Ads (728x90)

எரிபொருள் விலையை இந்த மாதத்தின் இறுதி வரை அதிகரிக்காமல் தற்போதைய விலையிலேயே பேண முடியும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா தெரிவித்துள்ளார். 

இன்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். 

எதிர்பார்க்காத பெரிய பிரச்சினைகள் ஏதும் ஏற்படாவிட்டால், எதிர்வரும் மூன்று மாதங்களுக்கும் தற்போதைய எரிபொருள் விலை மற்றும் விநியோக நிலையைத் தொடர்ச்சியாகப் பேண முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். 

தனியார் எரிபொருள் நிறுவனங்கள் விநியோகத்தைக் குறைத்துள்ளமையால் சில பிரதேசங்களில் தற்காலிக எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் எனச் சுட்டிக்காட்டிய அவர், இத்தகைய நிலைமை ஏற்படக்கூடிய 62 பகுதிகள் சுமார் மூன்று வாரங்களுக்கு முன்பே அடையாளம் காணப்பட்டு, அந்தப் பகுதிகளுக்கு கூடுதல் எரிபொருளை விநியோகிக்க குறித்த நிறுவனங்களுடன் உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். 

எனவே, நாட்டில் எரிபொருள் தொடர்பில் பாரிய நெருக்கடி எழுவதற்கு வாய்ப்பில்லை எனக் குறிப்பிட்ட அவர், வீண் வதந்திகளை நம்பிக் கலக்கமடைந்து எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசைகளில் காத்திருக்க வேண்டாம் என பொதுமக்களிடம் அவர் கேட்டுக்கொண்டார். 

தனியார் நிறுவனங்களின் நிரப்பு நிலையங்களில் தட்டுப்பாடு அல்லது நீண்ட வரிசைகள் காணப்பட்டால், அருகிலுள்ள இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் நிரப்பு நிலையங்களுக்குச் செல்லுமாறும், அங்கு போதியளவு எரிபொருள் விநியோகிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். 


Post a Comment

Recent News

Recent Posts Widget