Ads (728x90)

கடந்த இரண்டு ஆண்டுகளில் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் உட்பட போதைப்பொருட்களுடன் தொடர்புடைய 574,000 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொதுப் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

நிகவெரட்டியவில் நேற்று நடைபெற்ற மக்கள் பேரணியில் உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

அத்துடன், நாட்டில் சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்தும் மற்றும் மக்களின் உயிரைப் பாதுகாக்கும் ஒரு நடவடிக்கையாக, குற்றவாளிகளிடம் சட்டவிரோதமாக இருந்த 3,980 துப்பாக்கிகள் அரசாங்கத்தால் பொறுப்பேற்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

நாட்டில் சீர்குலைந்திருந்த சட்டத்தின் ஆட்சியை மீண்டும் நிலைநாட்டி, மக்களின் பணத்தை வீணாக்கிய கடத்தல்காரர்களுக்கு எதிராக தராதரம் பாராது கடுமையாகச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

குற்றங்கள் மற்றும் நிதி முறைகேடுகள் தொடர்பான அனைத்து விசாரணைச் செயற்பாடுகளையும் மிகவும் திறம்பட முன்னெடுப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இனிமேல் சட்டத்திலிருந்து தப்பிப்பதற்கு எந்தவொரு மோசடிக்காரருக்கும் அல்லது கடத்தல்காரருக்கும் இடமளிக்கப்பட மாட்டாது என்றும், விசாரணை அமைப்புகளை வலுப்படுத்தி அந்தச் செயற்பாடுகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், நாட்டின் நீதித்துறை அமைப்பில் தேங்கிக் கிடக்கும் சுமார் 11 லட்சம் வழக்குகளை விரைவாக முடிவுக்குக் கொண்டுவருவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.

நீதித்துறைச் செயற்பாடுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், நீதிமன்றங்களின் எண்ணிக்கையையும் நீதிபதிகளின் எண்ணிக்கையையும் அதிகரிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதற்கு மேலதிகமாக, வழக்கு விசாரணைகளின் காலத்தைக் குறைத்து மக்களுக்கு விரைவான நிவாரணங்களை வழங்கும் நோக்கில், நீதிமன்றங்களில் வழக்குகள் விசாரிக்கப்படும் நேரத்தையும் அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.


 

Post a Comment

Recent News

Recent Posts Widget