ரூபா 136 கோடி மதிப்பீட்டில் வடக்கு மண்டல ரயில்வே இத்திட்டத்தை 2022 ஆம் ஆண்டு ஏப்ரலில் தொடங்கியது. 10 பெட்டிகளைக் கொண்ட இந்த அதிநவீன ரயில் ஒரே நேரத்தில் 2,600 பயணிகள் வரை பயணிக்கக் கூடியது. இது சுற்றுச்சூழலுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படுத்தாத பசுமை போக்குவரத்தை உறுதி செய்கின்றது.
ஹைட்ரஜன் ரயிலை வடிவமைக்கும் பணிகள் சென்னை பெரம்பூரில் உள்ள ரயில்பெட்டி தொழிற்சாலையில் நடைபெற்றன. பணிகள் முடிந்ததைத் தொடர்ந்து நடைபெற்ற சோதனை ஓட்டங்களைத் தொடர்ந்து, ரயிலை அறிமுகப்படுத்த ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்தது.
இந்நிலையில், நாட்டின் முதலாவது ஹைட்ரஜன் ரயிலை பிரதமர் மோடி இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஜேர்மனியில் முதன்முதலாக உலகின் முதல் ஹைட்ரஜன் பயணிகள் ரயில் 2018ஆம் ஆண்டில் இயக்கப்பட்டது. பின்னர் ஜப்பான், சீனா, அமெரிக்கா தங்கள் நாடுகளில் தயாரிக்கப்பட்ட ஹைட்ரஜன் ரயிலை இயக்கின என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ரயில் பாரம்பரிய டீசல் அல்லது மின்சார வயர்களுக்கு பதிலாக, அதிநவீன 1200 கிலோவாட் ஹைட்ரஜன் எரிபொருள் மின்கல தொழில்நுட்பத்தில் இயங்குகிறது. ரயில் வேகம் எடுக்கும்போது உந்துதலை தர லித்தியம் பெரோ பாஸ்பேட் பேட்டரிகளும், ரயில் வேகம் குறையும் போது பேட்டரியை தானாகவே ரீசார்ஜ் செய்யும் மறுஉருவாக்க தொழில்நுட்பமும் இணைக்கப்பட்டுள்ளன.

Post a Comment