கும்பம்
(அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய)
(அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய)
கும்ப ராசி அன்பர்களே!
குரு பகவான் 05-07-2015 முதல் 01-08-2016 வரை கும்ப ராசிக்கு 7-ல் அமர்ந்து அருள் பாலிக்க உள்ளார். இப்போது நீங்கள் நல்ல பலன்களை அடைவீர்கள். குரு 6-ல் அமர்ந்திருந்தபோது எந்த பக்கம் திரும்பினாலும், எந்தக் காரியம் செய்தாலும் தடை, தாமதங்களே ஏற்பட்டது. தற்போது 7-ல் அமர்ந்துள்ளதால் எல்லா நிலைகளிலும் உயர்வு வரும். கணவன்- மனைவி ஒற்றுமைக்குக் குறைவில்லை. இதுவரை குடும்பத்தில் உள்ள அனைவருமே ஏட்டிக்கு போட்டியாக நடந்துவந்தார்கள். இனி குடும்ப சீர்திருத்தத்தில் பங்குகொள்வார்கள். மணமானபின் கோபித்துக்கொண்டு சென்ற மருமகள் இப்போது திரும்பிவருவார். மகனும் மருமகளும் இனிமையாக குடும்பம் நடத்துவார்கள். குடும்பத்தில் ஒற்றுமையோடு குழந்தை பாக்கியமும் வந்துசேரும். அரசாங்கத்தில் எதிர்பார்த்த உதவிகள் கிட்டும். ஒருசிலர் ஓய்வுபெற்ற பின்னர் பணப்பலன்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டிருக்கும். அப்படிப்பட்டவர்கள் உடனடியாக பணப்பலன்களைப் பெறுவார்கள். வாகனம் வாங்க போட்ட திட்டம் நிறைவேறும்.
பெற்றோர்கள் வழியில் இருந்துவந்த மருத்துவச் செலவுகள் குறையும். பெற்றோர்களின் சொத்து உங்களுக்கு இனி தாமதமின்றிக் கிடைக்கும். இளைஞர்கள் வெளிநாடுபோய் சம்பாத்தியம் செய்ய போட்ட திட்டம் நிறைவேறும். ஒருசிலர் அரசுத் தேர்வெழுதி வெற்றியும் பெற்று, பணி வாய்ப்பையும் பெறுவார்கள். அலங்காரப் பொருட்கள் வியாபாரம் செய்கின்றவர்கள் கூடுதல் லாபத்தைப் பெறுவார்கள். வியாபாரிகள் கொள்முதல் செய்துவைத்த பொருட்கள் இரட்டிப்பான விலைக்கு விற்கும். ஒருசிலர் மறைமுகப் பொருள் விற்பனை செய்து லாபம் சம்பாதிப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் நேர்வழியில் வியாபாரம் செய்ய வேண்டும். ஒருசிலருக்கு காவல்துறை நடவடிக்கைகள் தேடிவரும். எனவே எச்சரிக்கையாக இருக்கவேண்டும். உடன்பிறந்தவர்கள் உங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பு தருவார்கள். தடைப்பட்டு நின்ற திருமணம் நடக்கும். உங்கள் உறவுகள், உங்களுக்கும் தாய்- தந்தையருக்கும் உதவிகரமாக இருப்பார்கள். குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியருக்கு உடனடியாக குழந்தை பாக்கியம் கிட்டும்.
தொழிலதிபர்கள் தங்கள் தொழிலை மேல்நாடுகளில் விரிவுபடுத்து வார்கள். அதற்கேற்ற தருணம் இது. வியாபாரிகள் தங்கள் விற்பனைக் கிளைகளை மேலும் பல நகரங்களுக்கு விரிவுபடுத்துவார்கள். கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். மற்றவர்களுக்கு பரிந்துசெல்லும் நிலையை மாற்றிக்கொள்ள வேண்டும். இப்போது நீங்கள் நல்ல பிள்ளையாக வாழ்ந்து, பின்வயதில் உங்கள் தேவைகளை வெளிநாடு சென்று சமாளிப்பீர்கள். கணவன்- மனைவி ஒற்றுமையில், பொருளாதாரப் பிணக்கு மட்டும் தொடர்ந்து இருந்து வருகின்றது. எனவே சிக்கனத்தைக் கடைப்பிடிக்கவேண்டும். அரசு ஊழியர்கள் மிகவும் சிக்கனத்தைக் கையாளவேண்டும்.
மருத்துவப் பரிசோதனைக்குச் செல்லும்போது உங்கள் பழைய ஆவணங்களையும் எடுத்துச்செல்ல வேண்டும். அது உங்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும். குடும்பத்தில் பொன், பொருள் சேர்க்கையுண்டு. தொல்லை கொடுத்துவந்த கடன் தொகைகள் பைசலாகும். நீண்டகாலமாக சுணங்கிவந்த காரியங்கள் அனைத்தும் வெற்றியாக மாறும். இப்போது குருபகவான் உங்கள் பக்கம் இருந்து அருள்பாலிக்கின்றார்.
05-07-2015 முதல் 23-08-2015 வரை குரு, கேது சாரத்தில் நேர்கதியில் உலா
இந்த காலகட்டத்தில் நீங்கள் திட்டமிட்டபடி எல்லா காரியத்திலும் வெற்றி கிடைக்கும். மருத்துவ சம்பந்தமான கல்விக்கு ஒருசிலர் தேர்வுபெறுவார்கள். காணாமல்போன உங்கள் மகன் இப்போது தேடிவருவார். காதலர்கள் எண்ணம் கைகூடாது. அரசுப்பணியில் உள்ளவர்கள் கேட்ட இடத்திற்கு மாறுதலை அடைவார்கள். கல்வி நிறுவனம் அமைக்க திட்டமிட்ட உங்கள் எண்ணம் ஈடேறும். கோர்ட் வழக்குகள் சாதகமாகும். வருமானம் சிறிது சிறிதாகக் கூடுதலாகும். சேமிப்புகள் உயரும். கணவன்- மனைவி ஒற்றுமையில் விரிசல்வராது. பிரிந்த தம்பதியர் ஒன்றுசேர்வார்கள்.
24-08-2015 முதல் 27-10-2015 வரை குரு, சுக்கிரன் சாரத்தில் நேர்கதியில் உலா
இந்த காலகட்டத்தில் நீங்கள் செய்கின்ற காரியம் அனைத்திலும் வெற்றியைக் காண்பீர்கள். உற்சாகமான மனநிலையில் இருப்பீர்கள். பண வரவுக்குப் பஞ்சமில்லை. வெளிநாட்டிலிருந்து உங்கள் பிள்ளைகள் நீங்கள் கேட்காமலேயே பணத்தை அனுப்பிவைப்பார்கள். புதிய சொத்துக்களை வாங்குவீர்கள். பொன், பொருள் சேர்க்கை திட்ட மிட்டபடி நடக்கும். தடைப்பட்டுவந்த சுபகாரியப் பேச்சுகள் கைகூடும். கும்ப ராசியில் பிறந்து திருமணத்திற்காக காத்திருக்கும் ஆண்- பெண் இருபாலருக்கும் திருமணம் முடியும். நல்ல வரன்களாக வரும். இதுவரை உங்களுக்கு எதிராகச் செயல்பட்டவர்கள் விலகிச்செல்வார்கள். வழக்குகள் பைசலாகும். சகோதரர்களுக்குள் இருந்துவந்த சொத்துப் பிரச்சினை சுமுகமான தீர்வுக்கு வரும். உடன்பிறந்தவர்கள் மத்தியில் ஏற்பட்ட குழப்பங்கள் தீரும்.
28-10-2015 முதல் 15-01-2016 வரை குரு, சூரியன் சாரத்தில் நேர்கதியில் உலா
இப்போது உங்கள் பணியில் கூடுதல் லாபங்கள் வந்துசேரும். உடல்நிலை சீராகும். காரிய வெற்றிகளும் காரிய பலிதமும் நடைபெறும். நிலம் வாங்கிச் சேர்ப்பீர்கள். ஒருசிலர் புதிய வீடுகட்ட போட்ட திட்டம் நிறைவேறும். ஆடை, ஆபரணங்கள் வாங்கிச்சேர்ப்பீர்கள். பிள்ளை களுக்கு திருமணப் பேச்சுகள் கைகூடும். நல்ல வரனாக அமையும். கணவன்- மனைவி நேசத்தோடு வாழ்வார்கள். பிரிந்துவாழ்ந்த தம்பதியர்கள் ஒன்றுசேர்வார்கள். நீண்டகாலமாக குழந்தை பாக்கியம் இல்லாத ஒருசிலருக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். இப்போது சொந்தங்கள் ஒருவருக்கொருவர் உதவிசெய்வார்கள். பொதுவாக இதற்கு முன்னர் உறவினர்கள் மத்தியில் நல்லபெயர் இல்லை. இப்போது கௌரவம் உயரும். விலகிச்சென்ற சொந்தங்கள் வந்துசேரும். அரசு வகையில் எதிர்பார்த்த உதவிகள் கிட்டும்.
16-01-2016 முதல் 07-02-2016 வரை குரு, சூரியன் சாரத்தில் வக்ரம்
இப்போது பூர்வீக சொத்துக்களில் உங்களுக்கு ஏற்பட்ட வில்லங்கம் நீங்கும். பிள்ளைகளுக்கு நீங்கள் எண்ணியபடி திருமணத்தை செய்துமுடிப்பீர்கள். விவசாயத்தில் அதிக விளைச்சல் உண்டு. கதிர் அறுக்கும் இயந்திரம், நவீனக் கருவிகளைக் கொண்டு விவசாயத் துறையை மேம்படுத்துபவர்கள் கூடுதல் லாபத்தைப் பெறுவார்கள். தொழில் சிறக்கும். தொழிலாளர்கள் ஒற்றுமையுடன் செயல்பட்டு கூடுதல் உற்பத்தியை செய்வார்கள். நீங்கள் திட்டமிட்டப்படியே எல்லா காரியங்களும் நடக்கும். வாகன விருத்தி உண்டு. ஒருசிலர் வெளிநாடு சென்று நல்ல வேலைவாய்ப்பையும் பெறுவார்கள். வழக்குகள் உங்களுக்கு சாதகமாக உள்ளது. தீர்வும் சாதகமாக வரும். எதிரிகள் தொல்லை அதிகமாக உள்ளது. எனவே பொதுச்சேவையில் உள்ளவர்கள் தக்க பாதுகாப்புடன் செல்வது நல்லது. அரசு ஊழியர் ஒருசிலர் தங்கள் சொந்த காரியத்துக்காக விருப்ப ஓய்வு பெறுவார்கள். யோசித்துச் செய்ய வேண்டும். பின்னாளில் கஷ்டம் குறையும்.
08-02-2016 முதல் 14-06-2016 வரை குரு, சுக்கிரன் சாரத்தில் வக்ரம்
மிகவும் கறுப்பாக உள்ளவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அவர்கள் உங்களை தவறான பாதைக்கு அழைத்துச் செல்வார்கள். உடல்நிலை சீராக இருக்கும். எப்போதும் மனம் தெளிவாக இருக்கும். துணிச்சலோடு பணிசெய்வீர்கள். அந்நிய மதத்தவர், அந்நிய மொழியினரால் உங்களுக்கு உதவியுண்டு. அவர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். செய்யும் காரியங்களில் அதிக லாபம் உண்டு. புதிய நூதனமான பொருட்களை வாங்கிச்சேர்ப்பீர்கள். வீட்டில் சுபகாரிய நிகழ்ச்சிகள் கைகூடும். மாமன், மைத்துனர் உறவுகள் சிறப்பாக இருக்கும். சகோதரர்கள் ஒற்றுமையுண்டு. சகோதரிகள் எதிரானவர்களாக இருப்பார்கள். எனவே அவர்களிடம் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். அவர்களாலும், அவர்கள் கணவராலும் தொல்லைகள் உண்டு. தொழில் வளம் சிறப்புண்டு. அரசுப் பணியாளர்கள் எதிர்பார்த்தபடி பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கும். தொழில் அதிபர்கள் வெளிநாட்டில் தொழில் துவங்க போட்ட திட்டம் நிறைவேறும். குடும்பத்தில் உள்ளவர்களின் அனைத்து தேவைகளும் நிறைவேறும்.
15-06-2016 முதல் 09-07-2016 வரை குரு, சுக்கிரன் சாரத்தில் உலா
இது வசந்த காலம். பலவழிகளில் பணம் வரும். பிள்ளைகளின் சுபகாரியப் பேச்சுகள் சுமுகமாக முடியும். நல்ல வரன்களாக அமையும். ஒருசிலர் வெளிநாடு போக போட்ட திட்டம் நிறைவேறும். படித்த இளைஞர்கள் அரசுத் தேர்வில் வெற்றிபெறுவார்கள். உரிய பதவியும் அடைவார்கள். புதிய வாகனம் வாங்க போட்ட திட்டம் நிறைவேறும். கூட்டுத் தொழில் செய்கின்றவர்கள் தங்கள் தொழிலை மேலும் விரிவாக்கம் செய்வார்கள். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். திட்டமிட்டபடி கூடுதல் மதிப்பெண்களைப் பெறுவார்கள். ஒருசிலர் நீதிபதிக்கான தேர்வெழுதி உத்தரவுக்காக காத்திருப்பார்கள். அவர்கள் ஜட்ஜ் பதவியை அடைவார்கள். உடன் பணிபுரிபவர்கள் இப்போது உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். அரசு ஊழியர்களுக்கு இந்தக் காலம் பொற்காலம். நினைத்தபடி மாறுதல், ஊதிய உயர்வு, பதவி உயர்வு வந்துசேரும்.
10-07-2016 முதல் 01-08-2016 வரை குரு, சூரியன் சாரத்தில் நேர்கதியில் உலாகுரு பகவான் 7ல் அமர்ந்துள்ள இந்த நேரத்தில் உங்கள் தேவைகள் அனைத்தையும் பூர்த்திசெய்வார். வீட்டில் சுபகாரியப் பேச்சுகள் நடக்கும். திருமணம் நல்லபடியாக நடக்கும். பெற்றோர் வகையில் ஏற்பட்ட மருத்துவச் செலவுகள் குறையும். சகோதரர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள். தொழிலில் இருந்த போட்டியாளர்கள் விலகிச் செல்வார்கள். தொழில் சிறக்கும். வருவாய் இரட்டிப்பாகும். நீங்கள் செய்துவரும் தொழில் நிலையான தொழிலாக மாறும். பிள்ளைகள் வழியில் இருந்துவந்த தொல்லைகள் நீங்கும். வெளிநாட்டுத் தொடர்புகள் லாபகரமானதாக அமையும். பிரிந்துவாழ்ந்த தம்பதியர் ஒன்றுசேர்வார்கள். வாட்டி வதைத்துவந்த உடல் பிணி நீங்கும். பணவசதிகள் கூடுதலாகும். பொன், பொருள் வாங்க போட்ட திட்டம் நிறைவேறும். குடும்ப உறுப்பினர்களின் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பிரிந்துவாழும் தம்பதியர்கள் ஒன்றுசேர்வார்கள். மாமியார்- மருமகள் சண்டை தீரும். குடும்பத்தில் எல்லா வகையிலும் தன்னிறைவு ஏற்படும். குடும்பம் குதூகலமாகும்.
அரசு ஊழியர்கள்
அரசுப் பணியாளர்களுக்கு இது ஒரு பொற்காலம். அவர்கள் விரும்பியபடி பதவி உயர்வு, பொருளாதார உயர்வு, வேண்டிய கடன்கள் அனைத்தும் வந்துசேரும். இப்போது பதவி உயர்வில் செல்பவர்கள் கடல் சார்ந்த பகுதி, மலை சார்ந்த பகுதிக்கு மாறுதல் பெறுவார்கள். செல்கின்ற இடத்தில் நல்ல மதிப்பு மரியாதையுடன் வாழ்வார்கள். தற்காலிகப் பணிநீக்கத்தில் இருந்த அரசு ஊழியர்கள் மீண்டும் வேலைவாய்ப்பைப் பெறுவார்கள். உங்களுக்கு தொல்லை கொடுத்துவந்த அதிகாரிகள் வேறிடத்திற்கு மாறுதலில் செல்வார்கள். எப்போதும் உற்சாகத்துடன் பணிசெய்வீர்கள். உத்தியோகத்தில் இருந்துவந்த வேலைப்பளு குறையும்.
வியாபாரிகள்
வியாபாரிகள் இந்த குருப்பெயர்ச்சி ஆண்டில் கூடுதல் லாபத்தைப் பெறுவார்கள். புதிதாக கிளைகள் துவங்க போட்ட திட்டம் நிறைவேறும். அந்த கிளையிலும் வியாபாரம் கூடுதலாகும். லாபம் கூடும். உங்கள் குடும்ப உறுப்பினர்கள் தேவைகள் முழுவதையும் பூர்த்திசெய்வீர்கள். வியாபாரம் செய்யுமிடத்தில் பொறுமையும், நிதானமும் கடைப்பிடிக்க வேண்டும். உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். வியாபாரிகள் எதிர்பார்த்த வங்கிக் கடன் கிடைக்கும். அது பயனுள்ளதாக அமையும்.
தொழிலாளர்கள்- தொழிலதிபர்கள்
தொழிலாளி- தொழிலதிபர்கள் ஆகிய இருதரப்பினரும் நன்கு இணைந்து செயல்படுவார்கள். உற்பத்தி கூடும். லாபம் பெருகும். தொழிலாளிகள் கேட்ட போனஸ், கடன், ஊதிய உயர்வு அனைத்தும் கிடைக்கும். தொழிற்சங்கப் பிரச்சினைகள் எதுவும் வராது. தொழிலதிபர்கள் தங்கள் தொழிலை விரிவுபடுத்த கேட்டிருந்த அரசுக் கடன் கிட்டும். மானியமும் கிட்டும். தொழிற்சாலை கணக்குக்கு வரவேண்டிய பழைய பாக்கிகள் அனைத்தும் வந்துசேரும். தடைப்பட்டுவந்த காரியங்கள் அனைத்தும் நடந்தேறும். பங்குதாரர்கள் கொடுத்துவந்த நெருக்கடி குறையும். புதிய பங்குதாரர்கள் வருகை சிறப்பாகும்.
பெண்கள்
கடந்த வருடம் குரு 6-ல் இருந்தபோது ஏற்பட்ட இருண்ட சூழ்நிலை மாறும். இப்போது உங்கள் உடல்நிலை சீராக இருக்கும். மனதில் தைரியம் வந்துவிடும். விலகிச்சென்ற சொந்தங்கள் வந்துசேரும். கணவன்- மனைவி உறவில் விரிசல் வராது. நீங்கள் பிள்ளைகளால் பெருமைப்படும் காலம். ஒருசிலரது பிள்ளைகள் மருத்துவப் படிப்புக்குச் செல்லும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. எப்போதும் உங்களை கேலி பேசிவந்தவர்கள் இப்போது உங்களின் அபாரமான முன்னேற்றத்தைக் கண்டு மரியாதையுடன் நடப்பார்கள். யாரும் நிரந்தரமாகக் கெட்டுப்போக மாட்டார்கள் என்பதை உங்கள்மூலம் உறவுகள் உணரும். சகோதர- சகோதரிகள் ஒற்றுமையுண்டு. விலகிச் சென்ற சொந்தங்கள் வந்துசேரும். குடும்பத்தில் சுபகாரிய நிகழ்ச்சிகள் நடக்கும்.
மாணவர்கள்
மாணவர்கள் கல்வியில் உயர்வார்கள். ஞாபக சக்தி கூடும். பள்ளியில் முதல் மாணவன் என்ற பெயர் வரும். இந்த நிலையை மாணவர்கள் கடைசிவரை கொண்டுசெல்வார்கள். ஹாஸ்டலில் படிக்கும் மாணவர்கள் சக மாணவர்களுடன் சண்டை போடுவது கூடாது. அது பின்னாளில் உங்கள் கல்வியை பாதியில் நிறுத்தும். ஒருசில மாணவர்களது பெற்றோரின் உடல்நிலையில் இருந்துவந்த மருத்துவச் செலவுகள் குறையும். ஒருசில மாணவர்கள் வெளிநாடு சென்று படிக்க போட்ட திட்டம் நிறைவேறும்.
கலைஞர்கள்
தொட்ட காரியம் அனைத்தும் துலங்கும். இந்த குருப்பெயர்ச்சிக் காலம் உங்களுக்கு பொற்காலம். நீங்கள் திட்டமிட்டபடி படவாய்ப்புகள் கூடும். அதில் வரும் வருமானத்தை பொன், நிலத்தில் போட்டு சேமிப்பீர்கள். ஆனந்தமான குடும்ப வாழ்க்கை அமையும். மனைவி மக்களுடன் மகிழ்ச்சியாக காலம் கழிப்பீர்கள். உரிய நேரத்தில் படத்தை முடித்துக் கொடுப்பீர்கள். கலைத்துறையில், காதல் திருமணம் செய்துகொண்ட அன்பர்களுக்கு மட்டும் இது போதாத காலம். அவர்கள் மத்தியில் இனங்காணாத பகை வளரும். ஒருவரையொருவர் தாக்கிப் பேசி பிரிந்துவிடுவார்கள். வம்பு, வழக்குகள் வரும். இந்த மாதிரி சூழ்நிலை ஒரு சில கலைஞர்களுக்கு ஏற்படும். அவர்கள் இந்த வருடத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.
விவசாயிகள்
விவசாயிகளுக்கு இது பொற்காலம். நீங்கள் எந்த மாதிரியான பயிர்களைப் பயிரிட்டாலும் அதில் கூடுதல் லாபத்தைப் பெறுவீர்கள். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்திசெய்வீர்கள். புதிய இடம் வாங்குவீர்கள். மக்களின் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பணப்பயிர்கள் பயிரிட்டு பன்மடங்கு லாபம் பெறலாம். வீட்டில் சுபகாரிய நிகழ்ச்சிகள் இனிதாக நடக்கும். புகையிலை பயிர்செய்வோர் இந்த ஆண்டு கூடுதல் மகசூல் பெறுவார்கள். நல்ல லாபத்தையும் அடைவார்கள்.
அரசியல் பிரமுகர்கள்
உங்கள் கருத்துகளை ஒதுக்கித்தள்ளிய மக்கள், இப்போது அதனை விரும்பிவந்து கேட்பார்கள். உங்கள் ஆலோசனைப்படி நடப்பார்கள். உங்களுக்கு எதிராகச் செயல்பட்டு வந்தவர்கள் விலகிச் செல்வார்கள். இப்போது நேரம் சிறப்பாக உள்ளது. எனவே உங்களுக்கு புதிய பொறுப்புகள் வரும். ஒருசிலர் வாரியத் தலைவர், அமைச்சர் ஆகும் யோகமும் உள்ளது. உடல்நிலையில் சற்று கவனம் செலுத்தவேண்டும்.
அவிட்ட நட்சத்திரக்காரர்களுக்கு:
குரு பகவான் 7-ல் உள்ள இந்த நேரத்தில் உங்களின் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பொன், பொருள் சேர்க்கையுண்டு. தாராளமாக செலவுசெய்ய பணம் பலவழிகளில் வந்துசேரும். வீட்டில் தடைப்பட்டு நின்ற சுபகாரியப் பேச்சுகள் கைகூடும். பிள்ளைகளுக்கு நல்ல வரன்களாக அமையும். உங்கள் வீட்டில் அடுத்தடுத்து சுபகாரியங்கள் நடக்கும். வழக்குகளில் இருந்துவந்த சொத்துப் பிரச்சினைகள் சுமுகமான முடிவுக்கு வரும். வெளிநாடு செல்ல நினைத்தவர்களின் எண்ணம் கைகூடும். பிரிந்துவாழ்ந்த பிள்ளைகள் இப்போது மனைவி, மக்களுடன் சேர்ந்து வாழ்வார்கள். ஆடம்பரப் பொருட்களை வாங்கிச்சேர்ப்பீர்கள். குலதெய்வ வழிபாடு தடையின்றி நடக்கும்.
சதய நட்சத்திரக்காரர்களுக்கு:
கடந்தகாலத்தில் அதிகமான சிரமத்தை அடைந்தீர்கள். இப்போது உங்கள் சொந்தத் தொழில் உயரும். கூடுதல் லாபத்தைப் பெறுவீர்கள். உறவினர்கள் உங்களுக்கு உதவிகரமாக உள்ளனர். பிள்ளைகளின் சுபகாரிய நிகழ்ச்சிகள் இனிதே நடக்கும். நல்ல வரன்களாக அமையும். தற்காலிக பணிநீக்கத்தில் உள்ள அரசு ஊழியர்கள் மீண்டும் வேலைவாய்ப்பை பெறுவார்கள். அரசுப் பணியில் இருந்துவந்த நெருக்கடியும், வேலைப்பளுவும் குறையும். கணவன்- மனைவி ஒற்றுமைக்கு குறைவில்லை. பிரிந்து வாழும் தம்பதியர் ஒன்றுசேர்வார்கள்.
பூரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு:
கடந்தகாலத்தில் குரு 6-ல் இருந்தபோது அதிகமான துயரங்களை அடைந்தீர்கள். நளச்சக்கரவர்த்தி தன் மனைவி, மக்களைவிட்டுப் பிரிந்ததுபோல நீங்களும் பிரிந்து வாழ்ந்து வருகின்றீர்கள். இந்த குருப் பெயர்ச்சியில் இந்த சூழ்நிலை மாறும். கணவன்- மனைவி ஒன்று சேர்வார்கள். தொழில் வளர்ச்சி கூடும். கூடுதல் லாபம் வரும். அரசு ஊழியர்கள் விரும்பிய இடத்துக்கு மாறுதல் அடைவார்கள். மாணவர்கள் கல்வியில் உயர்வார்கள். இப்போது நீங்கள் எடுத்துக்கொண்ட முயற்சிகள் எல்லாவற்றிலும் லாபத்தைப் பெறுவீர்கள்.
பரிகாரம்
உங்கள் அருகிலுள்ள தட்சிணாமூர்த்தியை வியாழக்கிழமைகளில் வழிபட்டு வர மேலும் விருத்திகள் வரும். 27 கொண்டைக்கடலையை எடுத்து மஞ்சள் துணியில் முடிந்து பர்சில், பையில் வைத்துக் கொள்ள வேண்டும். முருகப் பெருமானையும், அங்கு அமர்ந்துள்ள குரு பகவானையும் தரிசித்து வருவது நல்லது. தரிசித்தவர்களுக்கு மேலும் பலன் கிட்டும்.
Post a Comment