துலாம்
(சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)
(சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)
துலா ராசி அன்பர்களே!
குரு பகவான் உங்கள் ராசிக்கு 11-ல் வருகின்றார். எனவே இந்த வருட குருப்பெயர்ச்சிக் காலம் முழுவதும் நன்மையான பலன்களை அடையலாம். இதுவரை தொல்லை கொடுத்துவந்த உறவுகள் விலகிச் செல்வார்கள். மருத்துவ சிகிச்சை மேற்கொண்ட அன்பர்கள் மேலும் சிகிச்சை தொடருமோ என்று பயந்த நிலை மாறும். உடல் ஆரோக்கியம் சீராகும். கடந்த காலத்தில் கைகூடாத உங்கள் எண்ணங்கள் அனைத்தும் இப்போது காரிய வெற்றியாக மாறும். ஒவ்வொரு நிலையிலும் உயர்வான நிலைப்பாட்டை நீங்கள் அடைவீர்கள்.
குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களின் எண்ணம் ஈடேறும். புதிய ஆடை, ஆபரணங்களை வாங்கிச்சேர்ப்பீர்கள். இப்போது உங்கள் செயல்பாடுகள் அனைத்திலும் வெற்றியைக் காண்பீர்கள். தாய்- தந்தையர் உடல்நிலையில் இருந்துவந்த சிரமங்கள் குறையும். மருத்துவச் செலவுகள் அறவே இல்லாமல் போகும். சகோதரர்கள் மட்டும் உங்கள் சொல்லுக்குக் கட்டுப்படமாட்டார்கள். சகோதாரர்கள் உங்களைச் சுரண்டிச்செல்ல திட்டமிடுவார்கள். எனவே நீங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். அண்டை, அயலாரிடம் எதிர்பார்த்த உதவிகள் வந்து சேரும். கொடுக்கல்- வாங்கல் நன்மையைச் செய்யும். பாக்கிகள் யாவும் வந்து சேரும். இதுவரை குடும்பத்தில் தடைப்பட்ட சுபகாரியம் யாவும் கைகூடும். நல்ல வரன்கள் அமையும். வாகன வசதிகள் கூடும். ஒருசிலர் புதிய வீடுகட்டிக் குடிபோவார்கள். தொழிலதிபர்கள் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். அரசாங்கத்தில் எதிர்பார்த்த நன்மைகளும், கடனும் வந்துசேரும். காணாமல்போன பொருட்கள் கிடைக்கும். ஒருசிலருக்கு திருட்டுப்போன பொருட்கள் கிடைக்கும். இந்த குருப்பெயர்ச்சி உங்களுக்கு பொற்காலம்.
05-07-2015 முதல் 23-08-2015 வரை குரு, கேது சாரத்தில் நேர்கதியில் உலா
இந்த காலகட்டத்தில் எல்லா வகையிலும் நல்ல பலன்களாக நடக்கும். உடல்நிலை சீராகவே இருக்கும். முன்புபோல மருத்துவச் செலவுகள் வராது. நீங்கள் சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். எடுத்துக்கொண்ட காரியம் அனைத்திலும் வெற்றியையும் லாபத்தையும் பெறுவீர்கள். அண்டை, அயலார் உறவில் விரிசல் வராது. விலகிச்சென்ற சொந்தங்கள் வந்துசேரும். வீட்டு வசதிகளைப் பெருக்கிக்கொள்வீர்கள். தொழிலதிபர்கள், புதிய பங்குதாரர்கள் வரவால் அதிக லாபம் பெறுவார்கள். கணவன்- மனைவி உறவில் விரிசல் வராது. பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் உண்டு. நீண்டகாலமாக குழந்தையில்லாத தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். உங்கள் உடன்பிறந்த சகோதரிகள் உங்களுக்கு ஆதரவாக இருக்கமாட்டார்கள். எனவே அவர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.
24-08-2015 முதல் 27-10-2015 வரை குரு, சுக்கிரன் சாரத்தில் நேர்கதியில் உலா
இப்போது வெளிநாட்டுத் தொடர்புகள் கூடும். அந்நிய நாடு செல்ல நினைத்தவர்கள் திட்டமிட்டபடி வெளிநாடு செல்வார்கள். உடல்நிலை சீராகவே இருக்கும். அந்நிய மதத்தவர், அந்நிய மொழியினரால் நல்ல பலன்களை அடைவீர்கள். எதிர்பாராத வகையில் பணவரவுகள் இருக்கும். பொன், பொருள் வாங்க போட்ட திட்டம் நிறைவேறும். கணவன்- மனைவி உறவு சிறப்பாக இருக்கும். குடும்பத்துடன் வெளியூர்களுக்கு சென்று வருவீர்கள். குலதெய்வ கோவிலுக்கு சென்றுவர போட்ட திட்டம் நிறைவேறும். போட்டியாக இருந்துவந்த வியாபாரிகள் விலகிச் செல்வார்கள். வழக்குகள் சாதகமாகும். பணவசதிக்கு குறைவில்லை. ஏமாற்றுபவர்களை அடையாளம் கண்டு விலகிச்செல்வீர்கள்.
28-10-2015 முதல் 15-01-2016 வரை குரு, சூரியன் சாரத்தில் நேர்கதியில் உலா
இந்த காலகட்டத்தில் செய்யும் காரியமனைத்திலும் வெற்றியைக் காண்பீர்கள். உடல்நிலை எப்போதும் போல் சீராகவே இருக்கும். அதேசமயம் வரவைவிட செலவு கூடுதலாக இருக்கும். எனவே சிக்கனத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். அரசு ஊழியர்களுக்கு வருவாய் கூடுதலாகும். வரவேண்டிய பதவி உயர்வு வந்துசேரும். ஊதிய உயர்வும் கிட்டும். குழந்தையில்லாத தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். ஒரு சிலர் இரட்டைக் குழந்தை பெறுவார்கள். குடும்பத்திலுள்ள உறுப்பினர்கள் அனைவரும் மகிழ்ச்சியோடு இருப்பார்கள். இதுவரை தொல்லை கொடுத்துவந்த மனைவி தன் நிலையறிந்து, எல்லாருக்கும் நல்லவராகச் செயல்படுவார். விலகிச்சென்ற சொந்தங்கள் மீண்டும் வந்து சேரும். பிள்ளைகளுக்கு நல்ல வரன்கள் அமையும். சுபகாரியம் தடை யின்றி முடியும். பொதுமக்கள் சேவையில் உள்ளவர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள்.
16-01-2016 முதல் 07-02-2016 வரை குரு, சூரியன் சாரத்தில் வக்ரம்
இந்த காலகட்டத்தில் விலகிச்சென்ற சொந்தங்கள் வந்துசேரும். பெற்றோர்கள், பிள்ளைகளுக்கு கொடுக்கவேண்டிய பாகத்தை பிரித்துக் கொடுப்பார்கள். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உங்கள் வேண்டுதல்கள் அனைத்தும் உடனுக்குடன் நிறைவேறும். கொடுக்கல்- வாங்கலில் இருந்துவந்த மந்தநிலை மாறும். தொல்லை கொடுத்துவந்த சகோதர- சகோதரிகள் இப்போது உங்களுடன் நேசமாக இருப்பார்கள். அரசு ஊழியர்கள் எதிர்பார்த்தபடி பதவி உயர்வும், பணி இடமாற்றமும் வந்துசேரும். தற்காலிகப் பணிநீக்க தண்டனையை அடைந்தவர்கள், மீண்டும் பணியில் சேர்ந்திட வாய்ப்புகள் கூடிவரும். தொழிலதிபர்கள் எதிர்பார்த்த புதிய ஒப்பந்தம் வந்துசேரும். அரசாங்கத்தில் எதிர்பார்த்த கடன் கிடைக்கும். நல்ல தொழிலாளர்கள் கிடைப்பார்கள். அதேபோல வியாபாரிகளும் கூடுதல் லாபத்தை அடைவார்கள். உங்களின் இளைய பிள்ளைகளை கண்காணித்து வரவேண்டும். இல்லையெனில் கெட்ட பெயர் வந்துசேரும்.
08-02-2016 முதல் 14-06-2016 வரை குரு, சுக்கிரன் சாரத்தில் வக்ரம்
நண்பர்கள் உங்களுக்கு மிகவும் உதவிகரமாக இருப்பார்கள். உடல்நிலையில் எந்த பாதிப்பும் வராது. காரிய பலிதம் உண்டு. கான்ட்ராக்ட் தொழில் செய்கின்றவர்கள் கூடுதல் லாபத்தைப் பெறுவார்கள். அதேநேரத்தில் வண்டியில் பயணம்செய்யும்போது மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். வீடுகட்ட போட்ட திட்டம் நிறைவேறும். நீண்டகாலமாக பிரிந்துவாழ்ந்த தம்பதிகள் ஒன்று சேர்வார்கள். கடன் தொல்லைகள் குறையும். ஒருசிலருக்கு வேலைவாய்ப்பு கைகூடும். மாணவர்கள் கல்வியில் உயர்ந்து வருவார்கள். குரு வக்ரம் பெற்றுள்ள இந்த நேரத்தில் திருமணப் பேச்சுகள் கூடாது. நண்பர்களும் உறவினர்களும் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள்.
15-06-2016 முதல் 09-07-2016 வரை குரு, சுக்கிரன் சாரத்தில் உலா
செய்யும் தொழில்கள் அனைத்தும் கைகூடி வரும். கூடுதல் லாபத்தையும் அளிக்கும். அரசாங்க ஊழியர்கள் கூடுதல் வருவாயைப் பெறுவார்கள். பெற்றோரும், உடன்பிறந்தவர்களும் இப்போது உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். அரசுப் பணியாளர்கள் அதிக வேலைப்பளுவை சந்தித்த நிலை இப்போது மாறும். உயரதிகாரிகள் உங்களுக்கு சாதகமாக இருப்பார்கள். தொழிலதிபர்கள் நீண்டகாலமாக விற்பனையாகாத உற்பத்திப் பொருட்களை விற்று கூடுதல் லாபத்தையும் பெறுவார்கள். எதிர்பார்த்தபடி காரிய அனுகூலம் கிட்டும். ஒருசிலர் படிப்பிற்காக வெளிநாடு சென்றுவருவார்கள். பந்தயக் காளைகள் வளர்ப்போர் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அதனால் சிலர் கடும் மருத்துவச் செலவுகளை சந்திக்க நேரும். வியாபாரிகள் புதிய கிளைகளைத் துவங்குவார்கள். ஒரு சில மாணவர்கள் அயல்நாடு சென்று படிக்க போட்ட திட்டம் நிறைவேறும்.
10-07-2016 முதல் 01-08-2016 வரை குரு, சூரியன் சாரத்தில் உலா
இப்போது உங்கள் செயல்கள் அனைத்திலும் வெற்றியைக் காண்பீர்கள். பெற்றோர் வழியில் இருந்துவந்த சண்டை, சச்சரவுகள் நீங்கும். அவர்களது உடல்நலனும் சீராகும். நீண்டகாலமாக குழந்தையின்றி இருந்தவர்கள் தாய்மை அடைவார்கள். கணவன்- மனைவி உறவில் ஒற்றுமை கூடும். அரசு ஊழியர்கள் விரும்பிய இடத்துக்கு மாறுதலை அடைவார்கள். ஒருசிலர் பதவி உயர்வுடன் மாறுதலை அடைவார்கள். அதிகாரிகள் உங்களுக்கு ஆதரவாகச் செயல்படுவார்கள். மாணவர்கள் உயர் கல்விக்கு கேட்ட கல்விக்கடன் வந்துசேரும். படித்த இளைஞர்கள் வெளிநாடு சென்று பொருளீட்ட போட்ட திட்டம் நிறைவேறும். குடும்பத்தில் நீண்டகாலமாக முடிவுக்கு வராத பிரச்சினைகள் முடிவுக்கு வரும். தொல்லை கொடுத்துவந்த சகோதரிகள் இப்போது உங்களைவிட்டு விலகிச்செல்வார்கள். கூட்டுத் தொழில் செய்கின்றவர்கள் கூடுதல் லாபத்தைப் பெறுவார்கள். மலைப்பிரதேசம் சென்றுவர வாய்ப்புகள் அதிகம். நீண்டகாலமாக முடிவுக்கு வராத சொத்துப் பிரச்சினையில் சிலர், சுமுக முடிவுக்கு வந்துவிடுவார்கள். இழுபறியான வழக்குகள் சாதகமாக மாறும். விவசாயிகள் தன, தான்ய விருத்தி, மாடு, கன்றுகள், பால் பாக்கிய விருத்தியுடன் வாழ்வார்கள். உறவினர்களாலும், நண்பர்களாலும் கூடுதல் லாபம் உண்டு. அரசு ஊழியர்கள் பணிபுரியும் இடத்தில், உடன் பணிபுரிகின்றவர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். ஒருசிலர் வீடுவாங்க போட்ட எண்ணம் ஈடேறும். பிள்ளைகள் கல்வியில் உயர்ந்து வருவார்கள். பிரிந்துவாழும் தம்பதியர் ஒன்றுசேர்வார்கள். தீர்த்த யாத்திரை சென்று வரும் வாய்ப்பு ஒருசிலருக்கு கைகூடும். கைவிட்டுப்போன பொருட்கள் வந்துசேரும். பிரிந்துசென்ற பிள்ளைகளும் பெற்றோரைத் தேடி வருவார்கள்.
அரசு ஊழியர்கள்
உங்கள் மேலதிகாரிகள் ஆதரவுக்கரம் நீட்டுவார்கள். தள்ளிப்போன பதவி உயர்வு வந்துசேரும். விரும்பிய இடத்துக்கு மாறுதலும் கிட்டும். உங்கள் பிள்ளைகளுக்காக நீங்கள் செய்யும் முயற்சிப்படி அரசாங்க வேலை வந்துசேரும். புதிதாக வீடு கட்ட போட்ட திட்டம் நிறைவேறும். அதற்கு வேண்டிய கடனும் வந்துசேரும். வேலைபார்க்கும் இடத்திலுள்ள பெண்களிடம் நீங்கள் எச்சரிக்கையாகச் செயல்பட வேண்டும். பெண்களின் ஆதரவு உங்களுக்கு சாதகமாக இல்லை. உபரி வருமானங்கள் வந்துசேரும். திருமணமாகாத ஆண்- பெண் ஊழியர்களுக்கு திருமணம் தாமதமின்றி நடக்கும்.
வியாபாரிகள்
நீங்கள் கொள்முதல் செய்த சரக்குகள் அனைத்தும் விற்பனையாகும். உங்களுக்கு போட்டியாக இருந்த வியாபாரிகள் விலகிச்செல்வார்கள். வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை கூடுதலாகும். வெளியூர்களில் கிளைகள் துவங்கிட போட்ட திட்டம் நிறைவேறும். நல்ல வேலையாட்களை நீங்கள் அடைவீர்கள். வீட்டில் இருந்துவந்த குழப்பம் நீங்கும். புதிய சொத்துக்களை வாங்க போட்ட திட்டம் நிறைவேறும். சுபகாரியப் பேச்சுகள் கைகூடும். சேமிப்பு உயரும்.
தொழிலாளர்கள், தொழிலதிபர்கள்
தொழிலாளர், தொழிலதிபர்கள் ஒற்றுமை கூடும். தொழிலதிபர்கள் புதிதாக தொழிற்சாலைகள் அமைப்பார்கள். கூட்டாளிகள் நல்லவர்களாக சேர்வார்கள். கதவடைப்பு போன்ற நிலை எதுவுமில்லாமல் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பைப் பெறுவார்கள். பி.எஃப் நிலுவைத் தொகை வந்துசேரும். கூடுதலான போனசும் சம்பள உயர்வும் கிடைக்கும்.
பெண்கள்
பெண்களின் மனக்குறைகள் அனைத்தும் தீரும். திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் கைகூடி வரும். மாமியார், மருமகள் ஒற்றுமை உண்டு. கணவன்- மனைவி உறவில் விரிசல் வராது. பொன், பொருள் சேர்க்கை விருப்பப்படி நடக்கும். பொருளாதாரக் கஷ்டம் இருக்காது. எந்த குழந்தை வேண்டுமென்று நினைக்கிறீர்களோ, அதன்படி குருபகவான் அருளால் கிடைக்கும். தந்தை வழியில் ஏற்பட்ட பிணக்குகள் நீங்கும். ஒருசிலருக்கு தாய்வழி சொத்துக்கள் வந்துசேரும். வீடு கட்டிமுடிக்காமல் இருந்த நிலைமாறி, இப்போது கட்டிமுடிப்பீர்கள். பெண்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி பொற்காலம்.
மாணவர்கள்
பொறியியல் படிப்பிலுள்ள மாணவர்கள் புதிய கருவிகளைக் கண்டுபிடிப்பார்கள். அந்தக் கருவிகள் மக்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும். மாணவர்களின் மதிப்பும் பொருளாதாரமும் உயரும். நீங்கள் படிக்கும் கல்வி நிறுவனம் உங்களை பாராட்டும். கேம்பஸ் செலக்ஷனில் செலக்ட் ஆவீர்கள். சிலர் படிப்பு முடிந்தவுடன் வெளிநாடு செல்வார்கள். மாணவர்கள் கல்வியில் உயர்ந்து மெரிட்டில் தேர்ச்சிபெறுவார்கள். நினைத்த பட்டப் பிரிவுகள் கிடைக்கும்.
கலைஞர்கள்
இப்போது வாய்ப்புகளைத் தேடி நீங்கள் செல்லவேண்டியதில்லை. வாய்ப்புகள் உங்களைத் தேடிவரும். பொருளாதார நிலை உயரும். பெற்றோர் பார்த்த பெண்ணை மணந்தவர்கள் சிரமமில்லாத வாழ்க்கை வாழ்வார்கள். மற்றபடி தாங்களே விரும்பிய பெண்ணை மணம் செய்தவர்கள் அவர்களால் தொல்லைகளை அனுபவிப்பார்கள். ஒருசிலர் நீதிமன்றம் செல்லவேண்டியிருக்கும். போட்டியாக இருந்தவர்கள் விலகிச்செல்வார்கள்.
விவசாயிகள்
இந்த ஆண்டு நல்ல மழை பெய்யும். விளைச்சலும் கூடுதலாகும். மாடு, கன்று, பால் பாக்கிய விருத்திகள் உண்டு. சொத்துகளை விரிவுபடுத்த போட்ட திட்டம் நிறைவேறும். பணப்பயிர்கள் பயிரிடுவோர் கூடுதல் லாபத்தைப் பெறுவார்கள். புகையிலை விவசாயம் செய்கின்றவர்கள் இந்த ஆண்டு அமோக விளைச்சலை அடைவார்கள். எதிர்பாராத லாபம் கிடைக்கும். இப்போது உங்கள் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தி யாகும். பிள்ளைகளின் வழியில் எதிர்பார்த்த சுபகாரிய நிகழ்ச்சிகள் நடக்கும்.
அரசியல் பிரமுகர்கள்
குரு பகவான் 11-ல் வரும் இந்த காலகட்டத்தில் அரசியல் பிரமுகர்களின் செல்வாக்கு உயரும். மக்கள் மனதில் நீங்காத இடத்தைப் பெறுவார்கள். நீங்கள் செய்கின்ற பொதுச் சேவைக்கு மக்கள் நல்ல அங்கீகாரத்தைத் தருவார்கள். எதிர்வரும் தேர்தல்கள் உங்களுக்கு சாதகமாகும். பிள்ளைகளால் தொல்லைகள் உண்டு. எனவே அரசியல் பிரமுகர்கள் தங்கள் பிள்ளைகளைக் கண்காணிக்க வேண்டும். அவர்களால் உங்கள் பதவிக்கு சிரமம் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். குருபகவான் உங்கள் அருகில் அமர்ந்து அருள்பாலிக்கிறார்.
சித்திரை நட்சத்திரக்காரர்களுக்கு:
நீங்கள் எடுத்துக்கொண்ட முயற்சிகள் எல்லாவற்றிலும் வெற்றியைப் பெறுவீர்கள். அரசியலில் முக்கிய பங்கு வகிப்பீர்கள். உடல்நலன் சற்று ஏற இறங்க இருக்கும். மக்கள் சேவையே மகேசன் சேவை என்று, சேவை செய்வதில் காலம் முழுவதும் ஓடுமென்றாலும் உடல்நிலையில் சற்று கவனத்தைக் கொள்ள வேண்டும். 90 சதவிகித நன்மையுண்டு.
சுவாதி நட்சத்திரக்காரர்களுக்கு:
நீங்கள் சொத்துக்களை வாங்கிச் சேர்க்கும் காலம். பொன்னும் சேரும். குடும்பத்தில் சுபகாரியப் பேச்சுகள் தடையின்றி நடக்கும். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். திட்டப்படி வெளிநாடு செல்வீர்கள். சம்பளம் கூடுதலாகவே கிடைக்கும். உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் உண்டு. பெற்றோர்கள் சம்பந்தமாக மருத்துவச் செலவுகள் கூடுதலாகும். அவசியத்தை அறிந்து மருத்துவம் செய்தால் இழப்புகளைத் தவிர்க்கலாம். 90 சதவிகித ஆதாயம் கிடைக்கும்.
விசாக நட்சத்திரக்காரர்களுக்கு:
இப்போது உங்களுக்கு இருந்து வந்த பிணி, பீடைகள் நீங்கும். எல்லா காரியங்களிலும் வெற்றியைக் காண்பீர்கள். கான்ட்ராக்ட் தொழில் செய்பவர்கள் கூடுதல் லாபத்தைப் பெறுவார்கள். பயணத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். சிறு விபத்துகளை சந்திக்க நேரிடலாம். எனவே வாகனங்களில் மெதுவாகச் செல்லவேண்டும். கூட்டுத் தொழில் சிறப்பான லாபத்தைத் தரும். 80 சதவிகித லாபமுண்டு.
பரிகாரம்
முருகப் பெருமானையும், குருபகவானையும் வணங்கி வர கூடுதல் லாபம் பெறலாம். குரு பகவானையும் தரிசித்து வர லாபங்கள் பெருகும். பொன், பொருள் வாங்க போட்ட திட்டங்கள் நிறைவேறும்.
Post a Comment