அதன்படி, சுமார் ஒரு வருடத்துக்கு முன்னர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துவதற்கும், தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கு மற்றும் சமத்துவமின்மை என்பவற்றை முடிவுக்குக்கொண்டுவருவதற்கும் தற்போதைய அரசாங்கத்துக்கு வலுவான மக்களாணை வழங்கப்பட்டிருப்பதாகச் சுட்டிக்காட்டினார்.
அவரது விஜயத்தின் பின்னர் சுமார் ஒரு மாதகாலத்துக்குள் நடைபெற்ற ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரின்போது இலங்கையில் மனித உரிமைகள், நீதி மற்றும் பொறுப்புக்கூறல் என்பன உறுதிசெய்யப்பட வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தப்பட்டது என பிரதி உயர்ஸ்தானிகர் தெரிவித்தார்.
அதேவேளை 2006ஆம் ஆண்டு இடம்பெற்ற கிழக்கு பல்கலைக்கழ உபவேந்தரின் படுகொலை விசாரணைகளை அடுத்து அரசியல்வாதி ஒருவர் கைதுசெய்யப்பட்டமை மற்றும் உயிர்த்த ஞாயிறுதினப் பயங்கரவாதத் தாக்குதல்கள் விசாரணைகளின் நீட்சியாக அரச புலனாய்வுப்பிரிவின் முன்னாள் பிரதானி கைதுசெய்யப்பட்டமை என்பன உள்ளடங்கலாக சில முக்கிய வழக்குகளில் முன்னேற்றம் எட்டப்பட்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அதேபோன்று நாட்டில் இனவாதத்துக்கு எவ்வகையிலும் இடமில்லை என்றும், இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வுக்கே முன்னுரிமை அளிக்கப்படும் என்ற ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் கூற்று தொடர்பில் வரவேற்பை வெளிப்படுத்திய அவர், இருப்பினும் நாட்டில் ஆழமான கட்டமைப்பு ரீதியான மறுசீரமைப்புக்கள் மேற்கொள்ளப்படவேண்டியிருப்பதாகத் தெரிவித்தார்.
அத்தோடு, 2009ஆம் ஆண்டு முடிவுக்குக்கொண்டுவரப்பட்ட ஆயுதமோதல் இடம்பெற்ற காலப்பகுதியில் அரச படையினராலும், தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினராலும் நிகழ்த்தப்பட்ட மீறல்கள் தொடர்பில் இன்னமும் பொறுப்புக்கூறல் உறுதிப்படுத்தப்படவில்லை. முக்கிய வழக்குகள் குறித்த குற்றவியல் விசாரணைகள் தொடர்ந்து தாமதமடைகின்றன. ஏற்கனவே அளிக்கப்பட்ட வாக்குறுதிக்கு அமைவாக சட்டமா அதிபர் திணைக்களத்திலிருந்து வேறுபட்ட சுயாதீன வழக்குத்தொடுநர் அலுவலகம் இன்னமும் ஸ்தாபிக்கப்படவில்லை என்றும் பிரதி உயர்ஸ்தானிகர் கரிசனை வெளியிட்டார்.
மேலும் பயங்கரவாதத்தடைச்சட்டம் தொடர்ந்து பிரயோகிக்கப்படுவதாகவும், இதன் விளைவாக நியாயமான வழக்கு விசாரணை, முறையான நீதிமன்ற மேற்பார்வை என்பன உள்ளடங்கலாக நபர்களின் அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாகவும் சுட்டிக்காட்டிய அவர், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பாதிக்கப்பட்ட தரப்பினர், அவர்களது குடும்பத்தினர், சிவில் செயற்பாட்டாளர்களை இலக்குவைத்து கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடர்வதாகவும் தெரிவித்தார்.
அதேபோன்று. அண்மைய காலங்களில் பல்வேறு பகுதிகளிலும் மனிதப்புதைகுழிகள் கண்டறியப்பட்டுள்ள நிலையில், காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் மீது மக்கள் நம்பிக்கை இழந்திருப்பதுடன், வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கு என்ன நேர்ந்தது என்ற கேள்வி இன்னமும் பதிலின்றித் தொடர்வதாகவும் பிரதி உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டார்.
இவ்வாறானதொரு பின்னணியில் காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் மீது மக்களின் நம்பிக்கையை மீளக்கட்டியெழுப்பும் வகையில் அதனைப் பலப்படுத்தவேண்டும் என வலியுறுத்திய அவர், யுத்தகாலத்தில் இடம்பெற்ற பாலியல் வன்முறைகள் தொடர்பில் தாம் வெளியிட்ட அறிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரித்தமை குறித்து கரிசனையை வெளிப்படுத்தினார்.
அத்தோடு 2026 ஆம் ஆண்டுக்கான வரவு, செலவுத்திட்டத்தின் பிரகாரம் நாட்டின் வருமானத்தில் 82 சதவீதமானவை ஏற்கனவே பெற்ற கடன்களை மீளச்செலுத்துவதற்காக ஒதுக்கப்பட்டுள்ளன. எனவே சுகாதாரம், கல்வி மற்றும் இயற்கை அனர்த்தங்களால் சீர்குலைந்த நாட்டை மீளக்கட்டியெழுப்புதல் என்பவற்றுக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்படாமை தீவிர கரிசனைக்குரிய விடயமாகும். இவ்விடயங்களுக்கும், குறிப்பாக மலையக சமூகத்தின் மேம்பாட்டுக்குமான நிதி ஒதுக்கீடு அவசியமாகும்.
மேலும் இதயசுத்தியுடனான நீதி, பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்க செயன்முறைக்கு அவசியமான ஒத்துழைப்பை வழங்குவதற்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை தயாராக இருக்கிறது என்றும் அவர் உறுதியளித்தார்.
.jpeg)
Post a Comment