மகரம்
(உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம்,
அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)
(உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம்,
அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)
மகர ராசிஅன்பர்களே!
குரு பகவான் ராசிக்கு 8-ல் வரும்போது சிரமங்களை அடைவோமா என்று நினைக்கத்தோன்றும். ஆனால் குரு பகவானால் உங்களுக்கு தாக்கம் வராது. குரு 8-ல் வரும்போது நீங்கள் செய்யவேண்டியது எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கவேண்டும். நேரத்திற்கு உணவுண்ண வேண்டும். உங்கள் கடமைகளை மட்டுமே செய்யவேண்டும். மற்றவர்களுக்கென்று நீங்கள் உதவப்போகும்போதுதான் சிரமம் வரும். ஜாமீன் போட்டு யாருக்கும் பணம் வாங்கிக் கொடுக்காதீர்கள். வாகனப் போக்குவரத்தில் மிகவும் எச்சரிக்கையாகச் செல்லவேண்டும். அல்சர் போன்ற வயிறு சம்பந்தப்பட்ட நோயுள்ளவர்கள் ஆண்டு முழுவதும் தக்க மருந்தினை, மருத்துவர் ஆலோசனைப்படி உண்ணவேண்டும். உங்கள் காரியங்களுக்காக மற்றவர்களை அணுகக்கூடாது. உதவி செய்வார்கள் என்று நம்பியவர்கள்கூட உதவிசெய்ய மாட்டார்கள்.
குரு பகவான் ராசிக்கு 8-ல் சிம்மத்தில் அமர்ந்து தன் சொந்த வீட்டை 5-ஆம் பார்வையாகப் பார்க்கின்றார். எனவே மலைபோல் வந்த காரியத் தடைகள் பனிபோல் விலகிச் சென்றுவிடும். இதனை நீங்கள் அனுபவப் பூர்வமாக உணர்வீர்கள். குடும்பத்தில் குழப்பம் செய்துவந்தவர்கள் இப்போது விலகிச்செல்வார்கள். நகை வாங்குவது, இடம் வாங்குவது போன்ற நிகழ்வுகளைத் தள்ளிவைக்க வேண்டும். கைவசம் உள்ளதைப் பாதுகாத்தாலே போதும். இப்போது கோபம் அதிகமாக வரப்பார்க்கும். எனவே நீங்கள் கோபத்தை அடக்கி நிதானத்துடன் செயல்பட வேண்டும். இப்போது உங்கள் தொழில் சம்பந்தமாக நீங்கள் அடிக்கடி வெளியூர் சென்றுவருவீர்கள். கடிதம்மூலம் நல்ல தகவல்கள் வந்துசேரும். உங்களைவிட்டுப் பிரிந்த மகன் இப்போது உங்களைத் தேடிவருவார்.
முருகன் அருளால் வழக்குகள் கடுமையாக இருக்காது. வயிற்று வலி வந்தால் உடனே சிகிச்சை செய்துகொள்ள வேண்டும். தொழிலதிபர்கள் அயல்நாட்டில் தொழில் துவங்க போட்ட திட்டத்தில் மேலும் மூன்று மாதங்கள் தாமதமாகலாம். தொழிலாளர் ஒற்றுமை உண்டு. கூட்டுத் தொழில் செய்கிறவர்கள் எல்லாரும் நிதானமாகப் பேசவேண்டும். குருபகவான் 8-ல் அமர்ந்து குதர்க்கமான பேச்சுகளை பேசவைப்பார். எனவே எதையும் சிந்தித்து, யோசனை செய்து பேசவேண்டும். சகோதாரர்கள் மத்தியில் ஒற்றுமைக் குறைவு வராது. ஒருவரையொருவர் புரிந்து, விட்டுக்கொடுத்துச் செல்வதால் சுமுகமாக அனைத்து காரியங் களும் நடக்கும். காதல் செய்துவருவோர் மனதை ஒருநிலைப்படுத்தி காதல் தேவைதானா என்று சிந்தித்து முடிவெடுக்க வேண்டும். தொழிலதிபர்கள், தொழிலாளர்களால் எந்த பிரச்சினையையும் சந்திக்க மாட்டார்கள். பங்குதாரர்களிடம் எச்சரிக்கையாக இருந்துகொள்ள வேண்டும்.
05-07-2015 முதல் 23-08-2015 வரை குரு, கேது சாரத்தில் நேர்கதியில் உலா
முருகன் அருளால் கடந்த காலங்களில் இருந்து வந்த தொல்லைகள் குறையும். உடல்நிலையில் முன்னேற்றம் காணப்படும். வீட்டில் உறவினர்கள் வருகை அதிகரிக்கும். பொன், பொருள் வாங்க போட்ட திட்டம் நிறைவேறும். தொழிலதிபர்கள், வியாபாரிகள் தொழில் போட்டியால் மந்தநிலையைக் காண்பீர்கள். மற்ற வேலை செய்கின்றவர்கள் உழைப்பால் உயர்வார்கள். கை கால்களில் வலிவந்து நீங்கும். அரசு ஊழியர்கள் அதிகமான வேலைப்பளுவை சந்திப்பார்கள். ஒருசிலர் தற்காலிகப் பணிநீக்கம் போன்ற நிலைகளை அடைவார்கள். அவர்கள் மற்றவர்களை நம்புவதால் தொல்லைகள் கூடும். உங்கள் பணிகளில் தொய்வு வராது. கையூட்டு பெறுகின்ற அரசு ஊழியர்கள்தான் சிரமத்தை அடைவார்கள். காவல்துறை நடவடிக்கைக்கும் வாய்ப்புள்ளது. கூட்டு முயற்சிகளைக் கைவிடவேண்டும். குரு 8-ல் உள்ள இந்த நேரத்தில் அக்கம்பக்கம் உள்ளவர்களைப் பற்றி சிந்திக்கக்கூடாது. நீங்கள் உண்டு, உங்கள் வேலையுண்டு என்றிருந்தால் எந்தப் பிரச்சினையும் வராது. தொழில் துறையில் லாபகரமான நிலையே ஏற்படும்.
24-08-2015 முதல் 27-10-2015 வரை குரு, சுக்கிரன் சாரத்தில் நேர்கதியில் உலா
உங்கள் செயல்கள் அனைத்தும் திருப்தியைத் தரும். விலகிநின்ற சொந்தங்கள் வந்துசேரும். "வரும்- ஆனால் வராது' என்றிருந்த நிலுவைத் தொகைகளும், கடன் தொகைகளும் வசூலாகும். உடல்நிலையில் தெளிவுண்டு. சிக்கனமாக செலவு செய்தால் பணத் தட்டுப்பாடுகள் நீங்கும். வரவுக்கு குறைவில்லை. தொழிலதிபர்கள், தொழிலாளிகளை மிகவும் கவனமாக அனுசரித்துச் செல்லவேண்டும். அவர்கள் யூனியனில் சேர்ந்து ஸ்டிரைக்கில் ஈடுபட வாய்ப்புகள் உள்ளன. அரசு ஊழியர்கள் திடீர் இடமாற்றங்களைச் சந்திப்பார்கள். எந்த இடத்துக்கு மாறுதல் வந்தாலும் செல்வது நல்லது. கேன்சல் செய்ய முயற்சிக்காதீர்கள். குடும்பத்தில் கணவன்- மனைவி ஒற்றுமையுண்டு. குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும்.
28-10-2015 முதல் 15-01-2016 வரை குரு, சூரியன் சாரத்தில் நேர்கதியில் உலா
இந்த நேரத்தில், நீங்கள் எண்ணிய காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். உடல்நிலை சீராகும். பெற்றோர்வகையில் மருத்துவச் செலவுகள் குறையும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். சுபகாரியப் பேச்சுகள் கைகூடும். நல்ல வரன்களாக அமையும். குழந்தை பாக்கியம் கிட்டும். ஆண் வாரிசுகள் அமையும். பிரிந்துவாழ்ந்த தம்பதியர் ஒன்றுசேர்வார்கள். வாகனப் பராமரிப்பில் ஏற்பட்ட கூடுதல் செலவுகள் குறையும். நல்ல தொழிலாளர்கள் கிடைப்பார்கள். பிள்ளைகள் கல்வியில் தேர்ச்சி பெற்று பாராட்டைப் பெறுவார்கள். அரசு ஊழியர்கள் கேட்ட இடத்திற்கு மாறுதலைக் காண்பார்கள். தொழிற்சாலைகளில் உற்பத்தி கூடும். எதிர்பார்த்ததைவிட லாபம் பெருகும். தற்காலிகப் பணிநீக்கத்திலுள்ள அரசு ஊழியர்கள் மீண்டும் வேலைவாய்ப்பைப் பெறுவார்கள்.
16-01-2016 முதல் 07-02-2016 வரை குரு, சூரியன் சாரத்தில் வக்ரம்
இப்போது குருபகவான் உங்களுக்கு ஆதரவான வழிகளைக் காட்டுவார். உடல்நிலையில் இருந்துவந்த பின்னடைவுகள் நீங்கும். நீங்கள் உற்சாகத்தோடு வேலைசெய்வீர்கள். எதிர்பார்த்த பண வரவுகள் வந்துசேரும். சகோதரர்கள் வகையில் இருந்துவந்த பிணக்குகள் நீங்கும். சொத்துப் பிரிவினை சுமுகமாக வரும். ஒருசிலர் அயல்நாடு போக போட்ட திட்டம் நிறைவேறும். நல்ல கல்வியைப் பயின்று அரசு வேலைக்கான தேர்வெழுதியவர்களில் சிலர் பணிக்கான உத்தரவைப் பெறுவார்கள். தொழிற்கல்வியில் பயின்றுவரும் மாணவர்கள் புதிய கண்டுபிடிப்புகளைச் செய்வார்கள். அவர்களில் சிலர் காம்பஸ் செலக்ஷனில் வேலை வாய்ப்பையும் பெறுவார்கள். வீட்டில் சுபகாரிய நிகழ்ச்சிகள் நடக்கும். காதலர்கள் எண்ணம் கைகூடாது. நீண்டகாலமாக குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியர்கள் இறைவன் கருணையால் குழந்தை பாக்கியத்தை அடைவார்கள். குருபகவான் 8-ல் உள்ள இந்த நேரத்தில் வாகனங்களில் மிகவும் நிதானமாகச் செல்லவேண்டும்.
08-02-2016 முதல் 14-06-2016 வரை குரு, சுக்கிரன் சாரத்தில் வக்ரம்
இந்த காலகட்டத்தில் நீங்கள் எதிலும் நிதானத்துடன் செயல்பட வேண்டும். அண்டை அயலார், உற்றார்- உறவினர்கள் உங்களுக்கு உதவியாக இருக்கமாட்டார்கள். பேச்சில் மிகவும் நிதானம் வேண்டும். நீங்கள் நல்லது சொன்னாலும் பொல்லாததாக மாறும். அந்நிய மதத்தவர், அந்நிய மொழியினர் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள். எடுத்துக் கொண்ட முயற்சிகளில் வெற்றியைப் பெறலாம். சகோதரர்களிடையில் இருந்துவந்த கருத்து வேறுபாடு நீங்கும். வெளிநாடு சென்று படிக்க நினைத்த மாணவர்களின் எண்ணம் ஈடேறும். செய்யும் தொழிலில் அதிகமான லாபத்தைக் காண்பீர்கள். அடுத்தவர்கள் சொல்வதை காதில் போட்டுக்கொள்ளக் கூடாது. அரசுப் பணியாளர்கள் உங்கள் சக பணி யாளர்களிடம் எச்சரிக்கையுடன் பழகவேண்டும். பெண் பணியாளர்கள் உங்களுக்கு எதிராக மேலதிகாரிகளிடம் கோள் சொல்வார்கள். எனவே நிதானமான பேச்சால்தான் பணியில் நீங்கள் சிறக்க முடியும்.
15-06-2016 முதல் 09-07-2016 வரை குரு, சுக்கிரன் சாரத்தில் உலா
நீங்கள் பொறுமையாகச் செயல்பட்டு காரியங்களில் வெற்றியைக் காணவேண்டும். நீண்டகாலமாக காணாமல்போன பொருட்கள் வந்துசேரும். பெற்றோர்களுக்காக மருத்துவச் செலவுகள் செய்வீர்கள். தொழில் துறையில் போட்டியாளர்கள் அதிகம் உள்ளனர். எனவே டெண்டரை கவனித்துப் போடவேண்டும். வியாபாரிகள் புதிதாகக் கிளை துவங்கும் திட்டத்தை கொஞ்சகாலம் தள்ளிவைப்பது நல்லது. நஷ்டங்களைத் தவிர்க்கலாம். ஒருசிலர் வெளிநாடு செல்ல போட்ட திட்டம் நிறைவேறும். தூர தேசத்திலிருந்து நல்ல செய்திகள் வந்துசேரும். தொழிலதிபர்கள் அரசாங்கத்தில் எதிர்பார்த்த கடன் தொகைகள் வந்துசேரும். உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் உண்டு. கணவன்- மனைவியிடையே இருந்துவந்த பிணக்குகள் நீங்கும். வீட்டில் சுபகாரியப் பேச்சுகள் கைகூடும். குரு 8-ல் சுக்கிரன் சாரத்தில் இருக்கும்போது, மிகவும் கறுப்பாக உள்ள மணமகனைத் தேர்வுசெய்யாதீர்கள். உங்கள் வீட்டுப் பெண்ணுக்கு நல்ல வரனாகத் தேர்வுசெய்யுங்கள். பெற்றோர்கள் வழியில் இருந்துவந்த மருத்துவச் செலவுகள் குறையும்.
10-07-2016 முதல் 01-08-2016 வரை குரு, சூரியன் சாரத்தில் உலா
குரு பகவான் 8-ல் உள்ளார் என்பதை மறந்துவிடக்கூடாது. உங்கள் பேச்சால் குடும்பத்தில் குழப்பம் வரும். எனவே நிதானமாகப் பேச வேண்டும். குழந்தைகள் வழியில் கல்விச்செலவு கூடுதலாகும். பணவரவுகள் திருப்தி தரும். சிக்கனமாக இருக்கவேண்டும். பெற்றோர்கள் உங்களுக்கு உதவியாக இருக்கமாட்டார்கள். எனவே அவர்களிடம் பண உதவி கேட்காதீர்கள். சகோதரர்களிடையே வீண் சண்டைகள் வரவாய்ப்புகள் உள்ளன. எனவே அளவோடு பேசவேண்டும். கூட்டுத் தொழில் செய்கின்றவர்கள் கூட்டாளிகள் சொல்லும் கணக்குகளை படித்துப்பார்த்து கையெழுத்துப் போடுங்கள். அவர்களில் ஒருசிலர் பொய்க் கணக்கு சொல்லி ஏமாற்றிட வாய்ப்புகள் அதிகம் உள்ளன. எனவே யோசித்துச் செயல்படுங்கள். வீட்டில் சுபகாரியம் கைகூடும். குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கைகூடும். பிரிந்துவாழும் தம்பதியர்கள் ஒன்றுசேர்வார்கள். குரு 02-08-2016 முதல் உங்கள் ராசிக்கு 9-ல் வருவார். அதன் பலன்களை இப்போதே நீங்கள் உணர்வீர்கள். நல்ல பலன்களாக நடக்கும்.
அரசு ஊழியர்கள்
குரு 8-ல் வந்தாலும் அவர் உங்களுக்கு வேலைவாய்ப்புகளை சீராகத் தருவார். வேலைபார்க்கும் இடத்தில் வேலைப்பளு கூடுதலாகும். அதேநேரத்தில் உங்களுக்கு கிடைக்கவேண்டிய பதவி உயர்வு, ஊதிய உயர்வில் தடை எதுவும் வராது. கீழ்நிலை பதவியில் உள்ளவர்கள் அதிகமான வேலைப்பளுவை சந்திப்பீர்கள். அதற்கான பலனும் உங்களுக்கு வந்துசேரும். மாறுதலை வேண்டி காத்திருப்போருக்கு எதிர்பார்த்தபடி மாறுதல் வந்துசேரும். மனைவி, மக்கள் கேட்டதை வாங்கிக் கொடுப்பீர்கள்.
வியாபாரிகள்
எலக்ட்ரானிக் பொருட்கள் விநியோகம் செய்கின்றவர்கள், தரமுள்ள பொருட்களை வாங்கி விநியோகம் செய்யவேண்டும். உங்கள் பெயர் கெட்டுவிடாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும். டெலிவரியையும் உங்களது நேரடிப் பார்வையில் செய்யவேண்டும். கூட்டுத் தொழில் செய்கின்றவர்கள் உங்கள் சுய ஜாதகத்தைப் பார்த்துக்கொள்ள வேண்டும். 10-க்குரியவர் 6-ல், 6-க்குரியவர் 10-ல் வரக்கூடாது. அப்படி வந்தால் உங்களுக்கு கூட்டுத் தொழில் ஆகாது. எனவே நீங்கள் சுயமாகத் தொழில் செய்து முன்னேற வேண்டும். வாடிக்கையாளர்களை கூடுதலாகப் பெற்று, விற்பனையை அதிகம் செய்வீர்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். சீட்டு பிடிப்பவர்கள், ஏலச்சீட்டு நடத்துபவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.
தொழிலாளர்கள், தொழிலதிபர்கள்
குரு 8-ல் உள்ள இந்த நேரத்தில், தொழிலதிபர்கள், தொழிற்சங்கம் மற்றும் தொழிலாளிகளுடன் சுமுக உறவு வைத்துக்கொள்ள வேண்டும். மனசாட்சிப்படி தொழிலாளர்களுக்கு சேரவேண்டியதைக் கொடுத்தால், தொழிலாளிகள் பிரச்சினை எதுவும் வராது. தொழிலதிபர்கள் எதிர் பார்த்தபடி, அரசாங்கத்தில் புதிய கடனை அடைவார்கள். தொழிலாளி களுக்கு கிடைக்கவேண்டிய சம்பளம், போனஸ் வகைகள் தடையின்றிக் கிடைக்கும். பங்குதாரர்கள், தொழிலதிபர்கள் இடையே சுமுகமான உறவே நீடிக்கும். தொழில் தகராறுகள் எதுவும் தொழிற்சாலையில் ஏற்படாது. தீத்தடுப்பு சாதனங்கள் சரியாக உள்ளதா என்று பார்த்து வைத்துக்கொள்ள வேண்டும்.
பெண்கள்
பெண்களைப் பொறுத்தமட்டில் நீங்கள் உங்கள் உடல்நலனை பேணிக்காக்க வேண்டும். இனம்தெரியாத பயம் தோன்றும். ஆனால் உங்களது உடல்நிலையில் பாதிப்பு எதுவுமில்லை என்பதை உணர வேண்டும். மனதினால் ஏற்பட்ட நோய் என்பதை நீங்கள் உணர்ந்தால் மனத்தெளிவு பிறக்கும். உற்சாகமாகச் செயல்படுவீர்கள். பிள்ளைகள் வழியில் அதிக செலவுகள் உண்டு. ஆடம்பரச் செலவுகளைக் குறைக்க வேண்டும். திருச்செந்தூர் முருகன் உங்களுக்கு நல்ல பலன்களை வழங்குவார். உடன்பிறந்தவர்கள் உங்களுக்கு சாதகமாக இருக்க மாட்டார்கள். எனவே தாய்வழியில் வரவேண்டிய சொத்துகள் வந்து சேர்வதில் தாமதம் ஏற்படலாம். எதிலும் நம்பிக்கை வேண்டும். நம்பிக்கை யோடு, நிதானமாக நீங்கள் செயல்பட்டால் காரிய வெற்றியுண்டு.
மாணவர்கள்
குரு பகவான் 8-ல் உள்ளார். எனவே கல்வியில் நாம் உயர முடியாதென்று நீங்கள் நினைக்கக்கூடாது. உங்களது முயற்சியாலும் தன்னம்பிக்கையாலும் கல்வியில் உயர்ந்துவருவீர்கள். ஹாஸ்டலில் தங்கிப் படிக்கும் மாணவர்கள் வகையில் கல்வித்தடை எதுவுமில்லை என்றாலும் படிக்கட்டுகளில்- கட்டடத்தின் சுற்றுச்சுவர்களில் அமர்ந்து பேசக் கூடாது. கவனக்குறைவால் விபத்துகள் நேரலாம். எனவே பாதுகாப்பான இடங்களில் உட்கார வேண்டும். வாகனங்களில் அதிகமான வேகத்தை மேற்கொள்ளாதீர்கள். கோஷ்டிப்பூசலுக்குள் உங்களை இணைத்துக் கொள்ளக் கூடாது. கல்வி நிறுவனத்தின் தண்டனை உங்கள் கல்வியைக் கெடுக்கும். எனவே நீங்கள் உண்டு- உங்கள் வேலையுண்டு என்று மட்டும் செயல்பட வேண்டும்.
கலைஞர்கள்
இதற்கு முன்னர் சம்பாதித்ததைவிட இப்போது கூடுதலாக சம்பாத்தியம் செய்வீர்கள். உங்கள் நடிப்பு பளிச்சிடும். புதிய வாய்ப்புகள் அதிகம் உண்டு. வருமானத்திற்கும், சேமிப்பிற்கும் குறைவிருக்காது. காதல் திருமணம் செய்துள்ள ஒருசில பிரபல நடிகர்கள் மிகவும் எச்சரிக்கையாகச் செயல்பட வேண்டும். ஏனெனில் காதல் மனைவியால் பெருத்த இடையூறுகளை நீங்கள் சந்திப்பீர்கள். நாளேடுகளிலும், மற்ற இதழ்களிலும் விமர்சனம் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இப்போது நீங்கள் அமைதிகாத்து காரிய வெற்றியை அடையவேண்டும்.
விவசாயிகள்
8-ல் குரு உள்ள இந்த நேரத்தில் பணப்பயிர்கள் பயிரிடுவதை குறைக்கவேண்டும். கையிருப்பை வைத்து புதிய நிலம் வாங்கிப் போடுங்கள். மகசூலைப் பொறுத்தவரையில் குறைவாகவே லாபம் வரும். எனவே ஒரு போகம் மட்டும் பயிரிட்டு பலன்களை அடையலாம். அந்நிய மதத்தவர், அந்நிய மொழியினரால் தொழில் தனம் பெருகும். யாருக்கும் கடனுக்காக ஜாமீன் போடாதீர்கள். உங்கள் சொத்துக்களையும் அடமானம், ஈடு வைக்காதீர்கள். நண்பர்களுக்கு உதவப்போய் விளைநிலமும் வழக்கில் வந்துசேரும். எப்போதும் பயிரிடும் பொருட்கள் லாபத்தை தரும். வீட்டில் சுபகாரியப் பேச்சுகள் கைகூடும். பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்கு குறைவு வராது.
அரசியல் பிரமுகர்கள்
எந்தவொரு சொல்லையும் மிகவும் நிதானமாகக் கையாளவேண்டும். நீங்கள் யதார்த்தமாகப் பேசுவதுகூட மற்றவர்களுக்கு எரிச்சலை உண்டுபண்ணும். அவர்கள் தலைமையில் தேவையில்லாமல் சொல்லி வைப்பார்கள். உங்கள் உண்மையும் உழைப்பும் பயனின்றிப் போகலாம். நாவடக்கத்தோடு செயல்பட்டு காரிய வெற்றிகளை அடையவேண்டும்.
உத்திராட நட்சத்திரக்காரர்களுக்கு:
எப்போதுமே குருபகவான் உங்களுக்கு சாதகமாகவே இருப்பார். எனவே நீங்கள் எந்த காரியத்திலும் சிரமமின்றி வெற்றிகளைக் காண்பீர்கள். இந்த குருப்பெயர்ச்சி ஆண்டில் எல்லா வகையான நன்மைகளையும் அடைவீர்கள். திடீர் யோக பலன்கள் கிட்டும். வருமானம் எப்போதும்போல வந்துசேரும். நீங்கள் செய்யும் தொழில்கள் அனைத்திலும் வெற்றியைக் காண்பீர்கள். குடும்பத் தேவைகள் அனைத்தையும் பூர்த்திசெய்வீர்கள். 70 சதவிகித நன்மையுண்டு.
திருவோண நட்சத்திரக்காரர்களுக்கு:
குரு 8-ல் உள்ள இந்த நேரத்தில் நீங்கள் பயம்கொள்ளாமல் உங்கள் பணியை செய்யலாம். கூடுதல் லாபத்தையும் பெறுவீர்கள். மக்களால் மகிழ்ச்சி உண்டு. மற்றவர்கள் விமர்சனம் உங்களை பாதிக்காது. ஆனால் உதவிகேட்டு மற்றவர்கள்தான் உங்களைச் சுற்றியிருப்பார்கள். உங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். ஒருசிலர் வெளிநாடு சென்றுவருவார்கள். செல்வாக்கு கூடுதலாகும். வருவாய் கூடும். தொழில் சிறப்பும் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் மத்தியில் பிணக்குகள் எதுவும் வராது. 80 சதவிகித நன்மையுண்டு.
அவிட்ட நட்சத்திரக்காரர்களுக்கு:
குருபகவான் 8-ல் உள்ள இந்த நேரத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். வாகனங்களில் பார்த்துச்செல்ல வேண்டும். கை, கால்களில் பந்தனம் ஏற்படலாம். அரசு ஊழியர்களுக்கு வேலைப்பளு கூடும். கையூட்டு வாங்கும் ஒருசில அரசு ஊழியர்கள் பிரச்சினைகளில் மாட்டிக்கொள்ள வாய்ப்புகள் உள்ளது. எனவே 01-08-2016 வரை கையூட்டு பெறாமல் இருந்தால் அரசு நடவடிக்கையிலிருந்து தப்பலாம். உங்களுக்கு தொல்லை கொடுத்துவந்தவர்கள் விலகிச்செல்வார்கள். ஒருசிலருக்கு தொழிலில் கூடுதல் வருவாய் உண்டு. வீட்டில் சுபகாரிய நிகழ்ச்சிகள் நடைபெறும். 60 சதவிகித நன்மையுண்டு.
பரிகாரம்
முருகப் பெருமானையும், குருபகவானையும் தரிசித்து வரவேண்டும். முடியாதவர்கள் உங்கள் ஊர் அருகிலுள்ள தட்சிணாமூர்த்தியை வணங்கி வரலாம். வாய்ப்பு குறைவாக உள்ளவர்கள் 27 கொண்டைக்கடலையை எடுத்து மஞ்சள் துணியில் முடிந்து அதனை பர்சில், பையில், தொழிற்கூடத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். துன்பங்கள் விலகும்.
Post a Comment