Ads (728x90)

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் போராட்டத்தில் ஈடுபட்ட கரைவலை மீன்பிடித்தொழிலில் ஈடுபடும் மீனவர்களுக்கும் மற்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இடையிலான கலந்துரையாடல் நேற்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

அவர்களுடன் நீண்ட கலந்துரையாடலில் ஈடுபட்டமையுடன், 2010 ஆம் ஆண்டிலிருந்து தொழிலாளர் பிரச்சினைகள் காரணமாக 2013 ஆம் ஆண்டு முதல் வின்ச் இயந்திரத்தைப் பயன்படுத்தி செயல்பட்டு வரும் கரைவலை மீன்பிடித் தொழில்துறையின் தற்போதைய நிலைமை குறித்து அவர்கள் ஜனாதிபதியிடம் விளக்கினர்.

கரைவலை மீன்பிடித் தொழில் தொடர்பாக எழுந்துள்ள இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணும்போது, பொருளாதார ரீதியாக யாருடைய வாழ்க்கைத் தரத்திலும் பாதிப்பை ஏற்படுத்த அரசாங்கம் விரும்பவில்லை என்றும், ஒவ்வொருவரின் பொருளாதார நிலைமையையும் வலுப்படுத்த அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது என்றும் ஜனாதிபதி இங்கு சுட்டிக்காட்டினார்.

மேலும் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில், பொது மீனவ சமூகம் முன்வைத்துள்ள முறைப்பாடுகள், சுற்றுச்சூழல் அமைப்புகள், இது தொடர்பாக விஞ்ஞான ரீதியான ஆராய்ச்சியில் ஈடுபடுகின்ற அரச நிறுவனங்கள், கடற்றொழில் அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்கள் மற்றும் ஏனைய நிறுவனங்களால் வழங்கப்பட்டுள்ள அறிக்கைகள் தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டும்.

அதன்படி பொருளாதார பாதிப்பைத் தடுப்பதற்கும், சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், சர்வதேச இணக்கப்பாடுகளுக்கு ஏற்பவும், எதிர்கால சந்ததியினருக்காக கடற்றொழில் மற்றும் கடல் வளங்களைப் பாதுகாப்பதற்கும், தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறைகளைப் பயன்படுத்துவதைத் தடுப்பதற்கும் நடவடிக்கை எடுப்பதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.

இதன்போது அனைத்து தரப்பினரும் குறுகிய காலத்திற்குள் கலந்துரையாடல்கள் மூலம் மிகவும் பொருத்தமான தீர்வுகளை பரிந்துரைக்க இதன்போது ஒப்புக்கொண்டதுடன், போராட்டத்தை கைவிடவும் முடிவு செய்யப்பட்டது.

அடுத்த திங்கட்கிழமை குறித்த கலந்துரையாடல்களை ஆரம்பிப்பதற்கும், கலந்துரையாடல்கள் இடம்பெறும் காலத்தில் தற்போது கரைவலை முறையின் கீழ் மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் மீனவர்கள் எதிர்கொள்ளும் குத்தகை போன்ற கட்டணச் சிக்கல்கள் குறித்து நிதி அமைச்சுடன் கலந்துரையாடல்களை நடத்துவதற்கும் மேலும் இணக்கம் தெரிவிக்கப்பட்டது.


Post a Comment

Recent News

Recent Posts Widget