Ads (728x90)

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்படுபவர்கள் தொடர்பான விசாரணை செயன்முறை குறித்து ஏனையோரை விடவும் புலனாய்வுப் பிரிவு பிரதானியாகப் பதவி வகித்த சுரேஷ் சலேவுக்கு நன்கு தெரியும். 

அவர் உண்மையிலேயே எந்தவொரு குற்றத்தையும் புரியவில்லை என்றால், இந்த விசாரணைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதே அவர் செய்யக்கூடிய சிறந்த விடயமாகும் என அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

மாறாக அவர் ஏனைய தரப்புக்களுடன் இணைந்து, விசாரணை செயன்முறைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க மறுப்பதனால், இத்தாக்குதல்களுடன் அவருக்குத் தொடர்பு இருக்கக்கூடுமோ எனும் சந்தேகம் எழுகிறது எனவும் அவர் தெரிவித்தார். 

பெரும் எண்ணிக்கையான உயிர்களைக் காவுகொண்ட உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத்தாக்குதல்களுடன் தொடர்புடைய வகையில் கடந்த பெப்ரவரி 25ஆம் திகதி சுரேஷ் சலே கைதுசெய்யப்பட்டார். பெப்ரவரி 27 ஆம் திகதி அவருக்கான தடுப்புக்காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை அடுத்து, 90 நாட்கள் அவர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்தார். அதனைத்தொடர்ந்து மீண்டும் கடந்த மே 27ஆம் திகதி அவருக்கு எதிரான தடுப்புக்காவல் உத்தரவு பெறப்பட்டது.

இங்கு முக்கியமாக அவதானிக்கப்படவேண்டிய விடயம் என்னவென்றால், பெப்ரவரி மாதத்திலிருந்து அவர் தடுத்து வைக்கப்பட்டிருந்த 90 நாட்கள் எவ்வித குழப்பங்களும் எழவில்லை. அதனை எதிர்த்து யாரும் போராடவில்லை. 

ஆனால் கடந்த 3 ஆம் திகதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட மூவருக்கு வெளிநாட்டுப் பயணத்தடை விதிக்கப்பட்டதன் பின்னரே இந்தப் போராட்டங்கள் நடாத்தப்படுகின்றன. எனவே இதனுடன் தொடர்புடைய ஏதோவொரு தரப்பின் தேவைக்கு அமைவாகவே இந்தப் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுவதுபோல் தெரிகிறது.

இந்தப் போராட்டங்கள் மற்றும் எதிர்ப்புக்கள் அனைத்தும் உயிர்த்த ஞாயிறு தினப் பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் சரியான பாதையில் செல்கின்றன என்பதற்கான அத்தாட்சியேயாகும். ஆகையினாலேயே இவ்விவகாரத்துடன் சம்பந்தப்பட்டவர்கள் இப்போது பதறுகிறார்கள். தற்போது ஒரு கூடாரம் அல்ல, பத்து கூடாரங்கள் இட்டுப் போராடினாலும், விசாரணைகள் தொடர்ந்து நடைபெறும். 

இத்தாக்குதல்களால் பாதிக்கப்பட்டோருக்கான நீதி நிலைநாட்டப்படும் என வழங்கிய வாக்குறுதிக்கு அமைவாகவே அரசாங்கம் செயற்படும்.

அதேபோன்று இவ்விசாரணைகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் விதத்தில் கருத்துக்களை வெளியிடுவோர் மற்றும் அத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் தொடர்பில் குற்றப்புலனாய்வுப்பிரிவு நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டுவரும். அதன்பின்னர் நீதிமன்றம் உரிய தீர்மானங்களை மேற்கொள்ளும். 

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட சுரேஷ் சலே, இதற்கு முன்னைய சந்தர்ப்பங்களில் அச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் நடாத்தப்பட்டதைப் போன்றே நடாத்தப்படுகிறார். மாறாக அவர் அசாதாரணமான சித்திரவதைகளுக்கோ அல்லது மீறல்களுக்கோ உட்படுத்தப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget