அன்பு என்பது பிறரை நேசிக்கச் செய்யும் பண்பு, அந்த நேசப் பண்பு அனைவரையும் அரவணைக்கும் பாசப் பண்பு. அதை மக்கள் என் மீது கொண்டதால்தான் நான் வைத்த வேண்டுகோளினை ஏற்று பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் என்னை ஆர்.கே.நகர் தொகுதியில் வெற்றி வாகைசூட வைத்துள்ளனர். 2016-ம் ஆண்டு பொதுத்தேர்தலுக்கு முன்னோட்டமாக இருக்கும் இந்த இடைத்தேர்தலில் என்னை மகத்தான வெற்றிபெற வைத்த மக்களுக்காக நான் உழைப்பேன். அவர்களின் எதிர்பார்ப்புகளை, தேவைகளை வசதிகளை நிறைவேற்றித்தர தொடர்ந்து அயராது பாடுபடுவேன்” என்று தேர்தல் முடிவுகள் வெளியான அன்று சொல்லியிருந்தார் ஜெயலலிதா.
இத்தனை ஆண்டுகளாகச் செய்யாததை இன்னும் ஓராண்டு காலத்தில் எப்படிச் செய்வார்கள் என்ற விமர்சனம் ஒரு பக்கம் இருக்க... அந்த மக்களின் தேவைகள் என்ன?
ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ-வும் முதல்வருமான ஜெயலலிதாவின் கனிவான கவனத்துக்கு...
1. இந்தத் தொகுதியின் பிரதான சாலைகள் அனைத்தும் சென்னை நகர்மயமானதற்கு முன்னரே போடப்பட்டவை. அதனால் மிகவும் குறுகலாக இருக்கின்றன.

2. தண்டவாளத் தீவுக்குள் இருக்கும் ஒரு மனிதக்காட்சி சாலைபோல இருக்கிறது கொருக்குப்பேட்டை. சுற்றி இருக்கும் எந்த ரயில்வே கேட்டுக்கும் சரியான பாதுகாப்பு இல்லை.
3. சென்னையையும் காசிமேட்டையும் இணைக்கும் சாலை கடந்த பல ஆண்டுகளாக கற்கள் பெயர்ந்து, தார் இல்லாமல் நாசமாகிக் கிடக்கிறது. நீங்கள் பிரசாரத்துக்கு அந்தப் பகுதி வழியே வரமாட்டீர்கள் என்பதால் அதை அப்படியே கேட்பாரற்று விட்டுவிட்டார்கள்.
4. கிடப்பில் போடப்பட்டு இருக்கும் குடிநீர்த் திட்டங்களான காசிமேடு பம்பிங் ஸ்டேஷன், திருவொற்றியூர் சாலை குடிநீர் குழாய் அமைக்கும் திட்டம் ஆகியவற்றை அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும். கடந்த 15 ஆண்டுகளில் புதிய குடிநீர்த் திட்டங்கள் போடப்படவே இல்லை.
5. கழிவுநீர்தான் பல சமயங்களில் குடிநீர் குழாயில் வருகிறது. தண்டையார்பேட்டை பகுதியில் கச்சா எண்ணெய் குடிநீருடன் கலந்து வந்தது பற்றி இதுவரை அரசு விசாரணை நடத்தி தீர்வு காணவில்லை. சுற்றி இருக்கும் பல்வேறு தொழிற்சாலைக் கழிவுகள், மனிதக் கழிவுகள் என கலந்துவருகிறது.

6. காசிமேடு, கொருக்குப்பேட்டை, எழில் நகர் பகுதிகளுக்கு குடிநீர் என்பதே லாரியில் வழங்கப்படும் மெட்ரோ நீர்தான். அதுவும் ஒழுங்கு இல்லாமல் நான்கு அல்லது மூன்று நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே. சந்தியா நகர் பகுதிக்கு மூன்று மாதங்களாக குடிநீர் சப்ளை இல்லை. நாகூரான் தோட்டம், பூண்டி தங்கம்மாள் நகர், செரியன் நகர் போன்ற பகுதிகளிலும் குடிநீர் தட்டுப்பாடு மிக அதிகம்.
7. பெரும்பாதிப்பை ஏற்படுத்துவது சுகாதாரப் பிரச்னையும், துர்நாற்றமும்தான். கொருக்குப்பேட்டை குப்பைக் கிடங்கு, கூவம் ஓரங்களில் தூர்வாரப்படாமல் கிடக்கும் பிளாஸ்டிக் குப்பைகள் என தொகுதியே குப்பை மயம்.
8. கொடுங்கையூரில் எரிக்கப்படும் குப்பைகளின் புகையினால் மூளை பாதிக்கப்பட்ட குழந்தைகள் பலர் உள்ளனர். இளம்பிள்ளை வாதம், மஞ்சள் காமாலை, புற்றுநோய் என பாதிப்புக்குள்ளான மக்கள் அதிகம் இருக்கின்றனர். இவர்களை முதலில் கண்டறிந்து சிகிச்சையளிக்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்.
9. மாநகராட்சி சார்பில் நியமிக்கப்பட்டுள்ள பணியாளர்கள் சரியாக பணிசெய்வதில்லை. கூவத்தில் பன்றிகள் அதிகரித்துள்ளன. ஆகாயத்தாமரை அதிகமாகி விட்டிருக்கிறது.
10. மருத்துவ வசதிகளில் மிகவும் பின் தங்கியிருக்கிறது ஆர்.கே.நகர். ஆரம்ப சுகாதார நிலையங்களில்கூட சரியான வசதிகள் இல்லை. பல சுகாதார நிலையங்களில் மருத்துவர்களும் மருந்துகளும் இல்லை.

11. தண்டையார்பேட்டையில் இருக்கும் அரசு புறநகர் மருத்துவமனைக்குப் போதுமான மருத்துவர்கள் இல்லை. கருவிகள் பற்றாக்குறையாகவே உள்ளன. நோயாளிகளுக்கு சுத்தமான முறையில் குடிநீர் வழங்கப்படுவது இல்லை.
12. ரயில்வே கேட், மீனாம்பாள் நகர் பாலம் என பல வருடங்களாகக் கிடப்பில் கிடக்கும் திட்டங்களை உடனடியாகச் செயல்படுத்த வேண்டும். ரயில் தண்டவாளங்களை எந்தப் பாதுகாப்பும் இல்லாமல் கடப்பதால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு இதுவரை சரியான முறையில் நஷ்டஈடு தரவில்லை.
13. சமுதாயக்கூடங்களே அங்கு இல்லை. ஏற்கெனவே இருந்த பலவற்றை அம்மா உணவகங்களாகவும் அரசு அலுவலகங்களாகவும் மாற்றி வைத்திருக்கிறார்கள்.
14. அனைத்து நாடுகளிலும் துறைமுகத்தை ஒட்டியிருக்கும் பகுதிகளில்தான் தொழில் வளர்ச்சியும் உள்கட்டமைப்பு வசதிகளும் இருக்கும். ஆனால், ஆர்.கே.நகரில் தொழில் வளர்ச்சிக்கான எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை.
15. மீனவ மக்களுக்கு என வழங்கப்பட்ட குடியிருப்புகள் அனைத்தும் சிமென்ட் பெயர்ந்து, விரிசல்விட்டு மிகவும் மோசமான நிலையில் இருக்கின்றன. மீன் கழிவுகள் அனைத்தும் ரோட்டிலேயே கொட்டப்பட்டு ஈயையும், கொசுவையும் அழையா விருந்தாளியாக்கி விருந்து வைத்துக்கொண்டிருக்கின்றன.
16. ஐ.ஓ.சி பெட்ரோலிய நிறுவனத்தை மக்களின் வீடுகளுக்கு நடுவில் வைத்து அழகு பார்த்துக்கொண்டிருக்கிறது அரசு. பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லை.
17. அடிப்படைக் கல்வி முதல் தொழிற்கல்வி வரை இந்தப் பகுதி மிகவும் பின் தங்கி இருக்கிறது. உயர்ப்பள்ளிகள் எண்ணிக்கை மிகவும் குறைவு. இடை நின்ற மாணவர்களின் எண்ணிக்கையும் மிக அதிகம். அவர்களை மீண்டும் பள்ளிகள் சேர்க்க பள்ளிக்கல்வித் துறை மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

18. தொகுதியில் ஒரு தொழிற்கல்வி பயிற்றுவிக்கும் கல்லூரிகூட இல்லை. அதனாலேயே அங்கு படித்த இளைஞர்களின் எண்ணிக்கை குறைவு.
19. கடலோரப் பகுதிகளில் குற்றவாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் இரவு நேரங்களில் அங்கு வழிப்பறி, கொள்ளை, கொலை போன்ற குற்றச் செயல்களும் கணக்கில்லாமல் நீண்டு வருகின்றன.
20. ஆர்.கே.நகருக்குப் பேருந்து வசதிகள் மிகவும் குறைவு. அங்கிருந்து சென்னையின் மற்ற இடங்களுக்குத் தினமும் வேலை, பள்ளி, கல்லூரிகளுக்கு அதிக அளவில் மக்கள் வந்து செல்லும்போது காலை மற்றும் மாலை நேரங்களில் பேருந்து நெரிசல் சமாளிக்க முடியாதவை.
21. மகப்பேறு நிதியுதவி, முதியோர் உதவித்தொகை, திருமணத்துக்கு தங்கத் தாலி திட்டம் போன்றவற்றில் இந்தத் தொகுதி மக்களில் பலன் அடைந்தவர்கள் குறைவுதான்.
22. முறைசாரா கூலித்தொழிலாளர்கள் அதிகம் வாழும் பகுதி சென்னையிலேயே இந்தத் தொகுதி தான். ஆனால், அவர்கள் தங்களைப் பதிவு செய்துகொள்ளக்கூடிய அலுவலகம் அண்ணா நகரில் இருக்கிறது.
23. தாசில்தார் அலுவலகத்தில் சான்றிதழ் பதிவு செய்வதற்குக்கூட லஞ்சம் கேட்கும் அதிகாரிகள் மீது புகார் அளித்தும் அவர்கள் நடவடிக்கையில் இருந்து தப்பித்து வருகிறார்கள். அங்கு பணி செய்யும் அலுவலர்களின் எண்ணிக்கையும் மக்கள் தொகைக்கு ஏற்ப இல்லை.
24. குடிசைப் பகுதி மாற்று வாரியங்களில் குடியிருக்கும் மக்களுக்கு பட்டா வழங்கிட ஏற்பாடு செய்ய வேண்டும்.
25. பள்ளிகளுக்கு அருகில் மற்றும் மக்கள் குடியிருப்புகளுக்கு அருகே இயங்கிக்கொண்டிருக்கும் மதுக் கடைகளை அகற்ற வேண்டும்.
இதற்காகப் பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் அதிகாரிகள் அலட்சியமாக இருக்கக் காரணம் அவற்றுக்கு ஆதரவு அளித்துவரும் ஆளும் கட்சியினர். ஆனால், இனியும் கட்சியின் தலைவரே, இந்தத் தொகுதியில் இருந்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னரும் அப்படியே இயங்கினால் அது அடுத்த பொதுத்தேர்தலுக்கு இந்த வெற்றி ஒரு முன்னோட்டம் என்று சொல்லியிருக்கக்கூடிய முதல்வரின் ஆட்சிக்கு அழகா? ஆபத்தா?
இதற்காகப் பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் அதிகாரிகள் அலட்சியமாக இருக்கக் காரணம் அவற்றுக்கு ஆதரவு அளித்துவரும் ஆளும் கட்சியினர். ஆனால், இனியும் கட்சியின் தலைவரே, இந்தத் தொகுதியில் இருந்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னரும் அப்படியே இயங்கினால் அது அடுத்த பொதுத்தேர்தலுக்கு இந்த வெற்றி ஒரு முன்னோட்டம் என்று சொல்லியிருக்கக்கூடிய முதல்வரின் ஆட்சிக்கு அழகா? ஆபத்தா?
Post a Comment