பாராளுமன்றில் நேற்று போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை ஒடுக்குவது குறித்த பிரேரணையில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
குற்றங்களை ஒடுக்குவதில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர், பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஷானி அபேசேகர பெரும் பங்காற்றி வருவதாகவும், இன்று அவர் எதிர்க்கட்சியின் எதிரியாக மாறியுள்ளார் என்றும் ஜனாதிபதி இங்கு குறிப்பிட்டார்.
இதேவேளை, இலஞ்ச ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ரங்க திஸாநாயக்க, பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், அமைச்சர் ஆனந்த விஜேபால, சட்டமா அதிபர் திணைக்களத்தின் சார்பில் திலீப பீரிஸ் மற்றும் நீதிமன்றமும் இன்று எதிர்க்கட்சியின் எதிரிகளாக மாறியுள்ளதாக ஜனாதிபதி கூறினார்.
இன்று நியாயம், நீதி, ஜனநாயகம் மற்றும் நல்லாட்சி என்பவற்றை எதிர்க்கட்சியால் தாங்கிக்கொள்ள முடியாமல் உள்ளது. அரசுக்குள்ளே இருந்து கொண்டு, அரச அனுசரணையுடன் குற்றங்கள் இழைக்கப்பட்டிருந்தால், அந்த குற்றவாளிகளை வெளிப்படுத்தக் கூடாதா? அது நாட்டை காட்டிக்கொடுப்பதா? அது தேசத்துரோகமா? இல்லை, அது ஒரு நாகரீகமான அரசை கட்டியெழுப்பும் நோக்கமாகும். எமது அரசை நாம் ஒரு நாகரீகமான அரசாக மாற்ற வேண்டும்.
நமது நாடு ஒரு ஊழல் நிறைந்த அரசாக இருந்தது. எமது இராணுவம், புலனாய்வுப் பிரிவினர் மீதான கௌரவம், பாராட்டு மற்றும் விசுவாசம் எமக்கு உள்ளது. ஆனால், எமது இராணுவமும் புலனாய்வுப் பிரிவினரும் நாட்டின் பாதுகாப்புக்காகவும், மக்களின் பாதுகாப்புக்காகவும் அர்ப்பணிப்புடன் செயலாற்றும்போது, அவர்கள் எங்கேனும் அநீதிக்குள்ளானால் நாம் அவர்களுக்காக முன்னிற்போம்.
உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் மக்களின் பாதுகாப்புக்காகவும், நாட்டின் பாதுகாப்புக்காகவும் இராணுவமும் புலனாய்வுப் பிரிவும் செயற்பட்டிருந்தால், அவர்களை எந்த இடத்திலும் பாதுகாக்கவும் கௌரவிக்கவும் நாம் கடமைப்பட்டுள்ளோம். அந்தப் பணியை நாம் செய்வோம்.
ஆனால், இராணுவத்திலோ அல்லது புலனாய்வுப் பிரிவிலோ உள்ள ஒரு சிறிய குழுவினர், ஏதேனும் ஒரு குடும்பத்தின் அதிகாரத்துக்காக அல்லது ஒரு அரசியல் முகாமின் அதிகாரத்துக்காக அரச தேவையின் பேரில் குற்றங்களைச் செய்திருந்தால், அவர்களுக்குரிய தண்டனையை வழங்க எமது அரசாங்கம் தயங்காது.
விசாரணைகளை மேற்கொள்ளும் அதிகாரிகளை யாராவது அச்சுறுத்தினால் அல்லது அழுத்தம் கொடுத்தால், அரசாங்கம் அவர்கள் சார்பில் முன்னிற்கும் என்றும், பொதுமக்களும் அவர்களுக்காக முன்வர வேண்டும் என்றும் தெரிவித்தார்.
காலத்தின் மணல் துகள்களால் இவை மூடிப்போகும் என்று சிலர் நினைத்தார்கள். அதற்கு நாங்கள் இடமளிக்க மாட்டோம். குற்றவாளிகளை முறையாக சட்டத்தின் முன் நிறுத்துவதே எமது கடமையாகும். விசாரணைகளை மேற்கொண்டு, கைது செய்து, சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஊடாக வழக்குத் தாக்கல் செய்து, நீதிமன்றத்தின் மூலம் நாம் அவர்களுக்குத் தண்டனை வழங்குவோம்.
போதைப்பொருள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் வளர்வதற்கு அரசியல் அதிகாரமே துணையாக இருந்துள்ளது. இந்த விவகாரங்களுக்காக அரசியல் அதிகாரம் வழங்கும் அனைத்துப் பாதுகாப்புகளையும் நாம் முற்றிலும் ஒழிப்போம்.
யாரும் இதனை அரசியல் பழிவாங்கல் என்று கூற வேண்டாம். எமக்கு எதற்காக அதிகாரம் வழங்கப்பட்டது? ஒரு பாரிய மக்கள் ஆணை இருந்தது. அதற்குள் ஒரு சாராம்சம் இருந்தது. அதுதான் எமது அரசை நாகரீகமான ஒன்றாக மாற்றுவதாகும். பாராளுமன்றம் நாகரீகமானதாக மாற வேண்டும்.
இந்த நாட்டுக்கு மீண்டும் நாகரீகத்தைக் கொண்டுவரும் பொறுப்பே எமக்கு வழங்கப்பட்டுள்ளது. பாராளுமன்றத்திற்குள்ளும், அரச நிறுவனங்களுக்குள்ளும், இவை அனைத்துக்குள்ளும் மீண்டும் நாகரீகத்தைக் கொண்டுவரும் போராட்டத்திலேயே நாம் ஈடுபட்டுள்ளோம் என்றார்.

Post a Comment