Ads (728x90)

இலங்கைக் கடற்படைக் குழுவினால் அமெரிக்காவின் மேரிலாந்திலுள்ள பல்டிமோரிலிருந்து மேற்கொள்ளப்பட்ட, 12,000 கடல் மைல் தூரத்தைக் கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க கடல் பயணத்தைத் தொடர்ந்து, ”எஸ்எல்என்எஸ் சமுத்ரவிஜய” கப்பல் உத்தியோகபூர்வமாகப் படைத்துறைப் பணியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

கொழும்புத் துறைமுகத்தில் நடைபெற்ற இந்த விசேட வைபவத்தில், மேன்மைதங்கிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் அமெரிக்கத் தூதரகத்தின் தூதரக விவகாரங்களுக்கான பொறுப்பாளர் ஜேன் ஹொவெல் ஆகியோர் முதன்மை அதிதிகளாகக் கலந்துகொண்டனர்.

ஒரு கப்பலை நாட்டிற்குக் கொண்டு வருவதற்காக இலங்கை கடற்படைக் குழுவானது இதுவரை மேற்கொண்ட மிக நீண்ட பயணமாகவும், பனாமா கால்வாயினூடாக இலங்கைக் கடற்படை மேற்கொண்ட முதலாவது பயணமாகவும் இது அமைந்துள்ளது. 

இக்கப்பல் படைத்துறைப் பணியில் இணைத்துக் கொள்ளப்படுவதும், கடல்சார் பாதுகாப்பை பலப்படுத்துவதற்காகவும், முக்கிய வர்த்தகப் பாதைகளைப் பாதுகாப்பதற்காகவும், சுதந்திரமான, திறந்த மற்றும் செழிப்பான ஒரு இந்தோ-பசிபிக் பிராந்தியத்திற்கு உதவி செய்வதற்காகவும் அமெரிக்காவிற்கும் இலங்கைக்குமிடையில் காணப்படும் நீடித்த பங்காண்மையில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை குறிக்கிறது. 

எஸ்எல்என்எஸ் சமுத்ரவிஜய தனது சேவையின் ஒரு புதிய அத்தியாயத்தினை இன்று ஆரம்பிக்கிறது என தூதரக விவகாரங்களுக்கான பொறுப்பாளர் ஹொவெல் தெரிவித்தார். 

ஒரு முன்னாள் அமெரிக்க போர்க் கப்பலாக, பாதுகாப்பு, சட்ட அமுலாக்கம் மற்றும் கடல்சார் நலன்களைப் பாதுகாத்தல் போன்ற விடயங்களில் அமெரிக்க மக்களுக்குச் சிறந்த முறையில் அது சேவையாற்றியது. 

அக்கப்பலை இலங்கைக் கடற்படைக்கு மாற்றியமையானது, எமது இரு நாடுகளையும் இணைக்கும் நம்பிக்கையினையும், பங்காண்மையினையும் பிரதிபலிக்கிறது. 

இலங்கையானது இந்து சமுத்திரத்தின் மையத்தில் ஒரு முக்கியமான பங்கினை ஆற்றிவரும் நிலையில், இக்கப்பலானது, சுதந்திரமான, பாதுகாப்பான மற்றும் செழிப்பான ஒரு இந்தோ-பசிபிக் பிராந்தியத்திற்கான அமெரிக்க-இலங்கை ஒத்துழைப்பு மற்றும் எமது பகிரப்பட்ட உறுதிப்பாட்டின் ஒரு நீடித்த சின்னமாகத் திகழட்டும். 

வரவிருக்கும் வருடங்களில் இக்கப்பல் இலங்கை மக்களுக்கு கௌரவத்துடனும் சிறப்புடனும் சேவையாற்றட்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget