Ads (728x90)

கொழும்பு - கண்டியை இணைக்கும் மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மீரிகமை முதல் குருணாகல் வரையிலான பகுதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நேற்று முன்தினம் மக்கள் பாவனைக்காகத் திறந்து வைக்கப்பட்டது.

40.91 கிலோமீற்றர் வரையிலான மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாம் கட்டம் திறந்து வைக்கப்பட்டது. இது மீரிகமை, நாகலகமுவ, தம்பொக்க, குருணாகல் மற்றும் யக்கபிட்டிய ஆகிய 05 இடமாற்றங்களைக் கொண்டுள்ளது.

இப்பகுதியை நிர்மாணிப்பதற்கு அரசாங்கம் 149 பில்லியன் ரூபாயைச் செலவிட்டுள்ளது. அனைத்து நிர்மாணப் பணிகளும், உள்நாட்டுப் பொறியாளர்கள் மற்றும் ஒப்பந்தக்காரர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மஹா சங்கத்தினரின் பிரித் பாராயணத்துக்கு மத்தியில் மீரிகமை நுழைவாயிலின் நினைவுக் கல்லை ஜனாதிபதி மற்றும் பிரதமர் திரை நீக்கம் செய்து வைத்தனர். 

மீரிகமையில் இருந்து குருணாகல் வரையிலான இடமாற்ற வீதிக்கு அருகில் கூடியிருந்த மக்களால் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு அமோக வரவேற்பளிக்கப்பட்டது.

கொழும்பு - கண்டி அதிவேக நெடுஞ்சாலையானது மூன்று கட்டங்களாக அபிவிருத்தி செய்யப்படுகின்றது. முதற்கட்டமான கடவத்தை முதல் மீரிகமை வரையிலான தூரம் 37.9 கிலோமீற்றர் ஆகும். மூன்றாம் கட்டமான பொத்துஹெர முதல் கலகெதர வரையிலான தூரம் 32.5 கிலோமீற்றர் தூரமாகும். கொழும்பில் இருந்து கலகெதர வரையான முழு வீதியை 2024ஆம் ஆண்டளவில் நிறைவுசெய்ய அரசாங்கம் எதிர்பார்க்கின்றது.

இலகுரக வாகனம் ஏதேனும் இரண்டு பரிமாற்றங்களுக்கு இடையில் சென்றால் அதற்கு ரூபா 100 கட்டணமும், கனரக வாகனம் சென்றால் ரூபா 150 கட்டணமும் செலுத்த வேண்டும். மேலும் அதிவேக நெடுஞ்சாலையில் மீரிகமையில் இருந்து குருணாகல் நோக்கி பயணிக்கும் இலகுரக வாகனம் ஒன்றுக்கு ரூபா 250 செலுத்த வேண்டும் என வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Post a Comment

Recent News

Recent Posts Widget