மேல், வடமேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக இன்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
மகாவலி கங்கையை அண்டிய தாழ்நிலப் பகுதிகளுக்கு அடுத்த 48 மணித்தியாலங்களுக்கு வெள்ள அபாய அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
மகாவலி கங்கையின் மேல் நீரேந்துப் பகுதிகளில் கடந்த சில மணித்தியாலங்களில் பெய்த கடும் மழைவீழ்ச்சியால் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
மகாவலி கங்கை வடிநிலத்தின் உடுநுவர, உடபலாத, யடிநுவர, தொலுவ, கொத்மலை, பஸ்பாகே, கங்க இஹல கோரள, பஸ்பாகே கோரள, கங்கவட்ட கோரள, ஹாரிஸ்பத்துவ மற்றும் பாததும்புர ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட பொதுமக்கள் இது தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும், ஏற்படக்கூடிய வெள்ள நிலைமையிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் நீர்ப்பாசனத் திணைக்களம் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
நிலவும் சீரற்ற வானிலை காரணமாகக் களனி கங்கையை அண்மித்த பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட வௌ்ள அபாய எச்சரிக்கையும் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிவித்தல் 5 ஆம் திகதி காலை 11.30 மணி வரை செல்லுபடியாகும் என அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதனிடையே, அப்பகுதிகள் ஊடான உப வீதிகளில் பயணிக்கும் சாரதிகளும் அவதானமாக வாகனங்களைச் செலுத்துமாறு குறித்த அறிவித்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலவும் சீரற்ற வானிலையைக் கருத்திற்கொண்டு, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலுள்ள அனைத்து அரச பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
பேராதனைப் பல்கலைக்கழகத்தின் அனைத்து கல்விச் செயற்பாடுகளும் மற்றும் பரீட்சைகளும் மறுஅறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.
மத்திய மலைநாட்டுப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழை மற்றும் வெள்ளப் பெருக்கு காரணமாக மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்திற் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
.jpeg)
Post a Comment