Ads (728x90)

இலங்கையை முழுமையான டிஜிட்டல் பொருளாதாரமாக மாற்றும் பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக, உலகின் முன்னணி இணைய கட்டண தளங்களில் ஒன்றான பேபால் (PayPal), நாட்டின் உள்நாட்டு வங்கி அமைப்புடன் இன்று ஒருங்கிணைக்கப்பட்டது.

பல வருட கோரிக்கைகளுக்குப் பிறகு, உள்நாட்டு வங்கிகளுடன் இணைந்து சர்வதேச எல்லை தாண்டிய பணப் பரிவர்த்தனை மற்றும் கொடுப்பனவு சேவைகளை மேற்கொள்ளும் வகையில் இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் இன்று இந்த சேவையின் உத்தியோகபூர்வ அங்குரார்ப்பண நிகழ்வு நடைபெற்றது.

இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்தை பிராந்திய மற்றும் உலகளாவிய மட்டத்தில் நிலைநிறுத்துவதற்கான ஒரு மாற்றத்தக்க படியாக இந்த முயற்சி அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 

இந்தச் சேவையானது ஆரம்பத்தில் இலங்கை வங்கி, கொமர்ஷல் வங்கி மற்றும் சம்பத் வங்கி உள்ளிட்ட முக்கிய வங்கிப் பங்காளிகள் ஊடாக வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கும். மேலும் பல வங்கிகள் வரும் மாதங்களில் இந்த முயற்சியில் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வளர்ச்சியானது இலங்கையிலுள்ள நுகர்வோர், சுயதொழில் செய்பவர்கள், தொழில்முனைவோர் மற்றும் வளர்ந்து வரும் வணிகங்கள் பாதுகாப்பான மற்றும் நம்பகமான சர்வதேச கட்டண முறையை அணுகுவதற்கு வழிவகுக்கும்.

உலகளாவிய தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய திறன் கொண்ட திறமையான சுயதொழில் செய்பவர்கள் மற்றும் தொழில்முனைவோர் இலங்கையில் பெருமளவில் உள்ளனர் என்பதை பேபால் நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது. 

இந்த கூட்டாண்மையானது வெளிநாடுகளில் இருந்து கொடுப்பனவுகளைப் பெறுவதில் உள்ள தடைகளை நீக்கி, தடையற்ற மற்றும் நம்பகமான கட்டணச் சூழலை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்வரும் வாரங்களில், அந்தந்த வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கான சேவை கிடைக்கும் தன்மை குறித்த மேலதிக விபரங்களை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

 

Post a Comment

Recent News

Recent Posts Widget