Ads (728x90)

இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள தேவனிமோரி தொல்பொருள் தளத்தில் கண்டெடுக்கப்பட்ட புனித தாதுக்கள் கொழும்பு கங்காராம விகாரைக்கு நேற்று கொண்டுவரப்பட்டுள்ளன.

இது இரு நாடுகளுக்கும் இடையிலான ஆன்மீக மற்றும் கலாச்சார பிணைப்பை மேலும் வலுப்படுத்தும் ஒரு முக்கிய நிகழ்வாகும்.

இலங்கைக்குக் கொண்டுவரப்பட்ட “புத்த பெருமானின் புனித சின்னங்கள்” தரிசனத்தின் ஆரம்ப நிகழ்வாக புத்த பெருமானின் புனித சின்னங்களுக்கு நேற்று பிற்பகல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மலர் அஞ்சலி செலுத்தி வழிபட்டார்.

குஜராத்தின் அரவல்லி மாவட்டத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க தெவ்னி மோரி தொல்பொருள் தளத்தில் உள்ள புத்த மடாலய வளாகத்தில் உள்ள ஸ்தூபியின் அருகே 1960 களில் நடத்தப்பட்ட தொல்பொருள் அகழ்வாராய்ச்சியின் போது இந்த புனித சின்னங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

அந்த இடத்தில் இரண்டு புனித சின்ன கலசங்கள் கண்டெடுக்கப்பட்டதுடன், அவற்றில் ஒன்றில் புத்த பெருமானின் புனித சின்னங்கள் கிடைத்தன. அங்கு காணப்பட்ட கலசத்தில் உள்ள கல்வெட்டு, “புத்த பெருமானின் புனிதச் சின்னங்கள் வைக்கப்பட்ட இடம்”என்று எழுதப்பட்டிருந்தமை இவற்றின் புனிதத்தை மேலும் உறுதிப்படுத்தும் வலுவான சான்றாகும்.

இன்று முதல் எதிர்வரும் பெப்ரவரி 11 ஆம் திகதி வரை கொழும்பு கங்காராம விகாரையில் பொதுமக்களுக்கு இந்த புனித தாதுக்களை தரிசிப்பதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

இந்த புனித தாதுக்களுடன் குஜராத் மாநில ஆளுநர் ஸ்ரீ ஆச்சார்யா தேவ்வரத் மற்றும் குஜராத் துணை முதலமைச்சர் ஸ்ரீ ஹர்ஷ் சங்கவி ஆகியோர் தலைமையிலான இந்திய தூதுக்குழுவினரும் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

இந்த புனித தாதுக்கள் பெப்ரவரி 11 ஆம் திகதி மீண்டும் இந்தியாவுக்கு கொண்டு செல்லப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.




 

Post a Comment

Recent News

Recent Posts Widget