உயிரிழந்தவர்கள் அனைவரும் முஸ்லிம்களின் புனித பண்டிகையான ஈகைத் திருநாளை தத்தமது குடும்பங்களுடன் நைஜரில் கொண்டாடுவதற்காக மாலியில் இருந்து திரும்பிக்கொண்டிருந்த ஒரு குழுவினர் ஆவர். துரதிர்ஷ்டவசமாக, பாலைவனத்தின் நடுவே அவர்களின் லொறி பழுதடைந்ததை அடுத்து, அவர்களிடம் இருந்த குடிநீர் தீர்ந்துபோயுள்ளது.
அசமகா பகுதிக்கு மேற்கே 80 கிலோமீற்றருக்கும் அதிக தூரத்திலுள்ள ஒரு பகுதியிலேயே இந்த 49 பேரும் தாகத்தினால் உயிரிழந்துள்ளனர். அசமகா என்பது நைஜர் மற்றும் அல்ஜீரியாவுக்கு இடையிலான பிரதான எல்லைக் கடவை என்பதுடன், இது மாலி எல்லையையொட்டிய பகுதியில் அமைந்துள்ளது.
அத்துடன், மீட்புக்குழுவினர் உயிரிழந்தவர்களின் உடல்களைப் பொதுக் கல்லறைகளில் அடக்கம் செய்துள்ளதாகவும் அகாடெஸ் பிராந்திய ஆளுநரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தக் கொடூரமான சூழ்நிலையிலும் இருவர் மாத்திரம் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளனர். அவர்கள் இருவரும் சுமார் 50 கிலோமீற்றருக்கும் அதிக தூரம் கால்நடையாகவே நடந்து சென்று, ஒரு நீர் நிலையை அடைந்துள்ளனர். அதன் பின்னர் அங்கிருந்து அசமகா பகுதிக்குச் சென்று அதிகாரிகளுக்குத் தகவல் வழங்கியதாக ஆளுநரகம் தெரிவித்துள்ளது.

Post a Comment