இரு நாடுகளிலும் இதுவரை 246-க்கும் மேற்பட்டோர் இத்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 80 பேர் பலியாகியுள்ளனர். வைரஸ் பாதிப்பு கிராமப் புறங்களைத் தாண்டி உகாண்டாவின் தலைநகர் கம்பாலா மற்றும் கொங்கோவின் தலைநகர் கின்ஷாசா ஆகிய முக்கிய நகரங்களுக்கும் பரவியுள்ளது.
தற்போது பரவி வருவது 'பன்டிபுகியோ' (Bundibugyo) எபோலாவின் புதிய திரிபாகும். உலக நாடுகளில் தற்போது பயன்பாட்டிலுள்ள எந்தவொரு எபோலா தடுப்பூசியும் இந்த புதிய திரிபுக்கு எதிராகப் பலனளிக்காது என உலக சுகாதார ஸ்தாபனம் கவலை வெளியிட்டுள்ளது.
வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த உலக சுகாதார ஸ்தாபனம் சில உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது:
தொற்றுள்ளவர்கள் அல்லது அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் 21 நாட்களுக்குச் சர்வதேசப் பயணங்களை மேற்கொள்ளத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அண்டை நாடுகள் தங்களது எல்லைப் பகுதிகளில் மருத்துவக் கண்காணிப்பை உச்சக்கட்டத்திற்கு கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தங்கம் மற்றும் கனிமச் சுரங்கத் தொழிலாளர்கள் மூலம் அண்டை நாடான தெற்கு சூடானுக்கும் இத்தொற்று பரவத் தொடங்கியுள்ளதால் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட நபரின் இரத்தம் அல்லது உமிழ்நீர் மூலம் பரவக்கூடிய இந்த வைரஸ், கடுமையான காய்ச்சல், தலைவலி, தசை வலி மற்றும் உடல் சோர்வை ஏற்படுத்தும். பாதிப்பு தீவிரமடையும் போது உடலின் உட்புறம் மற்றும் வெளிப்புறப் பகுதிகளில் இரத்தப்போக்கு ஏற்பட்டு உயிரிழப்பு நிகழும்.
இதேவேளை, கொங்கோவில் பதிவான மிக மோசமான எபோலா பரவல் 2018 மற்றும் 2020 க்கு இடையில் ஏற்பட்டதுடன், அதில் சுமார் 2,300 பேர் உயிரிழந்தனர். கடந்த ஆண்டும் ஏற்பட்ட இப்பரவலில் 45 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment