Ads (728x90)

கடகம்
(புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய)

டக ராசி அன்பர்களே!

கடந்த ஒரு வருடமாக குருபகவான் உங்கள் ராசியில் அமர்ந்து உலா வந்தார். அப்போது அதிகமான சிரமத்தை அடைந்திருப்பீர்கள். மேலும் 16-12-2014 வரை அர்த்தாஷ்டமச் சனியும் நடந்தது. அதனால் ஏற்பட்ட விரயம் இனி சாதகமாகும். 05-07-2015 முதல் குரு பகவான் உங்கள் ராசிக்கு 2-ல் வருவது மிகச்சிறப்பு.

இப்போது தொட்ட காரியம் அனைத்திலும் வெற்றியைக் காண்பீர்கள். இந்த குருப்பெயர்ச்சி ஒரு வருடத்திற்கு மிகவும் யோகமான ஆண்டு. கடந்த காலத்தில் போட்டி, பகைகளை சந்தித்திருப்பீர்கள். கடன் தொல்லை, வேலை பாதிப்பு, தொழில் மந்தம் போன்ற நிலைகளை அடைந்திருப்பீர்கள். ஒருசிலர் வீண் விரயத்தையும், கண்டத்தையும் அடைந்திருப்பீர்கள். உற்றார்- உறவினர்கள் பகை ஏற்பட்டிருக்கக்கூடும். அந்த நிலைகள் மாறி நடப்பு குருப்பெயர்ச்சி நல்ல பலன்களாக அமையும். நின்றுபோன திருமணம் மீண்டும் கைகூடும். அடுத்தடுத்து பணவரவுகளைப் பெறுவீர்கள். இப்போது தொட்ட காரியம் அனைத்திலும் வெற்றிகிட்டுவதால், சுற்றியுள்ளவர்கள் மத்தியில் நல்ல அந்தஸ்தோடு வாழ்வீர்கள். லேவாதேவி, கொடுக்கல்- வாங்கல் செய்வோர் தொழில் உயரும். பழைய கடன் பாக்கிகளை நீங்கள் கேட்காமலேயே கொடுப்பார்கள். இதுவரை தொல்லை கொடுத்துவந்த மருத்துவச் செலவுகள் குறையும். உடல் ஆரோக்கியம் கூடும். தாய்- தந்தையர் வழியில் இருந்துவந்த மருத்துவச் செலவுகள் குறையும். வெளித்தொடர்பில் நண்பர்கள் உங்களுக்கு மிகவும் நேசமாக இருப்பார்கள். நீங்கள் நடத்த வேண்டிய மற்ற காரியங்கள் அனைத்தும் இனிதே நடக்கும்.

இதுவரை குலதெய்வத்தை தரிசிக்கமுடியாமல் இருந்தவர்கள், குலதெய்வ ஆலயத்துக்கு குடும்பத்தோடு சென்றுவருவீர்கள். பிரிந்துசென்ற கணவன்- மனைவி ஒன்றுசேர்வார்கள். நீண்ட காலமாக குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். வீட்டில் உறவினர்கள் வருகை கூடும். குடும்பத்தில் இருந்துவந்த குழப்ப நிலைகள் நீங்கும். சகோதரர்கள் வழியில் நிலவிவந்த சொத்துப் பிரச்சினை சுமுகமான தீர்வுக்கு வரும். அரசு ஊழியர்கள் வேண்டிய இடத்துக்கு மாறுதலை அடைவார்கள். தடைப்பட்டு நின்ற பதவி உயர்வு கிட்டும். பொன், பொருள் வாங்க போட்ட திட்டம் நிறைவேறும். விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் கூடுதல் மகசூலைப் பெறுவார்கள். போட்ட திட்டப்படி பிள்ளைகள் வெளிநாடு செல்வார்கள். நல்ல சம்பளத்தையும் அடைவார்கள். புதிய வீடுகட்டும் எண்ணம் கைகூடும். வீட்டின் கதவை மகாலட்சுமி வந்து தட்டுவார்.

தொழில் செய்பவர்கள் கூடுதலான லாபத்தைப் பெறுவார்கள். விலகிச் சென்ற பிள்ளைகள் மீண்டும் பெற்றோரிடம் வந்துசேர்வார்கள். எப்போதும் தீமையே செய்துவந்த சக பணியாளர்கள் இப்போது உங்களைவிட்டு விலகிச்செல்வார்கள். பணவசதி சரளமாகக் கிடைக்கும். இப்போது நீங்கள் சொல்வதை மற்றவர்கள் கேட்பார்கள். பிள்ளைகளால் நன்மைகள் ஏற்படும். தற்காலிகப் பணிநீக்கம் போன்ற தண்டனையை அடைந்தவர்கள் மீண்டும் பணியில் சேர்வார்கள். குடும்பத்தில் உள்ளவர்களின் தேவைகள் அனைத்தும் நிறைவேறும். அரசியலிலுள்ள வர்கள் நினைத்தபடி புதிய பதவிகளை அடையலாம். வெளிநாடு, வெளி மாநிலங்களில் வாழ்பவர்கள் லாட்டரிச் சீட்டில் முதல் பரிசை வெல்லக்கூடிய நிலை உள்ளது. ஆலய தரிசனம் அதிகமாக இருக்கும்.

05-07-2015 முதல் 23-08-2015 வரை குரு, கேது சாரத்தில் நேர்கதியில் உலா


இந்த காலகட்டத்தில் நீங்கள் மகிழ்ச்சியாக வாழ்வீர்கள். முன்பு இருந்துவந்த பணமுடைகள் நீங்கும். ஒருசிலருக்கு பணம் மூட்டையாகக் கிடைக்கும். சகோதரர்கள் உங்களுடன் நேசமாக வாழ்வார்கள். நீண்ட காலமாக பிரிந்துவாழ்ந்த தம்பதியர் ஒன்றுசேர்வார்கள். அதேபோல குழந்தையில்லாத தம்பதியர் குழந்தை பாக்கியத்தை அடைவார்கள். பணவசதியும், பொருளாதாரமும் உயரும். நண்பர்கள், அந்நிய மதத்தவர், அந்நிய மொழியினர் உங்களுக்கு எப்போதும் பக்கபலமாக இருப்பார்கள். அவர்களால் கூடுதல் வசதியும் கிட்டும். உடல்நலக் குறைவுகள் நீங்கி ஆரோக்கியமாக வாழ்வீர்கள். இதுவரை அரசு பதவி கிடைக்காதவர் களுக்கு, திறமைக்கேற்ப அரசுப் பதவி வரும். வெளிநாடு செல்வதில் இருந்துவந்த முட்டுக்கட்டை நீங்கும். குலதெய்வ ஆலயத்துக்கு சென்றுவர வழிபிறக்கும். குடும்பத்தில் சுபகாரிய நிகழ்ச்சிகள் கைகூடும். பிரிந்துசென்ற பிள்ளைகள் வந்துசேர்வார்கள். தூரதேசத்திலிருந்து நல்ல தகவல் வருவதுடன், பணவரவும் கிட்டும். அரசாங்கத்தில் இருந்து வர வேண்டிய சலுகைகள் வந்துசேரும். வழக்குகள் சாதகமாகும். காதல் திருமணம் செய்ய நினைத்தவர்களின் எண்ணம் கைகூடும். எந்திரம், கருவிகள், பூச்சி மருந்து வியாபாரம் செய்கிறவர்கள் கூடுதல் லாபத்தைப் பெறுவார்கள். வியாபாரிகளுக்கு போட்டியாக இருந்துவந்த வியாபாரிகள் விலகிச்செல்வார்கள். வருவாய் கூடும் இந்தநேரத்தில் சேமிப்பும் உயரும். பிள்ளைகளின் உயர்கல்விக்கு தாரளமாக செலவு செய்வீர்கள். அவர்களும் நல்ல முறையில் படிப்பார்கள்.

24-08-2015 முதல் 27-10-2015 வரை குரு, சுக்கிரன் சாரத்தில் நேர்கதியில் உலா


இந்த காலகட்டத்தில் நண்பர்களால் வெளிவட்டாரத் தொடர்புகள் அனுகூலமாகும். கடிதத் தொடர்புகளில் நல்ல தகவல் வந்துசேரும். இதுவரை உங்களுக்கு தொல்லை கொடுத்துவந்த நோய்த் தாக்கம் குறையும். அந்நிய மதத்தவர், அந்நிய மொழியினரால் அதிக லாபங்கள் வந்துசேரும். நீங்கள் முயற்சித்த காரியங்கள் அனைத்திலும் வெற்றியைக் காணலாம். போட்டி பந்தயங்களில் நல்ல வெற்றி வாய்ப்பைப் பெறுவார்கள். ஒருசில மாணவர்கள் வெளிநாடு சென்று படிக்க போட்ட திட்டம் நிறைவேறும். இதுவரை தொல்லை கொடுத்துவந்த நீதிமன்ற வழக்குகள் உங்களுக்கு சாதகமாகும். உடன் பிறந்த சகோதரர்கள் தங்களது முந்தைய செயலுக்கு  வருத்தப்பட்டு, உங்களிடம் நேசத்தோடு பழகுவார்கள். உடன்பிறந்த சகோதரிகள் கொடுத்துவந்த தொல்லைகளை நிறுத்திக்கொள்வார்கள். எதிர்பாராத வரவுகள் வந்துசேரும். இளைஞர்கள் வெளிநாடு சென்று பொருளீட்டுவார்கள். தொழிலதிபர்கள் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெற்று கூடுதல் லாபத்தை அடைவார்கள்.

28-10-2015 முதல் 15-01-2016 வரை குரு, சூரியன் சாரத்தில் நேர்கதியில் உலா


இந்த காலகட்டத்தில் நீங்கள் தொட்ட காரியம் அனைத்திலும் வெற்றியைக் காண்பீர்கள். புதிய வண்டி, வாகனம் வாங்க போட்ட திட்டம் நிறைவேறும். ஒருசிலர் புதிய வீடு கட்ட போட்ட திட்டம் நிறைவேறும். மேலும் சிலர் புதியவீட்டை விலைக்கு வாங்குவார்கள். உங்கள் வீட்டருகில் குடியிருந்து தொல்லை கொடுத்துவந்தவர்கள் வீடு மாற்றம் செய்து செல்வார்கள். மாடு, கன்று பால் பாக்கிய விருத்தி உண்டு. விவசாயிகள் பணப்பயிர்களைப் பயிரிட்டு அதிகமான லாபத்தைப் பெறுவார்கள். பிள்ளைகள் வெளிநாடு செல்ல போட்ட திட்டம் நிறைவேறும். காலம் காலமாய் இருந்துவந்த கோவில் சண்டை முடிவுக்கு வரும். ஒருசிலர் கோவிலை நிர்வகிக்கும் பொறுப்பை மீண்டும் பெறுவார்கள். பாதியில் நின்றுவிட்ட திருமணம் இனிதே கைகூடும். கடந்தகாலத்தில் காணாமல்போன பிள்ளைகள் வந்துசேர்வார்கள். தாய்- தந்தை வழியில் இருந்துவந்த மருத்துவச் செலவுகள் குறையும்.

16-01-2016 முதல் 07-02-2016 வரை குரு, சூரியன் சாரத்தில் வக்ரம்


அரசுப் பணியாளர்களுக்கு இந்த காலகட்டம் ஒரு பொற்காலம். எதிர்பார்த்த இடத்துக்கு மாறுதல் வந்துசேரும். அதேபோல எதிர்பார்த்த பதவி உயர்வும் கிட்டும். தற்காலிகப் பணிநீக்கம் போன்ற தண்டனையை அடைந்தவர்கள் மீண்டும் பணியில் சேர்வார்கள். பெற்றோர்களால் நல்ல பலன்கள் வந்துசேரும். மணமான பெண்கள் கணவனுடன் இணக்கமாக வாழ்வார்கள். பழைய சண்டை சச்சரவுகள் நீங்கும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் குழந்தை பாக்கியத்தை அடைவார்கள். ஆண் வாரிசு வேண்டித் தவம்செய்தவர்களுக்கு, இப்போது ஆண் வாரிசு உருவாகும். ஏட்டிக்குப் போட்டியாக இருந்துவந்த பிள்ளைகள் தொல்லை தராமல் நல்லவர்களாக வாழ்வார்கள். வாகனம் வைத்துத் தொழில்செய்கின்றவர்கள் புதிய ஒப்பந்தம் மூலம் கூடுதல் வருவாயைப் பெறுவார்கள். பிரிந்துவாழ்ந்த தம்பதியர் ஒன்றுசேர்வார்கள்.     

08-02-2016 முதல் 14-06-2016 வரை குரு, சுக்கிரன் சாரத்தில் உலா


 இந்த காலகட்டத்தில் தொழிலதிபர்கள், தொழிலாளிகள் ஒற்றுமை ஏற்பட்டு உற்பத்தியும் பெருகும். லாகிரி வஸ்துகள் விற்பனை செய்கிறவர்கள் கூடுதல் லாபத்தைப் பெறுவார்கள். அண்டை, அயலார் உங்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்வார்கள். உடல் ஊனமுற்றவர்கள் தேடிய அரசுப் பதவி வந்துசேரும். கணவன்- மனைவியிடையே இருந்துவந்த நீண்டகாலப் பிணக்குகள் மாறும். ஒற்றுமையுடன் வாழ்வார்கள். பகைவர்கள் விலகிச்செல்வார்கள். பிரிந்துவாழும் தம்பதியர் களிடையே, விவாகரத்து வழக்கு இருந்தாலும் ஒன்றுசேர்வார்கள். ஒரு சிலரது தாயும், தந்தையும் ஒரே நேரத்தில் விபத்தை சந்திக்க நேரும். எனவே பிள்ளைகள் அவர்களை வசைபாடாது இருப்பது நலம். மாமியார் கொடுமையால் பிரிந்துவந்த பெண்கள் மீண்டும் கணவரோடு சேர்வார்கள்.

15-06-2016 முதல் 09-07-2016 வரை குரு, சுக்கிரன் சாரத்தில் உலா


இந்த காலகட்டத்தில் உங்கள் பிள்ளைகளால் பெருமைகள் வந்துசேரும். பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்றுத் தேர்ச்சிபெறுவார்கள். சகோதரர்கள் ஒற்றுமையுடன் இருப்பார்கள். இரு சக்கர வாகனம், கார் வாங்க போட்ட எண்ணம் ஈடேறும். அன்றாட வரவுகள் கூடும். செய்யும் தொழிலில் ஏற்றம் காணலாம். தொழில் துறையில் நல்ல முன்னேற்றம் காணப்படும். நீண்ட வருடங்களாக பார்க்காத உறவுகளை இப்போது பார்ப்பீர்கள். அவர்களின் வற்புறுத்தலால் வீட்டில் சுபகாரியப் பேச்சுகள் சுமுகமாக முடியும். அரசுப் பணிக்கு முயற்சித்தவர்களின் எண்ணம் ஈடேறும். தொல்லைதந்தவர்கள் விலகிச்செல்வார்கள். கொடுக்கல்- வாங்கலில் சுமுகமான நிலை ஏற்பட்டு வரவுகளும் கூடும். 

10-07-2016 முதல் 01-08-2016 வரை குரு சூரியன் சாரத்தில் உலா


இப்போது உங்கள் எண்ணங்கள் அனைத்தும் நிறைவேறும். குடும்பத்தில் அளவில்லாத மகிழ்ச்சியுண்டு. எங்கு பார்த்தாலும் உறவுகளின் ஆதரவுண்டு. உங்கள் பெண்ணே வேண்டாமென்று சொன்ன உறவுகள் தேடிவந்து உறவுகொள்வார்கள். தங்கள் பிள்ளைக்கு திருமணமும் செய்வார்கள். சகோதரர்கள் வழியில் இருந்துவந்த பிணக்குகள் நீங்கும். அதிகாரிகளின் ஆதரவில், அரசு ஊழியர்கள் கெடுபிடி இல்லாமல் வாழ்வார்கள். தொழில் துறையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். அயல்நாடு செல்ல போட்ட திட்டப்படி இளைஞர்கள் பயணிப்பார்கள். அப்படிச் செல்கின்றவர்கள் பெற்றோர்களின் ஆசிர்வாதத்தையும் பெற்றுச் செல்லவேண்டும். திருமணமாகாமல் உள்ள இளைஞர்களுக்கு திருமணம் கைகூடும். ஈடுபடும் காரியங்கள் அனைத்திலும் எளிதில் வெற்றிபெறுவார்கள்.

அரசு ஊழியர்கள்


பொதுவாக இது அரசு ஊழியர்களுக்கு உகந்த குருப்பெயர்ச்சியாகும். இதுவரை தடைப்பட்டுவந்த பதவி உயர்வு, ஊதிய உயர்வு அனைத்தும் வந்துசேரும். விரும்பிய இடத்துக்கு மாறுதலும் கிட்டும். பணிபுரியும் இடத்தில் இருந்துவந்த பணிச்சுமை குறையும். சக பணியாளர்கள் ஒத்துழைப்பு கிட்டும். தொல்லை கொடுத்துவந்த அதிகாரிகள் மாறுதலில் செல்வார்கள். தற்காலிகப் பணிநீக்கத்தில் உள்ளவர்கள் மீண்டும் பணியில் சேர்வார்கள். 

வியாபாரிகள்


வியாபாரிகள் புதிய கிளைகள் துவங்க போட்ட திட்டம் நிறைவேறும். தொல்லை கொடுத்துவந்த போட்டி வியாபாரிகள் விலகிச்செல்வார்கள். புதிய வாடிக்கையாளர்கள் வந்துசேர்வார்கள். ஒருசிலர் தற்போதுள்ள கடையை விரிவுபடுத்திட போட்ட திட்டம் நிறைவேறும். சந்தை வியாபாரிகள் கூடுதல் லாபத்தைப் பெறுவார்கள். கொள்முதல் செய்த பொருட்கள் அனைத்தையும் விற்பனை செய்துவிடுவீர்கள். நடைபாதை வியாபாரிகளுக்கு வியாபாரம் பெருகும். வேண்டிய வங்கிக் கடன் கிடைத்து தொழிலை விரிவுசெய்வீர்கள்.

தொழிலாளர்கள், தொழிலதிபர்கள்


இந்த குருப்பெயர்ச்சி காலத்தில் புதிய ஒப்பந்தங்கள் வந்துசேரும். ஒருசிலர் வெளிநாட்டில் தொழில் துவங்க போட்ட திட்டம் நிறைவேறும். தொழிலாளிகள் ஒற்றுமையால் உற்பத்தி இருமடங்காகும். யூனியன் சம்பந்தப்பட்ட பேச்சு வார்த்தைகள் சுமுகமாகும். இதுவரை இருந்துவந்த கூடுதல் வேலைப்பளு குறையும். முதலாளி- தொழிலாளர் ஒற்றுமை கூடும். வரவேண்டிய போனஸ், ஊதிய உயர்வு, பதவி உயர்வு கேட்காமலேயே வந்துசேரும். விலகிச் சென்ற பங்குதாரர்கள் மீண்டும் வந்துசேர்வார்கள்.

பெண்கள்


பெண்களுக்கு, இதுவரை பட்ட துன்பத்திலிருந்து விடுதலை கிடைக்கும். நாளைய பொழுதுக்கு என்ன செய்வோம் என்று இருந்திருப்பீர்கள். இப்போது வருவாய் அதிகரித்து தேவைகள் பூர்த்தியாகி, சேமிப்பும் உயரும். வீட்டில் சுபகாரியப் பேச்சுகள் நடக்கும். வீட்டுக்கு அடங்காமல் இருந்துவந்த உங்கள் பிள்ளை இப்போது நல்ல வராக வாழ்வார். பொன், பொருள் சேர்க்கை உண்டு. ஆடை, ஆபரணப் பெருமையோடு வாழ்வீர்கள். பிரிந்துவாழ்ந்த தம்பதியர்கள் ஒன்றுசேர் வார்கள். பாதியில் நின்றுவிட்ட வீடுகட்டும் பணி தொடரும். கணவன்- மனைவி ஒற்றுமை கூடும். பெண்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி பொற்காலம். 

மாணவர்கள்


மாணவர்கள் கல்வியில் எதிர்பாராத முன்னேற்றத்தை அடைவார்கள். தொழில்துறை சம்பந்தப்பட்ட உயர்கல்வியில் உள்ளவர்கள் புதிய கண்டு பிடிப்புகளைச் செய்வார்கள். மாணவர்கள் உயர் படிப்புக்கு கல்விக்கடன் தடையின்றி கிடைக்கும். உயர்கல்வியில் உள்ள ஒருசிலர் காம்பஸ் செலக்ஷனில் தேர்வுபெறுவார்கள். ஒருசிலர் கல்வி முடிந்தவுடன் வெளிமாநிலம் அல்லது வெளிநாட்டில் பணிக்குச் செல்வார்கள். ஆசிரியர்- மாணவர்கள் நல்லுறவு நீடிக்கும்.

கலைஞர்கள்


கலைஞர்களுக்கு இது ஒரு பொன்னான குருப்பெயர்ச்சியாகும். புதிய படவாய்ப்புகள் வந்துசேரும். அயல்நாட்டுப் படப்பிடிப்புகள் தொடரும். உங்கள் படம் மக்கள் மத்தியில் வெற்றியடையும். கூடுதல் வசூல் கிடைக்கும். சிறிய பட்ஜெட் படங்கள்கூட கூடுதல் வசூலை அள்ளித்தரும். தியேட்டர்களில் கூட்டம் அலைமோதும். முன்னணி நடிகர்களில் ஒரு சிலர் காதல் சம்பந்தப்பட்ட வழக்குகளைச் சந்திப்பார்கள். நடிகைகள் எதிர்பார்த்தபடி புதிய படங்கள் ஒப்பந்தமாகும்.

விவசாயிகள்


விவசாயிகள் பணப்பயிர்களில் கூடுதல் லாபம் அடைவார்கள். விவசாயமும் செழிப்பாக நடைபெறும். இப்போது நீங்கள் பிறர் சொத்தை வாங்கக்கூடிய நிலை உள்ளது. நல்ல விலையோடு வரும் சொத்துக்களை வாங்கிச்சேர்ப்பீர்கள். கிணற்றில் நீர் இல்லையே என்கிற கவலை மாறும். விவசாயிகளுக்கு இது ஒரு பொற்காலம். வீட்டில் சுபகாரிய நிகழ்ச்சிகள் திட்டமிட்டபடி நடக்கும்.

அரசியல் பிரமுகர்கள்


உங்களுக்கு தொல்லை கொடுத்துவந்த எதிரிகள் விலகிச்செல்வார்கள். பொதுமக்கள் மத்தியில் உங்கள் பொதுப்பணி அங்கீகாரத்தைத் தரும். ஏற்கனவே எம்.எல்.ஏ-வாக உள்ள ஒருசிலர் திடீர் அதிர்ஷடத்தைப் பெறுவார்கள். அமைச்சர் போன்ற பொறுப்புகளையும் அடைவார்கள். எதிர்கொள்ளும் அரசியல் களத்தில் வெற்றியைப் பெறுவார்கள்.

புனர்பூச நட்சத்திரக்காரர்களுக்கு:

புனர்பூசம் 4-ஆம் பாதத்தில் பிறந்த நீங்கள் செய்ய வேண்டிய காரியம் அனைத்தையும் செய்துமுடிக்க உகந்த நேரம். நீண்ட காலமாக குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். தொழிலில் இருந்துவந்த போட்டிகள் குறையும். தூரதேசத்திலிருந்து நல்ல செய்திகள் வந்துசேரும். நீதிமன்ற வழக்குகள் உங்களுக்கு சாதகமாக அமையும். பிள்ளைகள் வழியில் தடைப்பட்டு வந்த சுபகாரியப் பேச்சுகள் கைகூடும். வீட்டில் மங்கள நிகழ்ச்சிகள் இனிதே நடக்கும். பிரிந்துவாழும் தம்பதியர்கள் பேச்சுவார்த்தை எதுவுமின்றி ஒன்றுசேர்வார்கள். பொன், பொருள், ஆபரணச் சேர்க்கை உண்டு. 80 சதவிகித லாபம் கிடைக்கும்.

பூச நட்சத்திரக்காரர்களுக்கு:


நீங்கள் சோதனைகள் எத்தனை வந்தாலும் கடந்துவிடும் மனப்பக்குவம் உள்ளவர்கள். இதுவரை நீங்கள் பட்ட வேதனை யாவும், சாதனையாக மாறும். விட்டுச்சென்ற சொந்தங்கள் விரும்பி வந்துசேரும். எதிர்பார்த்த அரசுப் பதவி கிடைக்கும். அரசு ஊழியர்கள் கேட்ட இடத்திற்கு மாறுதலை அடைவார்கள். தொழிலில் இருந்துவந்த போட்டி விலகும். செய்யும் தொழிலில் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். உடல்நிலையில் இருந்துவந்த சிரமங்கள் மாறி, உடல்நிலை சீராகும். மருத்துவச் செலவுகள் குறையும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் வந்துசேரும். செவ்வாய் நட்பு, உச்சம், ஆட்சியில் இருந்தால் சகல சம்பந்தத்தோடு உள்ள மனைவியை அல்லது கணவரை அடைவீர்கள். ஜனன ஜாதகத்தில் செவ்வாய் பாதிப்பிருந்தால் உங்களைவிட வசதிக் குறைவான இடத்தில் வரன் தேடவேண்டும். 95 சதவிகிதம் வரை நன்மைகள் உண்டு.

ஆயில்ய நட்சத்திரக்காரர்களுக்கு:


எந்த தோஷம் இருந்தாலும் அத்தனை தோஷமும் உங்கள் நட்சத்திரத்தை பாதிக்காது. நீங்கள் திட்டமிட்டபடி உங்களுக்கு வேலைவாய்ப்பு கிட்டும். எதிர்பார்த்த பெண்ணைத் திருமணம் செய்வீர்கள். குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். எதிர்பாராத வகையில் உறவினர்கள் உங்களுக்கு உதவி செய்வார்கள். காலம்காலமாய் தொல்லை கொடுத்துவந்த பூர்வீக சொத்துகள் பிரிவினை சுமுகமாக நடக்கும். வழக்குகள் சாதகமாகும். அரசு ஊழியர்கள் வேலை செய்யும் இடத்திலுள்ள பெண் ஊழியர்களிடம் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். அவர்களால் உங்களுக்கு தொல்லைகள் வரலாம். உடல்நிலை சீராகும். கடன் தொல்லைகள் மறையும். உடன்பிறந்தவர்கள் மத்தியில் உங்கள் மதிப்பு கூடுதலாகும். 90 சதவிகித ஆதாயம் உண்டு.

பரிகாரம்:


27 கொண்டைக்கடலை எடுத்து மஞ்சள் துணியில் முடிந்து உங்கள் பர்சில் அல்லது பையில் வைத்துக்கொள்ளுங்கள். எல்லாவற்றிலும் வெற்றியைக் காண்பீர்கள். முடிந்தவரை தட்சிணாமூர்த்தியை வணங்கி வரவேண்டும். சிறப்பு பரிகாரம் எதுவும் அவசியமில்லை.

Post a Comment

Recent News

Recent Posts Widget