Ads (728x90)



விருச்சிகம்
(விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய)

விருச்சிக ராசி அன்பர்களே!

கோட்சாரப்படி, குரு 05-07-2015 முதல் உங்கள் ராசிக்கு 10-ல் உலா வருகிறார். குரு 10-ல் வந்தால் சிவபெருமான் பட்ட சிரமத்தை அடைவார்கள் என்று ஜோதிட நூல்களில் உள்ளது. அதாவது சிவபெருமானுக்கு 10-ல் குரு வந்தபோது அவர் திருவோடுகூட இல்லாமல், மண்டையோட்டில் இரந்துண்டு வாழ்ந்ததாகக் கூறுவார்கள். பூவுலகில் மக்களுக்கு அந்த அளவுக்கு கஷ்டத்தை இறைவன் தரமாட்டார். சிவபெருமானைப் பொறுத்த அளவில் கஷ்டத்தை அனுபவிப்பாரே தவிர, தான்பட்ட கஷ்டங்களை மற்றவர்களுக்குத் தரமாட்டார். இப்போது நீங்கள் எந்த காரியத்திலும் மிகவும் எச்சரிக்கையாகச் செயல்பட வேண்டும். மருத்துவச் செலவுகள் வரும். பெற்றோர்கள் தொந்தரவு கூடுதலாகும். எனவே நீங்கள் மிகவும் பக்குவமாக நடந்துகொள்ள வேண்டும். உடன்பிறந்தவர்கள் உங்களுக்கு சாதகமாக இருக்க மாட்டார்கள். அவர்களின் மறைமுக செயல்பாடுகளை கவனித்து நீங்கள் செயல்பட வேண்டும். நண்பர்கள் சகவாசத்தைக் குறைத்துக்கொள்ள வேண்டும். அவர்கள் உங்களை மோசடி செய்வதில் ஆர்வமாக இருப் பார்கள். அவர்களின் முகஸ்துதி பேச்சுக்கு மயங்கிவிடக்கூடாது. சகோதரர்கள் மத்தியில் இருந்துவந்த சொத்துப் பிரச்சினை தீர்வுக்கு வரும். உறவினர்கள் உங்களுக்கு உதவியாக இருக்கமாட்டார்கள். உங்களின் செயல்பாடுகளை அவர்களிடம் சொல்லாதீர்கள். உங்கள் சொந்த பந்தங்களாலும் பிரச்சினைகளை அனுபவிக்க உள்ள நேரம். அசதியும், ஆயாசமும் குறுக்கிடும். கட்டடம், வீடு வகையில் கூடுதல் செலவுகள் வரும். நிதானமான போக்கைக் கடைப்பிடித்தால் சிரமத்தை வெல்லலாம். உங்களின் காரியங்கள் அனைத்திலும் மிகவும் எச்சரிக்கையாகச் செயல்பட வேண்டும்.

தொழிலதிபர்கள், சொந்த வியாபாரம் செய்பவர்கள் கூடுதலான லாபத்தைப் பெறுவார்கள். சொந்தத் தொழில்புரிபவர்களும், கூட்டாக தொழில் செய்கின்றவர்களும், வெளிநாடு சென்று தொழில் செய்து லாபம் சேர்க்கின்றவர்களும் இந்த குருப்பெயர்ச்சியில் அதிக லாபத்தைப் பெறுவார்கள். அரசுப்பணியாளர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வுகள் வந்துசேரும். வேலை பார்ப்பவர்களிடம் எச்சரிக்கையாகப் பழக வேண்டும். நினைத்த காரியங்கள் கைகூடும். எந்த காரியத்தை எடுத்தாலும் அதில் முடிவில் உங்களுக்கு வெற்றியாகும். எனவே அச்சமின்றி வேலை களைச் செய்யவேண்டும். இந்த குருப்பெயர்ச்சி காலத்தை கஷ்டமானதாக நினைக்கக் கூடாது. மற்றவர்களைப் பற்றி நீங்கள் புரிந்துகொள்ள வைப்பார் குருபகவான். உறவுகளில் எத்தனை பொல்லாத மனிதர்கள் உள்ளனர் என்பதை நீங்கள் தெளிவாகத் தெரிந்துகொள்வீர்கள்.

05-07-2015 முதல் 23-08-2015 வரை குரு, கேது சாரத்தில் நேர்கதியில் உலா


இந்த காலகட்டத்தில் உங்களது அனைத்து காரியங்களும் சிறப்பாக நடக்கும். ஆதாயமும் கிட்டும். கவலைகள் மறந்து சிரிப்பீர்கள். அரசாங்க காரியங்களில் நன்மைகள் நடக்கும். வெளிநாடு சென்று வேலை செய்ய விரும்பும் இளைஞர்கள் வெளிநாடு செல்லலாம். நீங்கள் உறவுகளிடம் சிரித்து வாழ்வதை விட சிந்தித்து வாழவேண்டும். சேமிப்பு உயரும். நீண்ட காலமாக தொல்லை கொடுத்துவந்த கடனை படிப்படியாக அடைப் பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சிக் குறைவு இருக்காது. பொன், பொருள் வாங்க போட்ட திட்டம் நிறைவேறும். சுபகாரிய நிகழ்ச்சிகள் கைகூடும். தாய்- தந்தையர் உதவியாக இருப்பார்கள். ஒருசிலர் வேலைசெய்யும் இடத்தில் பாராட்டு பெறத்தக்க காரியங்களைச் செய்து சாதனை செய்வார்கள்.

24-08-2015 முதல் 27-10-2015 வரை குரு, சுக்கிரன் சாரத்தில் நேர்கதியில் உலா


குடும்பத்திலுள்ளவர்களின் தேவைகளைப் பூர்த்திசெய்வீர்கள். உறவினர்கள் மத்தியில் இருந்துவந்த இறுக்கமான மனநிலை மாறும். உதவியாகச் செயல்படுவார்கள். திருமணமாகாத பிள்ளைகளுக்கு, உறவுகளிலேயே வரன் வந்துசேரும். அப்படி செய்யும்போது அவர்கள் பழைய பகைமையைத் தீர்க்க பெண் எடுக்கிறார்களா என்று யோசித்துச் செய்யவேண்டும். வாக்கு ஸ்தானம் வலுவாகி உள்ளது. ஜோதிடம், குறி சொல்பவர்கள் வாக்கு பலிதத்தால் புகழ்பெறுவார்கள். கணவன்- மனைவி உறவில் விரிசல் வராது. மனைவியின் உடல்நிலையில் மட்டும் ஏற்ற இறக்கம் காணப்படும். அவருக்கு நல்ல வைத்தியம் செய்யவேண்டும். வேலைதேடும் இளைஞர்கள் தகுதிக்கேற்ப வேலைவாய்ப்பை அடைவார்கள். உடன்பிறந்தவர்களுக்கு நீங்கள் கொடுத்து உதவுவீர்கள். அரசுப் பணியில் உள்ளவர்கள் மிகவும் எச்சரிக்கையாகப் பணிபுரிய வேண்டும்.

28-10-2015 முதல் 15-01-2016 வரை குரு, சூரியன் சாரத்தில் நேர்கதியில் உலா


செய்யும் தொழிலில் நல்ல விருத்தி ஏற்படும். உடலில் பிணி, பீடைகள் அகலும். புதிய திட்டங்கள் தீட்டி அதன்படி தொழில்செய்வீர்கள். தொழிலாளர்கள் ஒற்றுமை ஏற்படும். அவர்களால் உற்பத்தி பெருகும். லாபமும் கூடும். கணவன்- மனைவி ஒற்றுமையுண்டு. பிரிந்த தம்பதியர் ஒன்றுசேர்வார்கள். குழந்தையில்லாத ஒருசில தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும். குடும்பத் தேவைகள் படிப்படியாகப் பூர்த்தியாகும். பிள்ளைகள் வழியில் கல்விச் செலவு கூடும். இப்போது நீங்கள் மிகவும் வைராக்கியத்துடன் செயல்படுவீர்கள். அந்நிய மதத்தவர், அந்நிய மொழியினரால் நல்ல உதவிகள் கிட்டும். பிள்ளைகள் வெளிநாடு செல்ல போட்ட திட்டம் நிறைவேறும். நீண்டகாலமாக அடைபடாத கடனை இப்போது அடைத்துமுடிப்பீர்கள். பூர்வீக சொத்துக்களில் உள்ள பிரச்சினை முடிவுக்கு வரும்.

16-01-2016 முதல் 07-02-2016 வரை குரு, சூரியன் சாரத்தில் வக்ரம்


இந்த காலகட்டத்தில் நீங்கள் எதிலும் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். முயற்சியால் மட்டுமே காரியங்கள் கைகூடும். குரு 10-ல் உள்ள நிலையில் காரியங்கள் தாமதமாக வெற்றியைத் தரும். பிள்ளைகளிடம் எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதமாகலாம். கணவன்- மனைவிக்குள் சிறுசிறு பிணக்குகள் வந்துசெல்லும். வாகனம் செலுத்துபவர்கள் வேகத்தை குறைத்து நிதானமாகச் செல்லவேண்டும். சிறு விபத்துகள் ஏற்படலாம். உயிர்ச் சேதம் எதுவும் வராது. பேச்சில் கடுமையைக் குறைத்து, கனிவாகப் பேசி காரியங்களை சாதிக்கவேண்டும். மாணவர்கள் கல்வியில் அதிக முயற்சிகளுக்குப் பின்பு கூடுதல் மதிப்பெண் பெறுவார்கள். பெண் பிள்ளைகள் வைத்திருப்பவர்கள் அவர்களின் போக்கை கண்காணிக்கவேண்டும். வெளிநாடு போக போட்ட திட்டம் தாமதமாகும்.

08-02-2016 முதல் 14-06-2016 வரை குரு, சுக்கிரன் சாரத்தில் வக்ரம்


உங்களுடன் பணிபுரியும் நண்பர்களிடம் அளவோடு பழகவேண்டும். குறிப்பாக கறுப்புநிறம் உள்ளவர்கள் உங்களுக்கு எதிராக செயல் படுவார்கள். அவர்களிடம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அரசு வேலையை எதிர்பார்த்திருக்கும் ஒருசிலர் நல்ல பதவிகளை அடைவார்கள். சிக்கனமாக வாழ்ந்து குடும்பச் செலவுகளைப் பூர்த்திசெய்யலாம். வழக்குகள் சாதகமாக உள்ளன. வக்கீல் தொழில் புரிபவர்கள் புதிய வழக்குகளை எடுத்து நடத்துவார்கள். கூடுதல் லாபமும் வந்துசேரும். தொழிலாளர்களுக்கு வேலைப்பளு கூடும். தொழிலாளர்- முதலாளி ஒற்றுமை சுமுகமாகும். ஒருசில இளைஞர்கள் வெளிநாடு சென்று வேலைவாய்ப்பை பெறுவார்கள். திருமணப் பேச்சு கைகூடி வரும். விவசாயிகள் புதிய பயிர்களை விதைத்து கோடை காலத்தில் பலன்களை அடைவார்கள். புதிய வீடுகட்ட போட்ட திட்டம் நிறைவேறும். எதிர்பார்த்த அரசாங்க கடன் வந்துசேரும்.

15-06-2016 முதல் 09-07-2016 வரை குரு, சுக்கிரன் சாரத்தில் உலா


இந்த காலகட்டத்தில், இதற்கு முன்னர் இருந்துவந்த பணமுடைகள் நீங்கும். விலகிச்சென்ற சொந்தங்கள் வந்துசேரும். அந்நிய மதத்தவர், அந்நிய மொழியினரால் உதவிகள் உண்டு. சகோதரர்கள் மத்தியில் இருந்துவந்த சொத்துப் பிரச்சினை சுமுகமான தீர்வுக்கு வரும். வழக்கை கைவிட்டு, பேச்சு வார்த்தைமூலம் சொத்துப் பிரிவினையை சுமுகமாக செய்து கொள்வார்கள். தொழில் துறைகளில் இதுவரை தொல்லை கொடுத்துவந்த போட்டியாளர்கள் விலகிச்செல்வார்கள். அரசு ஊழியர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வும், மாறுதலும் சற்று தாமதமாகும். ஒரு சிலர் கண் சம்பந்தப்பட்ட வியாதிகளை அடைவார்கள். அதற்கான மருத்துவமும் செய்வார்கள். கூடுதல் செலவுகள் ஏற்படும். கணவன்- மனைவி ஒற்றுமையைப் பேணவேண்டும். அருகில் உள்ளவர்களிடமும் உங்கள் மனக்குறைகளைக் கூறக்கூடாது. ரகசியம் காக்கவேண்டும். பிரிந்த தம்பதியர் ஒன்றுசேர்வார்கள்.

10-07-2016 முதல் 01-08-2016 வரை குரு, சூரியன் சாரத்தில் உலா


இப்போது தடைப்பட்ட காரியங்கள் அனைத்தும் சிறப்பாக நடக்கும். வீட்டில் சுபகாரியப் பேச்சுகள் கைகூடும். நல்ல வரன்களாக அமையும். இதுவரை தொல்லை கொடுத்துவந்த எதிரிகள் விலகிச்செல்வார்கள். எதிர்பார்த்ததைவிட லாபம் கூடுதலாக வரும். எப்போதும் வேலைப் பளுவை சந்தித்த உங்களுக்கு இப்போது அது குறையும். அரசு ஊழியர்கள் எதிர்பார்த்தபடி மாறுதலையும், பதவி உயர்வையும் அடையலாம். பணிபுரியும் இடத்தில் அனைவரும் உங்கள் ஆலோசனைகளைக் கேட்பார்கள். வீடுகட்ட முன்பணம் கிடைக்கும். அதிகாரிகள் ஆதரவுண்டு. வியாபாரிகள் எதிர்பார்த்தபடி கொள்முதல் சரக்குகளில் கூடுதல் லாபத்தைப் பெறுவார்கள். வாகனம் வாங்க போட்ட திட்டம் நிறைவேறும். மனைவியின் நேசம் கூடுதலாகும். மனைவியின் யோசனைகள் பயனுள்ளதாக அமையும். ஆண் வாரிசு இல்லாத தம்பதி யர்கள் ஆண் வாரிசை அடைவார்கள். பிரிந்த மகன் இப்போது பெற்றோரைத் தேடிவருவார்.

அரசு ஊழியர்கள்


குரு பகவான் உங்கள் ராசிக்கு 10-ல் உள்ளார். எனவே வேலைப்பளு கூடுதலாகும். வேலைபார்க்கும் இடத்தில் உங்கள் மனக் குறைகளை யாரிடமும் சொல்லாதீர்கள். அவர்கள் உங்களைப் பற்றி மேலதிகாரிகளிடம் கோள்சொல்வார்கள். அதிகாரிகள் கெடுபிடியாகவே இருப்பார்கள். வரவேண்டிய நிலுவைத் தொகையும், பதவி உயர்வும் தாமதமாக வந்துசேரும். தற்காலிகப் பணிநீக்கம் போன்ற தண்டனையை அடைந்தவர்களில் ஒருசிலர் சிபாரிசு இல்லாமலேயே மீண்டும் வேலைவாய்ப்பைப் பெறுவார்கள். சுபகாரிய நிகழ்ச்சிகள் வீட்டில் தடையின்றி நடக்கும்.

வியாபாரிகள்


வியாபாரிகள் இப்போது கூடுதலான லாபத்தைப் பெறுவார்கள். புதிய வாடிக்கையாளர்கள் வந்துசேர்வார்கள். இதுவரை உங்களுக்கு தொல்லை கொடுத்துவந்த போட்டி வியாபாரிகள் விலகிச் செல்வார்கள். வியாபாரிகள் திட்டமிட்டபடி புதிய கிளைகளைத் துவக்குவார்கள். நல்ல வேலையாட்களும் அமைவார்கள். ஸ்டாக் உள்ள சரக்குகள் அனைத்தும் வியாபாரமாகிவிடும். சொசைட்டி மூலம் வியாபாரம் செய்யும் அன்பர்கள் எப்போதும் விழிப்போடு செயல்படுவது நல்லது.

தொழிலாளர்கள், தொழிலதிபர்கள்


தொழிலதிபர்கள் புதிய பங்குதாரர்களை அடைவார்கள். பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பர். தொழிலாளர்கள் - தொழிலதிபர்கள் ஒற்றுமை சீராக இருக்கும். தொழிலாளர்களின் ஊதிய உயர்வு, போனஸ் தடையின்றி வந்துசேரும். பேச்சுவார்த்தைக்கு வேலையில்லை. தொழிலாளிகளின் வேலைப்பளு கூடுதலாகும். உடன் பணிபுரியும் பணியாளர்கள் உங்களுக்கு சாதகமாகவே செயல்படுவார்கள். உங்கள் வீட்டில் நீங்கள் திட்ட மிட்டபடி சுபகாரியப் பேச்சுகள் கைகூடி வரும். முதலாளிகள் நூதனமான பொருட்களைத் தயாரிப்பதற்கு முனைந்து வெற்றியும் பெறுவார்கள்.

பெண்கள்


பெண்கள் இப்போது மகிழ்ச்சியுடன் இருப்பார்கள். தொட்ட காரியம் அனைத்தும் சீராகும். தொல்லை கொடுத்து வந்தவர்கள் விலகிச் செல்வார்கள். மாமியார் - மருமகள் புரிந்து நடப்பார்கள். குடும்பத்தில் ஒற்றுமை கூடும். ஆடம்பரப் பொருட்கள், பொன், பொருள் வாங்க போட்ட திட்டம் நிறைவேறும். கணவன்- மனைவி உறவில் விரிசல் வராது. விலகி வாழும் தம்பதியர் ஒன்றுசேர்வார்கள். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு நல்ல குழந்தை பிறக்கும். குழந்தைகள் பிறந்து குடும்பத்தில் யோகத்தை அள்ளித் தரும். வாழ்க்கையில் எண்ணியபடி புதியவீடு கட்டுவார்கள். ஒருசிலருக்கு அரசாங்க பதவி தேடிவரும். கணவன்- மனைவியிடையே உள்ள பிரச்சினைகள் தீரும்.

மாணவர்கள்


மாணவர்கள் மந்தகதி மாறி கல்வியில் உயர்வார்கள். சக நண்பர்களும் கூட்டாளிகளும் உங்கள் படிப்புக்கு உறுதுணையாக இருப்பார்கள். திட்டமிட்டபடி உயர்கல்விக்குச் செல்வார்கள். வேண்டிய கல்விக் கடனும் உடனடியாகக் கிடைக்கும். தொழிற்கல்வியில் உள்ள இறுதி ஆண்டு மாணவர்கள் கேம்பஸ் செலக்ஷனில் தேர்வுபெறுவார்கள். கல்வி முடிந்த பின்பு ஒருசிலர் அயல்நாடு சென்று படிக்க போட்ட திட்டம் நிறை வேறும். காதலில் ஈடுபடும் மாணவர்கள் கஷ்டத்தை அடைவார்கள். தேவையற்ற சண்டை, சச்சரவு, மருத்துவச் செலவுகள் வரும். எனவே காதலை விலக்கி, கல்வியில் உயரவேண்டும்.

கலைஞர்கள்


வீட்டில் முடங்கிக் கிடந்த உங்களுக்கு புதிய வாய்ப்புகள் வந்துசேரும். பொருளாதார நிலையும் உயரும். பிரபலமான நடிகர்களில் ஒருசிலர் ஹோட்டல் தொழில் நடத்த முன்வருவார்கள். அதில் நல்ல லாபத்தையும் பெறுவார்கள். வெளிநாடு சென்று படப்பிடிப்புகளில் கலந்துகொள்ளும் வாய்ப்பும் ஏற்படும். கலைமாமணி விருது எதிர்நோக்குபவர்களுக்கு வந்து சேரும். அரசாங்க சலுகை உண்டு. பட அதிபர்கள் வங்கிக் கடன் பெற்று படத்தைத் தயாரிப்பார்கள். அது வெற்றிப்படமாக அமையும்.

விவசாயிகள்

இந்த வருடம் முழுவதும் விவசாயத்தில் கூடுதல் வருவாயைப் பெறுவீர்கள். பணப் பயிர்களைப் பயிரிட்டு அதிக லாபம் பெறலாம். புகையிலை பயிரிடுபவர்கள் எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு, கூடுதல் உற்பத்தியைப் பெறுவார்கள். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். விவசாய நிலம் சம்பந்தமாக இருந்துவந்த வழக்குகள் சாதகமாகும். இப்போது நீங்கள் கிணறு, போர் போட்டு எல்லா பலன்களையும் அடைவீர்கள். நல்ல ஊற்று கிடைக்கும். மற்றவர்கள் சொத்துகளை வாங்க போட்ட எண்ணம் நிறைவேறும்.

அரசியல் பிரமுகர்கள்


அரசியல் பிரமுகர்கள் மிகவும் தன்னடக்கத்துடன் செயல்பட்டு காரிய வெற்றிகளை அடையலாம். தலைமையால் பாராட்டப்பட வேண்டும் என்பதற்காக, எதிலும் வேகமாக செயல்படக் கூடாது. அரசியல் எதிரிகள் அதிகம் உள்ளனர். அவர்கள் உங்களுக்கு எதிராக உள்வேலைகளைச் செய்வார்கள். எதிலும் தீர யோசித்து முடிவுசெய்ய வேண்டும். அதிகமான முயற்சிக்குப் பிறகே சிறிய பதவிகளையாவது பெறமுடியும். அரசியல் பிரமுகர்கள் எதிலும் நிதானத்துடன் செயல்பட்டு பொருளாதாரத்தை தக்கவைத்துக் கொள்ளலாம்.

விசாக நட்சத்திரக்காரர்களுக்கு:


தொழில் துறைகளில் உள்ளவர்கள் கூடுதல் லாபத்தைப் பெறுவார்கள். புதிய முயற்சிகள் அனைத்தும் காலதாமதமாக பலிதமாகும். வெளிநாடு செல்லும் திட்டம் நிறைவேறும். கூட்டுத் தொழில் புரிவோர் கூடுதல் லாபத்தைப் பெறுவார்கள். அரசு ஊழியர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வும், பணிமாறுதலும் கிட்டும். உடல்நிலையில் எப்போதும் மருத்துவச் செலவுகள் உண்டு. வாகனங்களில் மிகவும் எச்சரிக்கையாகச் செல்ல வேண்டும். விபத்துகளைத் தவிர்க்கலாம். பெற்றோர் வழியில் உடல்நலக் குறைவுகள் ஏற்படலாம். மருத்துவச் செலவுகள் கூடும். சிலரது பெற்றோர்கள் தேவையற்ற குழப்பங்களை குடும்பத்தில் செய்து வருவார்கள். எனவே நிதானித்துச் செல்லவேண்டும். தொழில் சிறப்பு உண்டு. வருவாயும் உண்டு. 70 சதவிகித லாபம் கிடைக்கும்.

அனுஷ நட்சத்திரக்காரர்களுக்கு:

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கஷ்டத்தையே அதிகம் கொண்டவர்கள். உங்கள் சுய ஜாதகத்தில் கன்னி வீட்டில் செவ்வாய் அமர்ந்துள்ளதா என்று பாருங்கள். அப்படிப்பட்ட ஜாதகம் அமைந்தவர்கள் திருச்செந்தூர் சென்று கடலில் நீராடி ஈரஉடையுடன் முருகனை தரிசித்து, கொடிமரத்தினருகே, "கன்னிச் செவ்வாய் தீமை மாறவேண்டும்' என்று வேண்டி வர, அனைத்தும் சிறப்பாகும். தொழில் நடத்தி வருபவர்கள் ஓரளவு லாபத்தோடு வியாபாரத்தைச் செய்வீர்கள். தெய்வ அருளும் உண்டு. யாருக்கும் எதையும் வாக்கு கொடுக்கக்கூடாது. ஜாமீன் போடக் கூடாது. மற்றபடி தொல்லைகள் எதுவுமில்லை. 75 சதவிகித நன்மையுண்டு.

கேட்டை நட்சத்திரக்காரர்களுக்கு:


கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எந்த காரியத்தையும் சுய சிந்தனையுடன் செய்வார்கள். இவர்களில் ஒருசிலர் மட்டும் கஷ்டத்தை அனுபவிப்பார்கள். மற்றவர்கள் பொருளாதார உயர்வோடு வாழ்வார்கள். கணவன்- மனைவி இடையே இருந்துவந்த கருத்து வேறுபாடு நீங்கும். குடும்பத்திலுள்ளவர்கள் தேவையினைப் பூர்த்திசெய்வீர்கள். ஒருசிலர் புது வீடுகட்டி குடிபோவார்கள். பூமியால் நன்மையுண்டு. ரியல் எஸ்டேட் தொழில் செய்கின்றவர்கள் கூடுதல் லாபத்தைப் பெறுவார்கள். குதர்க்கமான பேச்சுகளைப் பேசிவந்த உங்கள் பிள்ளைகள் இப்போது நல்லவர்களாக வளர்வார்கள். கல்வியில் உயர்வார்கள். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. ஒருசிலர் மருத்துவம் சம்பந்தப்பட்ட தொழிலுக்குச் செல்வார்கள். மாணவ, மாணவியர் டி-பார்ம், பி-பார்ம், நர்சிங் படிப்புகளை மேற்கொள்ள வேண்டும். இந்தப் படிப்பு அவர்களுக்கு பிற்காலத்தில் பெரும் பயனுள்ளதாக இருக்கும். நீங்கள் செய்யநினைத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி பெறலாம். 70 சதவிகித லாபமுண்டு.

பரிகாரம்
 
குருபகவானையும், முருகப் பெருமானையும் வழிபட்டு வர கெடுதல் நீங்கி, நன்மைகள் கூடும். ஆலயம் செல்ல முடியாதவர்கள் 27 கொண்டைக்கடலை எடுத்து அதனை மஞ்சள் துணியில் முடிந்து பர்சில் அல்லது பையில் அல்லது தொழில்கூடத்தில் வைத்துக் கொண்டால் லாபங்கள் குறையாது. 

Post a Comment

Recent News

Recent Posts Widget