Ads (728x90)

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து: ரூ.1 கோடிக்கு மேல் ஏலம் போன சுனில் சேத்ரி, லிண்டோ

.பி.எல். கிரிக்கெட் பாணியில் நடைபெறும் 8 அணிகள் இடையிலான 2-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டித் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் வருகிற அக்டோபர் 3-ந் தேதி முதல் டிசம்பர் 20-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்காக ஒவ்வொரு அணியும் 13 உள்நாட்டு வீரர்களை தேர்வு செய்ய வேண்டும். ஒரு அணியில் 22 முதல் 26 வீரர்கள் வரை இடம் பெறலாம். வெளிநாட்டு வீரர்களை விலைக்கு வாங்க ரூ.15.50 கோடியும், உள்நாட்டு வீரர்களை சொந்தமாக்க ரூ.5.50 கோடியையும் ஒரு அணி செலவிட முடியும்.

ஐ.எஸ்.எல். போட்டியையொட்டி முதல்முறையாக வீரர்களின் ஏலம் மும்பையில் நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் போட்டி அமைப்பாளரும், தொழில் அதிபருமான நிதா அம்பானி, இந்தி நடிகர்களும், அணி உரிமையாளர்களுமான ருத்திக் ரோஷன், ரன்பீர் கபூர், ஜான் ஆபிரகாம், முன்னாள் கால்பந்து நட்சத்திரங்கள் ஜிகோ, கார்லோஸ் (இருவரும் பிரேசில்), மெட்டராசி (இத்தாலி) உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்திய அணியை சேர்ந்த 10 வீரர்கள் மட்டும் ஏலத்தில் விடப்பட்டனர்.

இதில் இந்திய கால்பந்து அணியின் கேப்டனும், 87 சர்வதேச போட்டியில் விளையாடி 40 கோல்களுக்கு மேல் அடித்தவருமான சுனில் சேத்ரி அதிகபட்சமாக ரூ.1 கோடியே 20 லட்சத்துக்கு ஏலம் போனார். அவரது அடிப்படை விலை ரூ.80 லட்சம் ஆகும். அவரை விலைக்கு வாங்க டெல்லி டைனமோஸ், மும்பை சிட்டி எப்.சி. அணிகள் இடையே மட்டுமே போட்டி நிலவியது. இறுதியில் மும்பை சிட்டி அணி சுனில் சேத்ரியை ஏலத்துக்கு எடுத்தது.

ஐ-லீக் போட்டி ஒப்பந்தத்தில் இருந்து விடுவிக்கப்படாததால் சுனில் சேத்ரி உள்பட சில வீரர்களால் முதலாவது ஐ.எஸ்.எல். போட்டியில் விளையாட முடியாமல் போனது. இந்தியாவின் நட்சத்திர வீரரான 30 வயதான சுனில் சேத்ரி அதிக விலைக்கு ஏலம் போவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் மிகவும் குறைந்த விலைக்கே ஏலம் போனார். இது குறித்து சுனில் சேத்ரியிடம் கருத்து கேட்ட போது ‘கடந்த 13 ஆண்டுகளாக நான் உயர்தர போட்டிகளில் விளையாடி வருகிறேன்.

அதிர்ஷ்டவசமாக என்னிடம் போதிய அளவு பணம் உள்ளது. இதனால் குறைந்த விலைக்கு ஏலம் போனதில் எனக்கு ஏமாற்றம் இல்லை. பணம் எனக்கு முன்னுரிமை இல்லை. கால்பந்து விளையாட வேண்டும் என்பதே எனது விருப்பமாகும்’ என்று பதிலளித்தார். நடுகள வீரர் இகென்சன் லிண்டோ ரூ.1 கோடியே 5 லட்சத்துக்கு ஏலம் போனார். அவரை 6 அணிகள் போட்டி, போட்டு ஏலத்தில் எடுக்க முயற்சித்தன. கடைசியில் எப்.சி.புனே சிட்டி அணி அவரை தட்டிச் சென்றது.

தனக்கு விதிக்கப்பட்ட அடிப்படை விலையான ரூ.27.50 லட்சத்தில் இருந்து 3 மடங்கு அதிகமாக லிண்டோ ஏலம் போய் ஆச்சரியம் அளித்தார். பின்கள வீரர் ரினோ அன்டோ வியப்பளிக்கும் வகையில் ரூ.90 லட்சத்துக்கு நடப்பு சாம்பியன் அட்லெடிகோ டீ கொல்கத்தா அணியால் வாங்கப்பட்டார். நடுகள வீரர் தோய்சிங் ரூ.86 லட்சத்துக்கு சென்னையின் எப்.சி. அணியாலும், அரடா இசுமி ரூ.68 லட்சத்துக்கு அட்லெடிகோ டீ கொல்கத்தா அணியாலும், கரன்ஜித்சிங் ரூ.60 லட்சத்துக்கு சென்னையின் எப்.சி. அணியாலும், செய்தியாசென் சிங் ரூ.56 லட்சத்துக்கு நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியாலும், ராபின் சிங் ரூ.51 லட்சத்துக்கு டெல்லி டைனமோஸ் அணியாலும், ஜாக்கிசந்த் சிங் ரூ.45 லட்சத்துக்கு புனே சிட்டி அணியாலும், அனாஸ் எடாதோதிகா ரூ.41 லட்சத்துக்கு டெல்லி டைனமோஸ் அணியாலும் ஏலத்தில் எடுக்கப்பட்டனர்.

இதுவரை 8 அணிகளும் மொத்தம் 64 வீரர்களை தக்கவைத்து கொள்ளுதல் மற்றும் பரிமாற்றம் அடிப்படையில் ஒப்பந்தம் செய்துள்ளன. ஏலத்தில் விடப்படாத 114 வீரர்களை ஒவ்வொரு அணியும் தேர்ந்தெடுத்தல் முறையில் பகிர்ந்து கொள்ளும். அவர்களுக்கு குறிப்பிட்ட தொகை அடிப்படை விலையாக முடிவு செய்து வழங்கப்படும்

Post a Comment

Recent News

Recent Posts Widget