இச்சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கு முன்னர் பல்வேறு தரப்பினருடன் கலந்துரையாடி, பரந்துபட்ட மீளாய்வை முன்னெடுக்குமாறு வலியுறுத்தியுள்ளது.
பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:
அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட முன்னைய வரைவுடன் ஒப்பிடுகையில், தற்போது முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் உள்வாங்கப்பட்டுள்ளன.
இருப்பினும் ஏற்கனவே நடைமுறையில் உள்ள பயங்கரவாதத் தடைச்சட்டம் மற்றும் அதனைப் பதிலீடு செய்வதற்காக முன்னர் முன்மொழியப்பட்ட ஏனைய பயங்கரவாத எதிர்ப்புச்சட்டங்களில் காணப்பட்ட பல குறைபாடுகள் இச்சட்டமூலத்திலும் உள்ளடங்குவது தீவிர கரிசனைக்குரிய விடயமாகும்.
குறிப்பாக பயங்கரவாதக் குற்றங்கள் எனும் பதம் பரந்துபட்ட அடிப்படையிலும் போதிய தெளிவின்றியும் வரையறுக்கப்பட்டிருத்தல், கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரம் மற்றும் ஏனைய சிவில் நடவடிக்கைகளைப் பாதிக்கும் வகையிலான மட்டுப்பாடுகள், நிர்வாகத் தடுப்புக்காவல், போதிய நீதித்துறை மேற்பார்வையின்மை, கைதுசெய்வதற்கும் சோதனைகளை நடாத்துவதற்குமான பரந்துபட்ட அதிகாரங்கள், நிறைவேற்றதிகாரத்தின்வசம் மட்டுமீறிய தன்னிச்சையான அதிகாரங்கள், சித்திரவதைகள் மற்றும் மிகமோசமாக நடாத்தப்படுவதிலிருந்து போதிய பாதுகாப்பின்மை, நியாயமான விசாரணைகள் மற்றும் தீர்வுகள் என்பன ஆழமான கரிசனைகளைத் தோற்றுவித்துள்ளன.
பயங்கரவாதம் மற்றும் அதனுடன் தொடர்புடைய குற்றங்கள் சட்டபூர்வ நியமங்களுக்கு உட்பட்ட விதத்திலும், தெளிவானதும், குறுகியதுமான வகையிலும் வரையறுக்கப்படவேண்டும். அதேபோன்று எந்தவொரு பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமும் கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரம், அமைதியான முறையில் ஒன்றுகூடுதல், சங்கம் அமைத்தல், மதம் மற்றும் நம்பிக்கை சுதந்திரம், பொது நிகழ்வுகளில் பங்கேற்பதற்கான சுதந்திரம் என்பவற்றை உறுதிப்படுத்தும் வகையில் போதிய பாதுகாப்பினைக் கொண்டிருக்கவேண்டும். அத்தோடு எந்தவொரு கட்டுப்பாடும் சட்ட நியமங்களுக்கு உட்பட்டதாகவும், நியாயமானதாகவும் இருக்கவேண்டும்.
அதேவேளை தற்போது முன்மொழியப்பட்டுள்ள சட்டமூலத்தில் நிர்வாகத் தடுப்புக்காவல் தொடர்ந்து முக்கியத்துவம் பெறுவது குறித்து மிகுந்த கவலையடைகிறோம். சிவில் சுதந்திரத்தைப் பாதிக்கக்கூடிய எந்தவொரு நடவடிக்கையும் உடனடியானதும், முறையானதுமான நீதித்துறைக் கண்காணிப்புக்கும், மீளாய்வுக்கும் உட்படுத்தப்படவேண்டும்.
அடுத்ததாக நீதிமன்ற அனுமதியின்றி கைது, சோதனையிடல், பறிமுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு முப்படையினர் மற்றும் கரையோரக் காவல் படையினருக்குப் பரந்துபட்ட அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. நீதிமன்ற அனுமதியின்றி மேற்கொள்ளப்படும் இவ்வாறான நடவடிக்கைகள் அவசர மற்றும் விதிவிலக்கான சந்தர்ப்பங்களில் குறுகியகால அடிப்படையில் மாத்திரமே நடைமுறைப்படுத்தப்படவேண்டும்.
இவ்வாறானதொரு பின்னணியில் இந்தச் சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு முன்னர், இதுபற்றி சிவில் சமூக அமைப்புக்கள், சுயாதீன கட்டமைப்புக்கள், சட்ட நிபுணர்கள் உள்ளிட்ட பரந்துபட்ட தரப்பினருடன் கலந்துரையாடி, மீளாய்வொன்றை மேற்கொள்ளுமாறு இலங்கை அரசாங்கத்தை ஊக்குவிக்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment