Ads (728x90)

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களை தடுத்தல் சட்டமூலத்தை கண்டு பாதாளக்குழுக்கள் தான் அச்சமடைய வேண்டும். பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏன் அச்சமடைகிறார்கள் என்று தெரியவில்லை என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடுகள் அமைச்சின் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களை தடுத்தல் சட்டமூலம் உருவாக்கப்பட்டதை தொடர்ந்து ஒருதரப்பினர் கலக்கம் அடைந்துள்ளார்கள். இந்த சட்டவரைவை தயாரித்தது யார் என்று கேள்வியெழுப்புகிறார்கள்.

மேன்முறையீட்டு நீதியரசர் (ஓய்வுநிலை) லலித் ஜயசூரிய தலைமையிலான 09 பேர் அடங்கியே குழுவே இந்த சட்டவரைவை தயாரித்தது. இந்த சட்டமூலம் உயர்நீதிமன்றில் சவாலுக்கு உட்படுத்தப்பட்டது. நீதிமன்றமும் வியாக்கியானம் அளித்துள்ளது.

இந்த சட்டமூலத்தில் மூன்று பிரதான திருத்தங்களை உள்ளடக்குவதாக ஜனாதிபதி அறிவித்துள்ளார். அதேபோல் உயர்நீதிமன்றம் முன்வைத்த திருத்தங்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறான பின்னணியிலும் இந்த சட்டமூலத்தை பற்றிக் கொண்டு எதிர்க்கட்சியினர் ஏன் கலக்கடைகிறார்கள் என்று தெரியவில்லை.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களை தடுத்தல் சட்டமூலம் குறித்து எதிர்க்கட்சியினர் ஜனநாயக ரீதியில் யோசனைகளை முன்வைக்கலாம்.

நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் பயனடையும் வகையில் தான் சட்டங்களை இயற்றுகிறோம். இதில் எவ்வித அரசியல் நோக்கமும் எமக்கு கிடையாது. நீதிமன்ற கட்டமைப்பு தற்போது டிஜிட்டல் மயப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் நாட்டு மக்கள் பயனடைந்துள்ளார்கள் என்றார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget