்க புத்திசாலித்தனமாக பதில்கள் சொல்வது, ‘ஹல்ல்ல்லோ’ என்று ஹஸ்கி வாய்சில் அனைவரையும் வசீகரிப்பது, கடைசி நாளில் வேலையை விட்டு விலகும்போது, அந்த ‘ஹல்ல்ல்லோ’வை சொல்ல முடியாமல் தவிப்பது என.
காற்றின் மொழி அனைத்திலும் ஜோதிகாவின் மொழிதான். அவரது கணவராக வருகின்ற விதார்த், அந்த கேரக்டருக்கு மிகப் பொருத்தம். வெறுமனே கணவன் என்று ஒதுங்கிவிடாமல், வேலைக்கு செல்கின்ற ஒரு பெண்ணுடைய கணவனுக்கே உரிய மனஓட்டங்கள், சந்தேகங்கள், குடும்பத்தில் இழந்த மகிழ்ச்சிக்காக ஏங்கும் தருணங்கள் என மனதில் ஆழமாகப் பதிகிறார். அதுவும் ஜோதிகாவின் நிகழ்ச்சிக்கே போன் செய்து, தன் ஆதங்கத்தை கண்ணீருடன் சொல்கின்ற அந்த காட்சி பிரமாதம். பெற்ற மகளையே டிகிரேட் செய்கின்ற தந்தை மோகன்ராம், ஜோதிகாவின் இரட்டை சகோதரிகள், திரைக்கு அதிகம் வராத கேரக்டர்கள்.
அபார்ட்மென்ட்டில் எதற்கு எடுத்தாலும் அதிகமாக கோபப்படும் எம்.எஸ்.பாஸ்கர், 60 வயது தாண்டிய பேச்சிலர் மனோபாலா, ஊறுகாய் விற்கும் உமா பத்மநாபன், மளிகை கடை உரிமையாளர் மயில்சாமி என, ஆங்காங்கே ராதாமோகன் பிரான்ட் கேரக்டர்களும் நடித்திருக்கின்றனர்.
பண்பலை அலுவலகத்தை கட்டி ஆளும் மார்கெட்டிங் டெரர் லேடி கேரக்டருக்கு லட்சுமி மன்சு நன்கு பொருந்துகிறார். வணிக கவிஞனாக குமரவேல் தன் பங்கை சிறப்பாக செய்துள்ளார். ஜோதிகாவின் ஒரே மகனாக வரும் மாஸ்டர் தேஜாஸ் கிருஷ்ணாவும் மனதை கவர்கிறார்.
சிம்பு, யோகி பாபு இருவரும் சிறப்பு தோற்றத்தில் வருகிறார்கள். இசை அமைப்பாளர் காஷிப், பின்னணி இசை மற்றும் ‘டர்ட்டி பொண்டாட்டி’ பாடலில் கவனத்தை ஈர்த்திருக்கிறார்.
அதேவேளையில், ‘ஜிமிக்கி கம்மல்’ பாடலை எதற்கு பயன்படுத்தி இருக்கிறார் என்று தெரியவில்லை. மகேஷ் முத்துசாமி கேமரா காற்றையும், மொழியையும் அழகாகப் பதிவு செய்துள்ளது. படம் முழுவதிலும் நறுக்கான வசனங்களை எழுதியிருக்கிறார் பொன்பார்த்திபன்.
ஆனால் ராதாமோகனின் படத்தில் ஆங்காங்கே வருகின்ற டபுள் மீனிங் வசனங்கள் நெருடுகிறது. காமிரேட்கள் மீதும், கவிஞர்கள் மீதும் என்ன கோபமோ, மறைமுகமாக தாக்கியிருக்கின்றனர். கிளைமாக்சில் விதார்த்தின் திடீர் மனமாற்றத்துக்கு பொருத்தமான காரணத்தை சொல்ல தவறிவிட்டனர். இதுபோன்ற குறைகள் இருந்தாலும், காற்று இதமாகவும், மொழி இனிமையாகவும் இருக்கிறது.
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment