நாட்டின் நீதித்துறையை வலுப்படுத்தி, பொதுமக்கள் எதிர்நோக்கும் நீதிமன்ற வழக்குகளின் காலதாமதம் மற்றும் செலவினங்களைக் குறைத்து விரைவான நீதியை வழங்குவதற்காகவே அரசியலமைப்புத் திருத்தங்களை அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) பொதுச் செயலாளர் ரில்வின் தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சியைப் பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் பூர்த்தியாகும் நிலையில், "ஈராண்டு ஆட்சி நாட்டுக்கு மாட்சி" எனும் தொனிப்பொருளில் நாடு முழுவதும் ஜனாதிபதியின் மக்கள் சந்திப்பின் இரண்டாவது கூட்டம் நேற்று களுத்துறை மாவட்ட பேருவளை பிரதேசத்தில் ஆரம்பமானது.
அக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் நீதித்துறையை வலுப்படுத்தவும், பொதுமக்கள் எதிர்நோக்கும் காலதாமதங்களையும், செலவினங்களையும் தவிர்த்து மிக விரைவாக நீதி வழங்கவுமே தற்போதைய அரசாங்கம் அரசியலமைப்புத் திருத்தங்களைக் கொண்டுவர முயற்சிக்கிறது.
மாறாக, கடந்த காலத்தில் தங்களது அதிகாரத்தை நீடித்துக்கொள்ளவும், ஜனாதிபதியின் பதவிக்காலத்தை வரம்பின்றி நீட்டிக்கவும் 18வது திருத்தத்தைக் கொண்டுவந்தவர்களும், 20வது திருத்தத்தின் மூலம் அதிகாரங்களை மேலும் அதிகரித்துக்கொண்டவர்களும்தான் இன்று அரசாங்கத்தின் மீது சர்வாதிகார முத்திரை குத்த முற்படுகின்றனர்.
மேலும், முன்னாள் பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்கவுக்கு எதிராக பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவந்து அவரைப் பதவியிலிருந்து அநியாயமாக வெளியேற்றியவர்கள் அன்று ஜனநாயகத்தைப் பற்றிப் பேசவில்லை.
ஜனநாயகத்தை மீறி நீதிபதிகளின் வீடுகளுக்கு முன்னால் சென்று கல்லெறிந்து கூச்சலிட்ட வரலாற்றைக் கொண்டவர்கள்தான் இன்று ஜனநாயகத்தைப் பற்றிப் பாடம் எடுக்கிறார்கள்.
தற்போது மேற்கொள்ளப்படும் கைது நடவடிக்கைகள் மற்றும் நீதிமன்ற வழக்குகள் யாவும் அரசியல் பலி வாங்கல்கள் அல்ல. மாறாக குற்றப் புலனாய்வுத் துறை மற்றும் இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழு போன்ற சுயாதீன நிறுவனங்கள் முறையான விசாரணைகளை நடத்தி, சாட்சியங்களைச் சேகரித்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கின்றனவே தவிர, அரசாங்கம் இதில் எங்குமே தலையிடுவதில்லை.
நீதிமன்றமே சந்தேகநபர்களை விளக்கமறியலில் வைப்பதையா அல்லது பிணையில் விடுவிப்பதையா என்பதைத் தீர்மானிக்கிறது. மாறாக, கடந்த காலத்தில் மகிந்த ராஜபக்ச தரப்பினர் தங்களது அரசியல் எதிரிகளைச் சட்டரீதியாகக் கையாள்வதைவிட்டுவிட்டு, லசந்த விக்ரமதுங்க, பிரகீத் எக்னலியகொடை போன்ற ஊடகவியலாளர்களைப் படுகொலை செய்தும், கடத்தியும், ஊடக நிறுவனங்களுக்குத் தீ வைத்ததுமே அவர்களது ஜனநாயகமாகக் இருந்தது. அவ்வாறான வரலாற்றைக் கொண்டவர்கள் என்று முழு நாட்டுக்குத் தெரியும்.
மேலும், இலங்கை வரலாற்றில் முதன்முறையாக ஒரு ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத்தேர்தல் முடிந்த பின்னரும் எந்தவொரு வன்முறைச் சம்பவமும், மனிதப் படுகொலைகளும் இன்றி அமைதியான முறையில் தேர்தல் வெற்றிகள் கொண்டாடப்பட்ட பெருமை தேசிய மக்கள் சக்தியையே சாரும்.
தேர்தல் வெற்றிகளின் போது எவரும் பட்டாசுகளைக் கொளுத்தியோ, வன்முறைகளில் ஈடுப்பட்டோ எவருக்கும் துன்புறுத்தல்களை வழங்கவில்லை. மாறாக, எதிர்கால சந்ததியினருக்கு முன்மாதிரியான ஜனநாயக அரசியல் கலாச்சாரத்தை இந்த அரசாங்கம் நாட்டுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.
தற்போதைய தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தது ஒரு கட்சியின் வெற்றிக்காக மட்டுமல்ல. பல தசாப்தங்களாகத் தாழ்த்தப்பட்டு, மாற்றத்தை எதிர்நோக்கியிருந்த சாதாரண மக்களின் நீண்ட கால எதிர்பார்ப்பின் வெளிப்பாடு இது. எனவே, இந்த அரசாங்கம் குறிப்பிட்ட ஒரு அரசியல் இயக்கத்திற்கு மட்டுமே சொந்தமானதல்ல. மாறாக, இந்நாட்டின் ஒட்டுமொத்த குடிமக்களுக்குமானது.
ஆட்சியைத் தேர்ந்தெடுத்ததோடு வாக்காளர்களின் பங்கு முடிந்துவிடுவதில்லை. வழக்கமான அரசியல் கலாச்சாரத்தில், மக்கள் வாக்களித்து ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுத்துவிட்டு அமைதியாக இருந்துவிடுவார்கள். குறைகளைச் சுட்டிக்காட்டுவதோடு தங்களது கடமை முடிந்துவிட்டதாக நினைப்பார்கள்.
ஆனால், இக்கூற்று அதற்கு மாற்றமாக, நாட்டைப் கட்டமைப்பதில் அரசாங்கத்துக்கு நிகரான சம பங்கு பொதுமக்களுக்கும் உண்டு என்பதை வலியுறுத்துகிறது. திட்டங்களைச் செயல்படுத்தும் பொறுப்பு அரசாங்கத்தினுடையது என்றாலும், அதற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவது மக்களின் பொறுப்பாகும்.
எனவே தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் 'க்ளீன் ஸ்ரீ லங்கா' போன்ற திட்டங்கள் மற்றும் கிராம மட்ட அபிவிருத்திகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுவதற்கு அரசாங்கத்தின் பொறிமுறைகளுடன் பொதுமக்களும் முழுமையான பங்களிப்பை வழங்க வேண்டும். நாட்டைத் தூய்மையாகவும் ஒழுக்கமிக்கதாகவும் மாற்றுவது அரசாங்கம் மாத்திரமன்றி, ஒவ்வொருவரின் கடமையாகும் என்றார்.

Post a Comment