இன்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இது 300 உயிர்களைப் பறித்த ஒரு மிலேச்சத்தனமான தாக்குதல். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் ஆராதனையில் கலந்துகொள்ளச் சென்றவர்கள். இதில் அனைத்து மதங்களையும், இனங்களையும் சேர்ந்தவர்கள் உள்ளடங்குகின்றனர். இது ஒரு திட்டமிட்ட மனிதப் படுகொலையாகும்.
இந்தத் தாக்குதலின் பின்னணியில் உள்ள உண்மைகளைக் கண்டறிவது என்பது, இந்நாட்டின் சட்டம் சரியாகச் செயற்படுகிறது என்பதை உறுதிப்படுத்தும் ஒரு செயலாகும். அவ்வாறு உண்மை கண்டறியப்படாவிட்டால் குற்றம் செய்துவிட்டுத் தப்பித்துவிடலாம் என்ற அச்சமற்ற நிலை உருவாகும். இதனை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது.
குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தற்போது முன்னெடுக்கும் கைது நடவடிக்கைகள் மற்றும் விசாரணைகளுக்குப் பல்வேறு வியாக்கியானங்களைக் கொடுப்பவர்களின் பின்னணியில் உள்ள 'அரசியல் நிகழ்ச்சி நிரல்' என்னவென்பது புரிகிறது.
இதனை அரசியலாக்க வேண்டிய அவசியமில்லை. இது ஒரு சுயாதீனமான விசாரணை, அதனைச் சுதந்திரமாகச் செய்ய அனுமதிக்க வேண்டும்.
இந்த விசாரணைகளைக் குலைக்க முயற்சிப்பது என்பது, இத்தாக்குதலில் உயிரிழந்த மற்றும் அங்கவீனமுற்ற பாதிக்கப்பட்ட மக்களுக்குச் செய்யப்படும் பாரிய அநீதியாகும். எனவே அனைவரும் பொறுமையுடன் இருந்து இந்த விசாரணைகள் தடையின்றி முன்னெடுக்கப்பட ஒத்துழைக்க வேண்டும்.
அனைவரும் பேசிக்கொள்ளும் அரசியல் சதி இதில் இருந்ததா? அப்படி இருந்தால் அதனைச் செய்தது யார்? ஏன் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது? போன்ற கேள்விகளுக்கான விடைகளை நாம் அவசியம் கண்டறிய வேண்டும். இதற்கு எவராவது முட்டுக்கட்டை போட்டால், அது பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிராகச் செய்யப்படும் மற்றுமொரு குற்றமாகும் என தெரிவித்துள்ளார்.

Post a Comment