
ஏமன் நாட்டின் தலைநகரான சனா உள்ளிட்ட பல்வேறு நகரங்கள் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களால் கைப்பற்றப்பட்டதால் அந்நாட்டில் உள்நாட்டு போர் உச்சகட்டத்தை அடைந்துள்ளது.
இதனால் அதிபர் அபெட் ரப்பு மன்சூர் ஹாதி, தலைநகர் சனாவிலிருந்து தலைமறைவானார். கிளர்ச்சியாளர்களை ஒடுக்க உதவுமாறு சவுதி அரேபியாவிற்கு வேண்டுகோள் விடுத்தார். ஹாதியின் வேண்டுகோளை ஏற்று ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் மீது சவுதி அரேபியா தலைமையிலான அரேபிய கூட்டுப்படைகள் வான்வழி தாக்குதலை தொடங்கியது.
இதில் கிளர்ச்சியாளர்கள் பலர் கொல்லப்பட்டதுடன், அவர்களின் முகாம்கள் குண்டுவீச்சில் அழிக்கப்பட்டன. கிளர்ச்சியாளர்களை அழிக்கும் முயற்சியில் நடத்தப்படும் தாக்குதல்களில் ஏராளமான அப்பாவி பொதுமக்களும் பலியாகி வருகின்றனர்.
இந்நிலையில், ஏமனின் துறைமுக நகரமான ஏடனின் வடக்கு சானா மற்றும் அம்ரான் மாகாணம் ஆகிய இடங்களில் நடைப்பெற்ற வான்வழி தாக்குதலில் மொத்தமாக 100 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் படுகாயங்களுடன் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Post a Comment