சிம்மம்
(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய)
(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய)
சிம்ம ராசி அன்பர்களே!
கடந்த ஒரு வருடமாக குருபகவான் உங்கள் ராசிக்கு 12-ல் அமர்ந்து விரயமாக உலாவந்தார். தற்போது குருபகவான் உங்கள் ராசியில் அமர்ந்து அதிகமான பலன்களைத் தருவார். அந்த பலன்கள் சற்று மந்தமாகவே இருக்கும். நீங்கள் அதிகம் முயற்சிகளை மேற்கொண்டால் மட்டுமே நல்ல பலன்களை அடையமுடியும். உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்தவேண்டும். "ராசியில் குரு வந்தால் சிறைப்பட வேண்டும்' என்பது ஜோதிடச் சொல். அதுபோல உங்கள் வாழ்வில் எதுவும் நடக்காது. நல்ல பலன்களாகவே நடந்து வரும். பொருளாதார வரவுகளில் தடை எதுவும் ஏற்படாது. குடும்பச் செலவுகளுக்கு தாராளமாக பணப்புழக்கம் ஏற்படும். குடும்பத்தில் உறவினர்கள் வருகைக்குப் பஞ்சமில்லை. தொல்லைகொடுக்கும் உறவினர்கள் வருவார்கள். உடன்பிறந்தவர்கள் மத்தியில் சுமுக உறவு உண்டு என்றாலும், இளைய சகோதரர்கள் உங்களுக்கு எதிராகவே செயல்படுவார்கள். அண்டை, அயலாரிடம் மிகவும் எச்சரிக்கையாகப் பழகவேண்டும். அரசு ஊழியர்கள் எதிர்பார்த்தபடி மாறுதல் கிடைக்கும். எதிர்பார்த்த பதவி உயர்வும் வந்துசேரும். உயரதிகாரிகள் கருணையுடன் நடந்துகொள்வார்கள். கையூட்டு பெறுகின்ற அரசு ஊழியர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கையூட்டு பெறுவதால் ஒருசிலர் காவல்துறை நடவடிக்கைக்கு ஆளாவார்கள். தற்காலிகப் பணிநீக்கம் போன்ற நிலைகளையும் அடைவார்கள். தொழிலாளிகள் வேலைப்பளுவை சந்திப்பார்கள். தொழிலதிபர்கள் அதிகமான உற்பத்தியையும் லாபத்தையும் பெறுவார்கள். பொதுவாக எச்சரிக்கையாகச் செயல்படுபவர்கள் கெடுதல் எதுவுமின்றி வாழ்வார்கள்.
05-07-2015 முதல் 23-08-2015 வரை குரு, கேது சாரத்தில் நேர்கதியில் உலா
இந்த காலகட்டத்தில் தொழில்துறையில் போதுமான வருமானம் ஏற்படும். தொழிலதிபர்கள் தங்கள் தொழிலுக்காக அரசாங்கக் கடன்களை தடையின்றிப் பெறுவார்கள். இப்போது நீங்கள் நிதானமாகச் செயல்பட்டு காரியங்களனைத்திலும் வெற்றியைக் காண்பீர்கள். ஒருசிலருக்கு தசாபுக்திப்படி திருமணம் கைகூடும். பெண்கள், கெட்டதையே அறியாத நல்ல கணவரை அடைவார்கள். அரசு ஊழியர்கள் விரும்பிய இடத்துக்கு மாறுதலாவார்கள். கொடுக்கல்- வாங்கல் தொழில் செய்கின்றவர்களின் தொழில் உயர்வு அடையும். அடிக்கடி தொந்தரவு கொடுத்து வந்த உடல்நிலையில் மாற்றம் ஏற்படும்.
24-08-2015 முதல் 27-10-2015 வரை குரு, சுக்கிரன் சாரத்தில் நேர்கதியில் உலா
இக்காலகட்டத்தில் லாகிரி வஸ்துக்கள் வியாபாரம் செய்கின்றவர் நிலையில் மாற்றம் உண்டு. பொருளாதார உயர்வும் ஏற்படும். உறவினர் களால் திடீர் வரவு- செலவுகள் ஏற்படும். அந்நிய மதத்தவர், அந்நிய மொழியினர் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். எதிர்பாராத திருப்பமாக வழக்குகளில் வெற்றியை அடையலாம்.
28-10-2015 முதல் 15-01-2016 வரை குரு, சூரியன் சாரத்தில் நேர்கதியில் உலா
குடும்ப உறுப்பினர்கள் தேவை முழுவதும் சீராகும். திடீரென புதிய பணவரவுகள் வந்துசேரும். பிள்ளைகள் வழியில் ஏற்பட்ட தொல்லை மாறும். இப்போது குடும்பத்திலுள்ள அனைவரும் தங்கள் வேலைகளை ஒழுங்காகச் செய்வார்கள். உடல்நிலையில் ஏற்பட்ட சிறு சிறு பிரச்சினைகள் மாறும். திருமணமாகாத பெண்களுக்கு நல்ல வரன்கள் அமையும். இதுவரை தடைப்பட்டுவந்த காரியங்கள் கைகூடும். ராசியில் குரு வந்த பலனாக திருமணமாகி, திருமண பந்தம் என்ற சிறைக்குள் போவீர்கள். சகோதரர்கள் மத்தியில் இருந்துவந்த சொத்துப் பிரச்சினைகள் மாறும். உங்கள் வீட்டில் தெய்வ அருள் கிட்டும். விலகிப் போன சொந்தங்கள் வந்துசேரும். காதல் திருமணம் செய்ய நினைத்தவர்களின் எண்ணம் கைகூடாது. கணவன்- மனைவிக்குள் சண்டை, சச்சரவுகள் எதுவும் வராது. தூரதேசத்தில் இருந்து கடிதத் தொடர்புகள் லாபத்தோடு வரும். நன்மையான செய்திகள் வந்துசேரும். பிரிந்துசென்ற தம்பதியர் ஒன்றுசேர்வார்கள்.
16-01-2016 முதல் 07-02-2016 வரை குரு, சூரியன் சாரத்தில் வக்ரம்
இப்போது நீங்கள் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். பணிபுரியும் இடம், வெளிவட்டாரத் தொடர்புகள், குடும்ப உறுப்பினர்கள் ஆகிய எல்லாரிடமும் நிதானமாகப் பேசவேண்டும். பெற்றோர்கள் வழியில் கூடுதலாக மருத்துவச் செலவுகள் வந்துசேரும். தொழில் துறையில் தொழிலதிபர்கள், கூடுதல் உற்பத்திமூலம் அதிகமான லாபத்தைப் பெறுவார்கள். தொழிலாளர்கள் ஒற்றுமையும் கைகூடும். உங்கள் உடன்பிறந்தவர்கள் இப்போது விட்டுக்கொடுத்துப் போவார்கள். சொத்துப் பிரச்சினை, எந்வொரு வழக்குமின்றி முடிவுக்கு வரும். அரசுப் பணியில் உள்ளவர்களுக்கு வேலைப்பளு கூடும். ஆனால் அதிகாரிகளின் அனுசரணையான பேச்சு தெம்பாக வேலைசெய்ய வைக்கும். கடைநிலை ஊழியர்களால் சிலர் தொல்லைகளை அனுபவிப்பார்கள். அவர்கள் கையூட்டுப்பெறும் பழி உங்கள்மீது வராமல் மிகவும் எச்சரிக்கையுடன் இருந்துகொள்ள வேண்டும். வெகுநாட்களாக நீங்கள் வெளிநாடு செல்ல போட்ட திட்டம் நிறைவேறும்.
08-02-2016 முதல் 14-06-2016 வரை குரு, சுக்கிரன் சாரத்தில் வக்ரம்
வெளிவட்டாரப் பழக்கம் உங்கள் மரியாதையைக் கூடுதலாக்கும். அண்டை, அயலார் உங்கள் வாக்குக்கு கட்டுப்பட்டு நடப்பார்கள். கடந்த காலங்களில் உங்கள் குடும்பத்தில் ஏற்பட்ட சிக்கல்கள் யாவும் நல்ல தீர்வுக்கு வரும். காணாமல்போன பொருட்கள் கிட்டும். மனதில் ஏற்பட்ட இருண்ட சூழ்நிலை மாறும். சுபகாரியப் பேச்சுகள் தொடங்கும். ஒருசிலருக்கு காலம்காலமாய் நடந்துவந்த வழக்குகள் சாதகமாகி விடுதலையும் கிட்டும். கை, கால்கள் முதல் உடல் முழுவதும் நோயால் பாதிக்கப்பட்டதாக நினைப்பீர்கள். ஆனால் உங்களுக்கு எந்த நோயும் இருக்காது. வீட்டிலுள்ளவர்கள் கேட்டதை வாங்கிக்கொடுப்பீர்கள். பிள்ளைகள் வழியில் ஏற்பட்ட மனக்குறைகள் நீங்கும். புதிதாக வியாபாரத்தைப் பெருக்க நினைத்தவர்களின் எண்ணம் நிறைவேறும்.
15-06-2016 முதல் 09-07-2016 வரை குரு, சுக்கிரன் சாரத்தில் உலா
இப்போது நீங்கள் எடுத்துக்கொண்ட செயல்களில் கூடுதலான லாபத்தை அடைவீர்கள். தொழில் துறை சிறப்படையும். பெண்கள் சிலர் தாய்வழி சொத்துக்களை அடைவார்கள். அந்நிய மொழியினரால் நல்ல லாபம் உண்டு. அவர்களரி சிலர் அதிக உதவிகளைப் பெறுவார்கள். அரசு ஊழியர்கள் இதுவரை எதிர்பார்த்துக் காத்திருந்த மாறுதல் உத்தரவு வந்துசேரும். ஒருசிலர் பதவி உயர்வையும் அடைவார்கள். மீன் பண்ணை வைத்து நடத்துபவர்கள் அதிகமான லாபத்தை அடைவார்கள். வெளி நாட்டுப் பயணம் செய்வார்கள். ஜூன் 2016 முதல் சொந்தத் தொழில் செய்யலாம்.
10-07-2016 முதல் 1-08-2016 வரை குரு, சூரியன் சாரத்தில் உலா
நீங்கள் முந்தைய காலங்களில் அடைந்த சிரமங்கள் குறையும். பிரிந்துசென்ற பிள்ளைகள் ஒன்றுசேர்வார்கள். வெளிநாடு செல்ல திட்டமிட்டவர்கள் முறையான விசா கிடைத்து வெளிநாடு செல்வார்கள். நீண்டகாலமாக உறவுப்பெண்ணை மணப்பதில் இருந்துவந்த தடை நீங்கும். உறவினர்கள் விருப்பத்தோடு உங்கள் திருமணம் முடியும். கடல்சார்ந்த தொழில் செய்கிறவர்கள் இப்போது அதிகமான லாபத்தைப் பெறுவார்கள். பொன், பொருள் வாங்க போட்ட திட்டம் நிறைவேறும். குடும்பத்தில் இருந்துவந்த சிறுசிறு சச்சரவும் விலகி நல்ல ஒற்றுமை ஏற்படும். அரசு ஊழியர்கள் விரும்பிய இடத்துக்கு மாறுதலில் செல்வார்கள். மனைவிக்கு ஏற்பட்டிருந்த உடல் நலக்குறைவுகள் சீராகும். ஒருசிலர் புதிய வீடுகட்டி குடிபோவார்கள். நீண்டநாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியர் சிலர் பிள்ளைப்பேறு அடைவார்கள். காதலர்கள் எண்ணம் கைகூடாது. மாடு, கன்று, பால் பாக்கிய விருத்தி ஏற்படும். பிள்ளைகள் கல்வியில் உயர்ந்து பெற்றோருக்கு பெருமைசேர்ப்பார்கள்.
அரசு ஊழியர்கள்
நிரந்தரமாகாத பணியாளர்கள் நிரந்தரப் பணியை அடைவார்கள். ஒருசிலர் எதிர்பார்த்தபடி மாறுதல் பெறுவார்கள். இப்போது உங்களுடன் பணிபுரியும் சக ஊழியர்கள் மிகவும் ஆதரவாக இருப்பார்கள். வரவேண்டிய நிலுவைத் தொகை, பதவி உயர்வுகள் வந்துசேரும். தொல்லை கொடுத்துவந்த அதிகாரிகள் மாறிச்செல்வார்கள். அரசாங்கத்தில் எதிர்பார்த்த கடன்கள் வந்துசேரும். குரு உங்கள் ராசியில் உலாவருவதால் கையூட்டு பெறுகின்ற ஒருசில ஊழியர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். தவறினால் காவல்துறை நடவடிக்கைகள் வர அதிகமான வாய்ப்புகள் உள்ளது.
வியாபாரிகள்
இப்போது நீங்கள் மிகவும் கனிவுடன் பேசி வாடிக்கையாளர்களைக் கவர்வீர்கள். பல வருடங்களாக வசூலாகாத நிலுவைத் தொகையினை பாக்கிதாரர்கள் வலியவந்து செலுத்துவார்கள். நீங்கள் உங்கள் வியாபாரத்தை திட்டப்படி விரிவுசெய்வீர்கள். சக போட்டி வியாபாரிகள் விலகிச்செல்வார்கள். கொள்முதல் செய்த பொருட்கள் யாவும் நல்ல விலைக்கு விற்கும்.
தொழிலாளர்கள், தொழிலதிபர்கள்
தொழிலாளர்கள் வேலைசெய்யும் இடத்தில் நிதானமாகச் செயல்பட வேண்டும். இப்போது நீங்கள் அதிகமான வேலைப்பளுவை சந்திக்க நேரும். தொழிற்சங்கத்தில் ஏற்படும் பிரச்சினைகள் சுமுகமாக முடியாது. எனவே தொழிலாளிகள் மிகவும் எச்சரிக்கையாகச் செயல்பட வேண்டும். தொழிலதிபர்கள்- தொழிலாளி ஒற்றுமை விரிசலடையும். எனவே யோசித்து முடிவுகளை எடுக்கவேண்டும். புதிய பங்குதாரர்களை சேர்க்கும் போது யோசித்துச் செய்யவேண்டும். அதுவே உங்களுக்கு சிரமத்தைக் கொடுக்கும். தொழிலதிபர்கள் கவனமுடன் செயல்படுவது நல்லது.
பெண்கள்
குடும்பத்தில் வாக்குவாதத்தைத் தவிர்க்க வேண்டும். இருந்துவரும் பிணி பீடைகள் கூடுதலாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஒருசிலருக்கு எந்த நோயும் இருக்காது. ஆனால் பிணி, பீடைகள் இருப்பதுபோல தோன்றும். அருகிலுள்ள தட்சிணாமூர்த்தியை வணங்குங்கள். மனபாரம் குறையும். கணவன்- மனைவி ஒற்றுமைக்கு குறைவிருக்காது. குழந்தை பாக்கியம் இல்லாத பெண்களுக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும். பிரிந்துசென்ற கணவன்- மனைவி ஒன்றுசேர்வார்கள். பொதுவாக முரட்டு குணமுள்ள பெண்கள் மென்மையான குணத்தோடு நடந்தால் மட்டுமே வாழ்க்கையை வளமாக்க முடியும். நிதானமாகச் செயல்பட வேண்டும்.
மாணவர்கள்
இப்போது நீங்கள் பாடத்தை ஒன்றுக்கு மூன்றுமுறை படிக்கவேண்டும். கடுமையான முயற்சியால் மட்டுமே நல்ல மதிப்பெண்களைப் பெற முடியும். ஒருசில மாணவர்களுக்கு தண்ணீர் கண்டம் உள்ளது. எனவே உல்லாசப் பயணம் செல்லும் நேரத்தில் நீர்நிலைகளில் விளையாடாமல் இருப்பது நல்லது. மற்றவர்கள் சொல்வதைக் கேட்டு நடக்கவேண்டும். மொத்தத்தில் நீங்கள் படிப்பில் மட்டும் கவனமாக இருக்க வேண்டும். தாய், தந்தையர் சொல்வதையும் கேட்டு நடக்கவேண்டும்.
கலைஞர்கள்
கலைஞர்களைப் பொறுத்த அளவில் போட்டி அதிகமிருக்கும். எனவே புதிய படவாய்ப்புகள் பெறுவதற்கு முயற்சிப்பதைவிட, உள்ள நிலையை மட்டும் சீராக வைத்துக்கொள்வது நல்லது. வரவைவிட செலவுகளே அதிகம் உள்ளது. உங்களைப் பற்றி மற்றவர்கள் விமர்சனம் செய்தாலும் வருத்தப்படாமல் இருக்கவேண்டும். அடுத்த ஆண்டு உங்க ளுக்கு யோக ஆண்டு. காலம் கனிந்து வரும்வரை காத்திருக்க வேண்டும்.
விவசாயிகள்
விவசாயம் செய்வோர் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். நல்ல மகசூல் பெற வேண்டுமென்றால், உங்களின் நேரடி கவனம் வேண்டும். பணப் பயிர்கள் பயிரிடுவோர் அதிகமான லாபத்தைப் பெறுவார்கள். ஒருசிலர் பிறர் சொத்தை வாங்குவார்கள். விவசாயத்தில் ஏற்றமான காலம் இது. மாடு, கன்று, பால் பாக்கிய விருத்தி ஏற்படும். ஒருசிலர் பால் பண்ணை வைத்து நடத்தும் வாய்ப்பு கூடிவரும். எப்போதும் கூலிவேலை செய்து வந்தவர்கள்கூட இப்போது சுயதொழில் செய்வார்கள். எப்போதும் வறுமைக் கோட்டுக்குக்கீழ் வாழ்ந்தவர்களும் ஏற்றம்பெறும் காலம்.
அரசியல் பிரமுகர்கள்
பொதுச்சேவையில் உள்ளவர்கள் மிகவும் கனிவானவர்களாக மாறுவார்கள். அரசியல் பிரமுகர்கள் நினைத்தபடி தலைமையிலிருந்து நல்ல பதவி வந்துசேரும். பொதுமக்கள் மத்தியில் உங்கள் சேவைக்கு நல்ல பாராட்டு உண்டு. அரசியலில் நீங்கள் எதிர்பார்த்தபடி வெற்றியைக் காண்பீர்கள். எதிர்ப்பாளர்கள் விலகிச்செல்வார்கள். நீங்கள் நினைத்தபடி காரிய வெற்றிகள் உண்டாகும்.
மக நட்சத்திரக்காரர்களுக்கு:
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சுய முயற்சியில் மேற்கொள்ளும் எல்லா காரியத்திலும் வெற்றியைக் காண்பீர்கள். இந்த ஆண்டு குரு பகவான் ராசியில் அமர்ந்துள்ளதால், நீங்களே உங்கள் காரியத்தில் முன்னின்று செயல்பட்டால் கூடுதல் லாபம் உண்டு. மற்றவர்களை நம்பக் கூடாது. கணவன்- மனைவி ஒற்றுமைக்காக விட்டுக்கொடுத்துப் போவது அவசியம். செலவுகள் கூடுதலாகின்றது. வருமானம் குறைகின்றது. எனவே நிதானித்துச் செயல்பட வேண்டும். அடுத்த ஆண்டு சிறப்பு. இவ்வாண்டு 60 சதவிகித ஆதாயம் கிடைக்கும்.
பூர நட்சத்திரக்காரர்களுக்கு:
மற்றவர்களுக்கு வாக்குறுதி கொடுக்காதீர்கள். வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் தாமதம் ஏற்படும். வாழ்க்கையில் பொருளாதாரப் பிரச்சினை இருக்காது. முன்னேற்றமாகவே உள்ளது. உங்களுக்கு எதிராகச் செயல்பட்டவர்கள்கூட இப்போது உங்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டுவார்கள். மக்கள் சேவையில் உள்ளவர்கள் புதிய பொறுப்புகளைப் பெறுவார்கள். குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் உண்டு. 75 சதவிகித நன்மையுண்டு.
உத்திர நட்சத்திரக்காரர்களுக்கு:
கணவன்-மனைவி உறவில் விரிசல் வராது. விட்டுக்கொடுத்துப் போவது நல்லது. குடும்பம் கெட்டால் குழந்தைகள் நலனும் கெடும் என் பதை உணரவேண்டும். தந்தை, மகன் உறவு சிறப்பாக இருக்காது. எனவே பிள்ளைகளால் தொல்லை வராத அளவில் பெற்றோர் இருக்கவேண்டும். தனிக்குடித்தனம் செல்ல ஆர்வம் காட்டும் பிள்ளைகளை அனுப்பி வைப்பது நல்லது. ஒருசிலர் மருத்துவ சிகிச்சைக்கு கூடுதல் செலவு செய்வார்கள். பயணத்தில் பொருட்களை மிகவும் விழிப்பாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். வழக்குகள் சாதகமாகும். பணியாளர்கள் கூடுதல் வருவாயைப் பெறுவார்கள். 80 சதவிகித லாபம் கிடைக்கும்.
பரிகாரம்
முருகப் பெருமானையும், அங்கே வீற்றிருக்கும் குரு பகவானையும் வணங்கி வர நன்மையுண்டு. இவ்வாண்டு சிறப்பாக இருந்திட 27 கொண்டைக்கடலை எடுத்து மஞ்சள் துணியில் முடிந்து, அதனை தங்கள்வசம் வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு வருடம் முடிந்த பின்பு அதனை கண்மாயில், ஏரியில், ஆற்றில் போடவேண்டும். (கடலில், கிணற்றில் போடக்கூடாது).

Post a Comment