இந்த ஒட்டுமொத்தப் பாரிய சுமையையும் திறைசேரியால் மாத்திரம் தனித்துத் தாங்கிக்கொள்ள முடியாது. அவ்வாறு தாங்க முயன்றால் மீண்டும் மக்கள் மீது அதிக வரிகளை விதிக்க நேரிடும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ வாராந்த நேற்று ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எரிபொருள் விநியோகத்தைக் குறைக்கவோ அல்லது கட்டுப்படுத்தவோ இல்லை. நாட்டின் பொருளாதாரத்தை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டுமாயின் திறைசேரி, எரிபொருள் நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் ஆகிய மூன்று தரப்பினரும் இந்தச் சுமையைப் பகிர்ந்துகொள்ள வேண்டியது அவசியமானது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மசகு எண்ணெய் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட எரிபொருட்களின் விலைகள் உலக சந்தையில் சுமார் 70 சதவீதத்தால் கணிசமாக உயர்ந்துள்ளன. இந்த உலக சந்தை விலை அதிகரிப்பு காரணமாக, தற்போதைய உள்நாட்டு விற்பனை விலையின்படி, பெற்றோலியக் கூட்டுத்தாபனம் டீசல் லீற்றர் ஒன்றுக்கு 358 ரூபா நஷ்டத்தை எதிர்கொள்கிறது. ஆர்.எம். பார்க் நிறுவனம் 346 ரூபாவும், சினோபெக் நிறுவனம் 186 ரூபாவும், ஏனைய நிறுவனங்கள் 194 ரூபாவும் டீசலுக்காக நஷ்டத்தைத் எதிர்கொள்கின்றன.
பெற்றோல் லீற்றர் ஒன்றுக்கு கூட்டுத்தாபனம் 23 ரூபாவும், ஆர்.எம். பார்க் நிறுவனம் 157 ரூபாவும், சினோபெக் 29 ரூபாவும், பிற நிறுவனங்கள் 38 ரூபாவும் நஷ்டமடைந்து வருகின்றன. இவ்வாறான நஷ்டத்துடனேயே நிறுவனங்களும், கூட்டுத்தாபனமும் தற்போது எரிபொருட்களை விற்பனை செய்கின்றன.
கடந்த ஏப்ரல் மாதத்தில் இந்த விலை அதிகரிப்பைக் கருத்திற் கொண்டு, மக்களுக்குச் சலுகை வழங்குவதற்காகப் திறைசேரியிலிருந்து 58,000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டது. இதன் மூலம் டீசல் லீற்றருக்கு 100 ரூபாவும், பெற்றோல் லீற்றருக்கு 20 ரூபாவும் சலுகையாக வழங்கப்பட்டது. அத்துடன் கடந்த மூன்று மாதங்களாக நிறுவனங்களும் இந்த நஷ்டத்தின் ஒரு பகுதியைத் ஏற்றுக் கொண்டன.
உலக சந்தையில் விலை அதிகரித்ததன் காரணமாக, எரிபொருள் இறக்குமதிக்கான எமது மாதாந்த செலவு பாரியளவில் உயர்ந்துள்ளது. ஜனவரியில் 126 மில்லியன் டொலராக இருந்த இறக்குமதிச் செலவு, மே மாதத்தில் 521 மில்லியன் டொலராக அதிகரித்துள்ளது. இந்த ஒட்டுமொத்த சுமையையும் திறைசேரியால் மாத்திரம் தாங்கிக்கொள்ள முடியாது என தெரிவித்தள்ளார்.
Post a Comment