Ads (728x90)


தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய)

னுசு ராசி அன்பர்களே!

குருபகவான் 05-07-2015 முதல் 01-08-2016 வரை உங்கள் ராசிக்கு 9-ல் உலா வருகிறார். 9-ல் குரு வருவது சிறப்பு. இதுவரை தொல்லை கொடுத்துவந்த உடல் உபாதைகள் இனி விலகிவிடும். மனதில் ஏற்பட்ட குழப்பம் விலகும். கூண்டுக்கிளியாக வீட்டிலேயே அடைந்துகிடந்த நீங்கள் வெகுவேகமாக காரியங்களைச் செய்வீர்கள். வெற்றிகளைக் காண்பீர்கள். நாளைய செய்திகள் இன்றே உங்களுக்குத் தெரியும். ஆழ்ந்த சிந்தனையில் அனைத்தையும் உணர்வீர்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் சிறப்பாகும். பெற்றோர்களின் மருத்துவச்செலவுகள் குறையும். கணவன்-மனைவி இடையே ஏற்பட்டு வந்த சின்னச் சின்ன சண்டைகளும் விலகிச்சென்றுவிடும். மிகவும் ஒற்றுமையாக இருப்பீர்கள்.

வெளியூர் செல்ல போட்ட திட்டம் நிறைவேறும். ஒருசிலர் வெளிநாடு சென்று நல்ல வாய்ப்புகளைப் பெறுவார்கள். கூடுதல் சம்பளத்தையும் பெறுவார்கள். சகோதரர்கள் மத்தியில் நிலவிவந்த பிணக்குகள் தீரும். சொத்துகள் சம்பந்தமான பிரச்சினைகள் சுமுகமான தீர்வுக்கு வரும். நீங்கள் எடுத்துக்கொண்ட அனைத்து முயற்சிகளிலும் வெற்றிகள் வந்துசேரும். பலராலும் பாராட்டப்படுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களின் தேவைகள் பூர்த்தியாகும். பொன், பொருள் வாங்கிட போட்ட திட்டம் நிறைவேறும். மாணவர்கள் உயர்கல்வி பயில்வதற்கு திட்டமிட்டபடி செல்வார்கள். வங்கியில் கேட்டபடி கல்விக்கடன் கிட்டும். கொடுக்கல்- வாங்கல் தொழில் செய்கின்றவர்கள் லாபத்தை அடைவார்கள். 

குடும்பத்தில் தடைப்பட்டுவந்த சுபகாரிய நிகழ்ச்சிகள் கைகூடும். ஒருசிலர் குடும்பத்தில் முதலில் பார்த்த வரனுக்கு தங்கள் பிள்ளைகளைக் கொடுப்பார்கள். குடிவெறியோடு சுற்றிவந்த கணவர் இந்த குருப் பெயர்ச்சி முதல் ஒழுக்கமானவராக மாறுவார். மணம் முடிக்காத பெண்களுக்கு நல்ல வரன்கள் வந்து சேரும். மாமியார் கொடுமையால் துன்பப்பட்ட பெண்கள் இப்போது அவர்களின் தொல்லையிலிருந்து விடுபடுவார்கள். வெளிநாடு சென்று நீண்டகாலமாக வராமலிருந்த பிள்ளைகள் வந்துசேர்வார்கள். 

குலதெய்வக் கோவிலுக்கு இந்த முறை கண்டிப்பாக சென்று வருவீர்கள். தொழிலதிபர்கள் நினைத்தபடி தங்கள் கம்பெனியை மேலும் விரிவுபடுத்துவார்கள். கூட்டுத்தொழில் செய்துவருகிறவர்கள் மத்தியில் ஏற்பட்ட பிணக்குகள் நீங்கும். அரசு ஊழியர்கள்  எதிர்பார்த்த பதவி உயர்வுகள் வந்துசேரும். கேட்ட இடத்திற்கு மாறுதலும் பெறுவார்கள். அரசாங்கத்தில் எதிர்பார்த்த உதவித் தொகைகள் கிட்டும். இந்த குருப்பெயர்ச்சி உங்களுக்கு பொற்காலம்.

05-07-2015 முதல் 23-08-2015 வரை குரு, கேது சாரத்தில் உலா


இந்த காலகட்டத்தில் நீங்கள் எடுத்துக்கொண்ட அனைத்து காரியங்களிலும் வெற்றியைக் காண்பீர்கள். தொழிலதிபர்கள் தங்கள் தொழிற்சாலையில் அதிகமான உற்பத்தியைப் பெறுவார்கள். அவர்கள் வெளிநாடுகளில் இருந்தும் ஆர்டர்களைப் பெறுவார்கள். உடல்நலன் சீராகும். சின்னப்பிள்ளைபோல இப்போது துள்ளிக் குதித்து வேலைசெய்வீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்களுக்கு சாதகமாகச் செயல்படுவார்கள். நினைத்த காரியம் நடந்தது என்று பூரிப்பில் திளைப்பீர்கள். சுபகாரியப் பேச்சுகள் திட்டமிட்டபடி நடைபெறும். வீட்டில் சுபகாரிய நிகழ்ச்சிகள் உண்டு. விலகிச்சென்ற சொந்தங்கள் விரும்பி வந்துசேரும். பெற்றோர்கள் வகையில் இருந்துவந்த மருத்துவச் செலவுகள் குறையும். தாயின் உடல்நிலை சீராகும். விரும்பாத சொந்தங்களை விலக்கிவிடுவீர்கள். எப்போதும் உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சியே இருக்கும். பிரச்சினைகள் எதுவுமின்றி காரியங்கள் நடைபெறும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டு. நண்பர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள்.

24-08-2015 முதல் 27-10-2015 வரை குரு, சுக்கிரன் சாரத்தில் நேர்கதியில் உலா


தொழில்துறையில் நல்ல முன்னேற்றம் உண்டு. தொழிற்சாலைகளில் நவீனமான தொழிற்நுட்பங்களைக் கொண்டுவருவீர்கள். உடல்நலன் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமைக்கு குறைவுவராது. பொன், பொருள் வாங்க போட்ட திட்டம் நிறைவேறும். தடைப்பட்டுவந்த சுபகாரிய நிகழ்ச்சிகள் இனிதே நடக்கும். நல்ல வரன்களாக வந்துசேரும். கொடுக்கல்- வாங்கல் தொழில் செய்வோரும் லாபம்பெறுவர். நீண்டகாலமாக வீடுகட்ட போட்ட திட்டம் இப்போது நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் நேசத்துடன் இருப்பார்கள். வெளிநாடு சென்று உயர்கல்வி பயில நினைத்தவர்கள் எண்ணம் நிறைவேறும். ஒருசிலர் அயல்நாட்டில் வேலைவாய்ப்பைப் பெறுவார்கள். காதலர்கள் எண்ணம் கைகூடும். வயதுவந்த பிள்ளைகளை, பெற்றோர்கள் கவனத்துடன் கண்காணிக்கவேண்டும். ஒருசில பிள்ளைகள் குரு 9-ல் உள்ள இந்த நேரத்தில் தானே தன் திருமணத்தை முடிவுசெய்யலாம். குடும்பத்தில் எப்போதும் மகிழ்ச்சி நிறைந்திருக்கும்.   

28-10-2015 முதல் 15-01-2016 வரை குரு, சூரியன் சாரத்தில் நேர்கதியில் உலா


இந்த காலகட்டத்தில் உடல்நலக் குறைவுகள் நீங்கி மிகவும் தெம்போடு இருப்பீர்கள். நீங்கள் செய்கின்ற காரியமனைத்திலும் வெற்றியைக் காண்பீர்கள். கையிருப்பும், சேமிப்பும் கூடும். உடன்பிறந்தவர்களால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். பணவசதிக்கு குறைவில்லை. மாணவர்கள் கல்வியில் உயர்ந்துவருவார்கள். வழக்குகள் சாதகமாகும். அரசு ஊழியர்கள் விரும்பிய இடத்துக்கு மாறுதல் கிடைக்கும். ஒருசிலருக்கு பதவி உயர்வுடன் மாறுதல் கிடைக்கும். குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியர்கள் இந்த ஆண்டு முடிவுக்குள் குழந்தை பாக்கியத்தை அடைவார்கள். சகோதரர்கள் மத்தியில் இருந்துவந்த சொத்துப் பிரச்சினை சுமுக முடிவுக்கு வரும். பெண்கள் தாய்வீட்டிலிருந்து எதிர்பார்த்த சொத்து கிடைக்கும். நீண்டகாலமாக அடைக்கமுடியாத கடன்பாக்கிகளை செலுத்திமுடிப்பீர்கள்.

16-01-2016 முதல் 07-02-2016 வரை குரு, சூரியன் சாரத்தில் வக்ரம்


இந்த காலகட்டத்தில் புதிய இடம், மனை விருத்திகள் ஏற்படும். நீண்டகாலமாக வெளிநாட்டிலிருந்து வராத உங்கள் மகன் வந்துசேர்வார். பெற்றோர் வகையில் மருத்துவச் செலவுகள் வரலாம். உங்கள் பிறந்த ஜாதகத்தில் குரு 8-ல் இருக்க, 40 வயதைக் கடந்த சிலருக்கு வயிற்றுவலி போன்ற தொந்தரவுகள் உண்டு. எனவே உங்கள் உடம்பை முழு பரிசோதனை செய்துகொள்வது நல்லது. அரசு ஊழியர்களின் வேலைப்பளு கூடும். வெளிநாடு சென்று வேலைசெய்ய நினைத்தவர்களுக்கு விசா கிடைத்து வெளிநாடு செல்வார்கள். கணவன்- மனைவி ஒற்றுமையில் சற்று விரிசல் வரலாம். எனவே தேவையான காரணங்களுக்கு மட்டும் செலவு செய்யலாம். கூடுதல் செலவுகளைத் தவிர்க்கவேண்டும். வீட்டில் சுபகாரியப் பேச்சுகள் கைகூடும். மாமியார், மருமகள் சண்டை இனி வராது. ஒற்றுமை ஏற்படும்.

08-02-2016 முதல் 14-06-2016 வரை குரு, சுக்கிரன் சாரத்தில் வக்ரம்


இந்த காலகட்டத்தில் அந்நிய மதத்தவர், அந்நிய மொழியினரால் லாபங்கள் கூடும். லாகிரி வஸ்துகள் வியாபாரம் செய்பவர்கள் கூடுதல் லாபத்தைப் பெறுவார்கள். உடல்நிலை சீராகும். எதையும் தைரியமாக ஏற்றுச்செய்வீர்கள். கறுப்புநிறம் உள்ளவர்களிடம் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். நரம்புத் தளர்வு உள்ளவர்கள் இந்த காலகட்டத்தில் அடிக்கடி மருத்துவப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். பிள்ளைகளுக்கு நல்ல வரன்களாக அமையும். பிள்ளைகளின் சுய ஜாதகத்தில் ராகுபகவான் 8-ல் இருந்தால் அதற்கான பரிகாரத்தை செய்து திருமண முடிவுகளைச் செய்யவேண்டும். இப்போது உடன்பிறந்தவர்கள் உங்களுக்கு உதவியாகவே செயல்படுவார்கள். பிள்ளைகள் வழியில் இதுவரை இருந்துவந்த தொல்லைகள் மாறும். அவர்கள் கல்வியில் உயர்ந்துவருவார்கள். பெற்றோர்களின் மருத்துவச் செலவு கூடும்.

15-06-2016 முதல் 09-07-2016 வரை குரு, சுக்கிரன் சாரத்தில் உலா


இப்போது உங்கள் பக்கம் அதிர்ஷ்டக் காற்று அள்ளிவீசும். செல்கின்ற இடமெல்லாம் செல்வாக்குண்டு. மந்தமாக இருந்துவந்த தொழில்கள் படுவேகத்துடன் செல்லும். தொல்லை கொடுத்துவந்த எதிரிகள் விலகிச்செல்வார்கள். இளைஞர்கள் ராணுவம், காவல்துறையில் வேலைவாய்ப்புகளைப் பெறுவார்கள். தகுதியுள்ளவர்கள் இந்த காலகட்டத்தைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். வெளிநாடு சென்று வேலைசெய்ய விரும்பியவர்கள் நினைத்தபடி பயணத்தைத் தொடங்கு வார்கள். வெளிநாட்டில் இருந்துகொண்டு வேலை தேடுபவர்களுக்கு நல்ல  வாய்ப்பும் வந்துசேரும். சிலருக்கு அந்த நாட்டிலேயே காதல் திருமணம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. தொழில்துறையில் அதிகமான லாபத்தைப் பெறுவீர்கள். அரசு ஊழியர்கள் எண்ணம்போல் மாறுதலை அடைவார்கள். தற்காலிகப் பணிநீக்கம்போன்ற தண்டனையில் உள்ளவர்கள் மீண்டும் வேலைவாய்ப்பைப் பெறுவார்கள். தொல்லை கொடுத்துவந்த உயரதிகாரிகள் மாறுதலில் செல்வார்கள்.

10-07-2016 முதல் 01-08-2016 வரை குரு, சூரியன் சாரத்தில் உலா


இந்த காலகட்டத்தில் தொட்டதெல்லாம் பொன்னாகும். உங்கள் பேச்சில் உள்ள நாணயம், உங்களது செயல்பாடுகளுக்கு பக்கபலமாக இருக்கும். தொல்லை கொடுத்துவந்த உடல் உபாதைகள் நீங்கும். பிள்ளை களுக்கும் குருபகவான் 9-ல் வந்திருந்தால், அவர்களை பக்குவமாகப் பேசி நடத்திச் செல்லவேண்டும். இல்லையெனில் அவர்கள் விரும்பும் இடத்துக்கு வெளியேறி விடுவார்கள். எனவே கவனமுடன் செயல்பட வேண்டும். கணவன்- மனைவி ஒற்றுமையில் விரிசல் வராது. பிரிந்துசென்ற தம்பதியர், வழக்கை வாபஸ் பெற்று ஒன்றுசேர்வார்கள். நீண்டகாலமாக குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். கூட்டுத்தொழில் செய்கின்றவர்கள் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. தொழிலாளர்கள்- தொழிலதிபர்கள் ஒற்றுமையில் குறைவில்லை. வியாபாரிகள் புதிய கிளைகள் துவங்க போட்ட திட்டம் நிறைவேறும். ஒருசிலர் தங்கள் தொழிலை வெளிநாடுகளில் ஆரம்பிக்க இருப்பார்கள். அவர்கள் நிறைய தடை, தாமதங்களை சந்திக்க நேரும். எனவே யோசித்துச் செயல்பட வேண்டும்.

அரசு ஊழியர்கள்


எதிர்பார்த்த இடத்துக்கு மாறுதல் கிட்டும். ஒருசிலருக்கு பதவி உயர்வும் வந்துசேரும். அதிகாரிகளின் கெடுபிடி அதிகமாக இருக்கும். எனவே உங்கள் பணியில் மிகவும் கவனமாகச் செயல்படவேண்டும். கையூட்டு பெறுகின்ற ஊழியர்கள் தங்கள் பழக்கத்தை மாற்றிக்கொள்ள வேண்டும். ஒருசிலர் பிடிபட வாய்ப்பு உள்ளது. பின்னாளில் உள்ள சிரமங்களை மனதில்கொண்டு செயல்பட வேண்டும். வேலைப் பளு அதிகமாக இருந்தாலும், சம்பள உயர்வு, பதவி உயர்வு தடையின்றிக் கிடைக்கும்.

வியாபாரிகள்


வியாபாரிகள் யோகம் உள்ளவர்கள். அதிர்ஷ்டக் காற்று உங்கள் பக்கம் உள்ளது. வியாபாரத்துக்கு சரக்கு கிடைக்கவில்லையே என்று தேடி அலைவீர்கள். அந்த அளவுக்கு வாடிக்கையாளர் கூட்டம் அலைமோதும். அதிக லாபமும் கிடைக்கும். புதிய வீடு, இடம் வாங்க போட்ட திட்டம் நிறைவேறும். சேமிப்பு உயரும். ஒருசிலரின் புதிதாக கிளை துவங்கும் எண்ணம் நிறைவேறும். உங்களுக்கு எதிராகச் செயல்பட்ட போட்டி வியாபாரிகள் விலகிச்செல்வார்கள். எவ்வளவுதான் பணம் வந்தாலும், நேரத்துக்கு உணவுண்ண வேண்டும். இந்த காலகாலத்தில் ஒருசிலர் வயிற்று வலி, அல்சர் தொந்தரவுகளை அனுபவிப்பார்கள். 

தொழிலாளர்கள், தொழிலதிபர்கள்


தொழிலதிபர்கள் தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுடன் சுமுக உறவு கொள்வார்கள். தொழிலாளிகளும் கூடுதல் நேரம் பணிசெய்து உற்பத்தியைப் பெருக்கித்தருவார்கள். தொழிலாளர்களின் கோரிக்கைகளை தொழிலதிபர்களும் ஏற்பார்கள். தொழிலதிபர்கள் புதிய பங்குதாரர்களைச் சேர்க்கும்போது, அவர்கள் நல்லவர்களா என்று ஆராய்ந்து சேர்க்கவேண்டும். வெளியிடங்களில் புதிதாக கிளைகள் ஆரம்பிக்க போட்ட திட்டப்படி, தொழிற்சாலைகளை அமைப்பீர்கள். ஒப்பந்த அடிப்படையில் உள்ள பணியாளர்களின் பணி நிரந்தரமாகும்.

பெண்கள்


பெண்கள் இப்போது புத்துணர்வோடு செயல்படுவார்கள். பிறந்த வீட்டை மறந்து புகுந்தவீட்டு நன்மைகளைப்பற்றி மட்டும் சிந்திப்பார்கள். உடன்பிறந்த சகோதரர்களால் அதிக உதவிகள் கிடைக்காது. உபத்திரவங்கள்தான் அதிகம். எனவே உங்கள் சகோதரர்களைப் பற்றி கணவரிடம் பேசாதீர்கள். வீண் சண்டைகள் வராமல் தவிர்க்கலாம். கணவன்- மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் நடக்கும். நல்ல வரன்களாக அமையும். குழந்தை பாக்கியமும் கிட்டும். உயர்கல்விக்காக வெளிநாடு செல்ல போட்ட திட்டம் நிறைவேறும். பிரிந்த தம்பதியர் ஒன்றுசேர்வார்கள். விட்டுச்சென்ற மகன் இப்போது உங்களைக் காணவருவார். இந்த ஆண்டு அதிக மருத்துவச் செலவுகள் வராது.

மாணவர்கள்


காலமறிந்து படிப்பவர்கள் நீங்கள். இந்த ஆண்டு கல்வியில் உயர்நிலையை அடைவீர்கள். ஆசிரியராலும், கல்வி நிறுவனத்தாராலும் பாராட்டப்படுவீர்கள். உயர்கல்வி பயில்கின்றவர்கள், அரியர்ஸ் இல்லாமல் பாஸ் செய்வார்கள். வெளிவட்டார நண்பர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள். காதல் செய்யும் எண்ணமுள்ளவர்கள் அந்த எண்ணத்தைக் கைவிடவேண்டும். காதல்தான் உங்கள் படிப்புக்கு எதிரியாக விளங்கும். படிப்பும் பாழாகி எதிர்காலமும் பாழாகிப்போய்விடும். எனவே கல்வியில் மட்டும் கருத்தைச் செலுத்தவேண்டும். இந்த ஆண்டு கல்விக்கு ஒரு பொற்காலம். அதனைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

கலைஞர்கள்


உங்கள் நடிப்புக்காக கிடைக்காமல் இருந்த விருதுகள் அரசாங்கத்திலிருந்து வந்துசேரும். கணவன்- மனைவி ஒற்றுமை சிறக்கும். காதல் திருமணம் செய்த நடிகர்கள் தங்கள் மனைவியைவிட்டுப் பிரிய நேரும். எனவே மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். புதிய படவாய்ப்புகள் வந்துசேரும். ஒப்பந்தப்படி படம் நல்ல முறையில் முடியும். மக்கள் பார்த்து வெகுவாகப் பாராட்டுவார்கள். அதனால் படம் வெற்றிப் பாதையை நோக்கிச் செல்லும். கலைத்துறையினருக்கு இது பொற்காலம்.

விவசாயிகள்


எந்த பயிரைப் பயிரிட்டாலும் விளைச்சல் அதிகமாகவே இருக்கும். பணப்பயிர்கள் உங்களுக்கு இரண்டு வருட லாபத்தை ஒரே வருடத்தில் அள்ளித்தரும். பிள்ளைகள் வேண்டியதை வாங்கிக்கொடுப்பீர்கள். வாகனம் வாங்கும் எண்ணம் ஈடேறும். வீட்டில் சுபகாரியப் பேச்சுகள் கைகூடும். உங்கள் வேளாண்மை முன்னேற்றத்திற்காக அரசாங்கம் விருதுகளை வழங்கும். நல்ல வரன் அமைந்து பிள்ளைகள் சுகமான வாழ்வு வாழ்வார்கள். மாடு, கன்று, பால், பாக்கிய விருத்திகள் மேலோங்கும். ஒருசிலர் விவசாயப் பண்ணைகள் அமைத்து பலனை அடைவார்கள். புதிய விவசாயக் கருவிகளை வாங்க போட்ட திட்டம் நிறைவேறும்.

அரசியல் பிரமுகர்கள்


உங்களின் நல்ல செயல்களை மக்கள் அங்கீகரிப்பார்கள். அது தலைமைவரை செல்லும். புதிய பதவிகள் உங்களைத் தேடிவரும். பேரும் புகழும் சேர்ந்துவரும். உங்களுக்கு தொல்லை கொடுத்துவந்த அரசியல் பிரமுகர்கள் விலகிச்செல்வார்கள். குரு 8-ல் இருந்த கடந்த ஆண்டு முழுவதும் இருந்துவந்த மந்தமான சூழ்நிலை மாறும். அரசியலில் புகழையும் செல்வாக்கையும் பெறும் நீங்கள், குடும்பத்தை மறந்துவிடாதீர்கள்.

மூல நட்சத்திரக்காரர்களுக்கு:


உங்களுக்கு வசந்தகாலம் வந்துவிட்டது. வறுமை என்பது இனி வாழ்க்கையில் வராத அளவுக்கு பொருள்வளம் பெருகும். புதிதாக பொன், பொருள் வாங்க போட்ட எண்ணம் ஈடேறும். வேலைவாய்ப்புகளைப் பெற்று பொருளாதாரத்தை உயர்த்திக் கொள்வீர்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்களை அனுசரித்துச் செல்வார்கள். வேலை செய்யுமிடத்தில் இருந்துவந்த தொல்லைகள் நீங்கும். எப்போதும் மிக மகிழ்ச்சியுடன் வாழ்வீர்கள். வருமானம் இரட்டிப்பாகும். சுபகாரியம் சுமுகமாக முடியும். 90 சதவிகித நன்மையுண்டு.

பூராட நட்சத்திரக்காரர்களுக்கு:


நீங்கள் எப்போதும் நிதானத்துடன் செயல்படக்கூடியவர். குரு 9-ல் வந்துவிட்டாரே என்ற மகிழ்ச்சியில் கூடுதல் வேகத்தை யார்மீதும் காட்டக்கூடாது. கனிவாகப் பேசி காரிய வெற்றிகளைக் காணலாம். மற்றவர்கள் குணமறிந்து பேசுவது, நடப்பது நல்லது. வருமானத்திற்குக் குறைவில்லை. அரசு ஊழியர்கள் வரவேண்டிய நிலுவைத் தொகைகள் முழுவதையும் பெறுவீர்கள். அலுவலகத்தில் வேலைசெய்யும் பெண்களால் தொல்லைகள் வராமல் நடந்துகொள்வது நல்லது. அவர்களால் உங்களுக்கு மாறுதல் வரும். கடல் அல்லது மலை சார்ந்த பகுதிகளில் தொலைதூரத்துக்கு மாற்றம் வர வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எனவே எதிலும் நிதானித்துச் செயல்படுங்கள். பெண்களுக்கு நல்ல வரன் அமையும். ஆண்களுக்கும் திருமணம் கைகூடி வரும். 80 சதவிகித நன்மையுண்டு.

உத்திராட நட்சத்திரக்காரர்களுக்கு:


பொதுவாகவே உத்திராட நட்சத்திர அன்பர்கள் கைராசிக்காரர்கள். உத்திராட நட்சத்திரத்தில் பிறந்த பெண் புகுந்த வீடும், உத்திராட நட்சத்திரத்தில் பிறந்தவர் பெண் எடுத்த வீடும் எப்போதும் வளர்ச்சியுடன் இருக்கும். இந்த ஆண்டு குரு 9-ல் அமர, அதிர்ஷ்டக் காற்று உங்கள் பக்கம் வீசுகிறது. விட்டுச்சென்ற சொந்தங்கள் விரும்பி வந்துசேரும். உங்கள் செயல்கள் அனைத்திலும் நல்ல லாபத்தையும் பொருளாதார உயர்வையும் பெறுவீர்கள். குடும்பத்தில் அமைதியும் உயர்வும் உண்டு. பிள்ளைகளால் நன்மைகள் உண்டு. "இந்தப் பிள்ளையைப் பெற்ற தாய் யார்' என்று மக்கள் வியக்கும் அளவில் உங்கள் பிள்ளைகள் படிப்பில் உயர்வார்கள். பணவசதிகளுக்குக் குறைவில்லை.

பரிகாரம்


குரு பகவான் 9-ல் உள்ள இந்த காலகட்டத்தில் முருகப் பெருமானையும், குருபகவானையும் வணங்கி வாருங்கள். நன்மைகள் கூடும்.  குலதெய்வத்தையும், குருபகவானையும் நினைத்து காரியத்தைத் துவக்குங்கள். செய்யும் காரியத்தில் வெற்றி நிச்சயம். 

Post a Comment

Recent News

Recent Posts Widget