மீனம்
(பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)
(பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)
மீன ராசி அன்பர்களே!
உங்களுக்கு 16-12-2014-ல் அஷ்டமத்துச் சனி முடிந்துவிட்டது. இதுவே ஒரு பெரிய மகிழ்ச்சிக்குரிய விஷயம். தற்போது குரு 5-7-2015 முதல் உங்கள் ராசிக்கு 6-ல் வருகிறார்.
6-ஆம் இடத்தில் குரு வந்தால் கை, கால்களில் பந்தனம் ஏற்படும் என்று ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளது. 6 என்பது ருண, ரோக, சத்ரு ஸ்தானம் ஆகும். அங்கு குரு வந்துவிட்டதால் நாம் கால்கள் உடைந்து படுத்து விடுவோமோ என்று நினைக்கக்கூடாது. ஒருசிலருக்கு 6-ல் உள்ள குருபகவான் கடன் தொந்தரவுகளைக் கொண்டு வருவார். எனவே எப்போதும் சிக்கனமாக நடந்துகொள்ள வேண்டும். கடன் தொல்லைகள் வராமல் சிந்தித்துச் செயல்பட வேண்டும். ஒருசிலருக்கு கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாட்டைக் கொடுத்து கடன் கவலைக்கு சமமான கஷ்டங்களை மட்டும் கொடுப்பார். எப்போதும் வாழ்க்கையில் யார் சொல்லையும் கேட்காது, தான் என்ற அகங்காரத்துடன் இருப்பவர்கள் மட்டும் விபத்தைச் சந்திப்பார்கள். வாகனம் ஓட்டிச் செல்லும்போது எப்போதும் எச்சரிக்கையாகச் செல்லவேண்டும். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தவேண்டும். படித்த பாடத்தையே மீண்டும் மீண்டும் படித்தால் பாடம் மனதில் நிற்கும். குருபகவான் 6-ல் உள்ள இந்த நேரத்தில், மாணவர்கள் தங்கள் கூட்டாளிகளை ஒதுக்கிவைத்து வாழ்வது நல்லது. சக மாணவர் செய்யும் தவறுக்கு நீங்கள் பொறுப்பேற்க வேண்டியது வரும்.
தொழிலதிபர்கள் தங்கள் நிறுவனத்தை அடிக்கடி ஆய்வு செய்தால் தான் உண்மை நிலை புரியும். அடிக்கடி நீங்கள் நிறுவனத்தை கவனித்தால் தவறு செய்கின்றவர்கள் திருந்திவிடுவார்கள். உங்கள் வீட்டுக்குவந்த விருந்தினருக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுப்பீர்கள். ஒருசிலர் உழைத்ததுபோதும் என்ற உயர்ந்த நிலையில் இருப்பீர்கள். இப்போது கோடைமழை பொய்க்காமல் பெய்யும். மழையால் விவசாயம் செழிக்கும். தாய்மாமன் உறவுகளில் விரிசல் வரலாம். அவர்களால் உங்களுக்கு உதவி எதுவுமில்லை. வீட்டிற்கு வந்துள்ள மருமகன் நல்லவராக வாழ்வார்.
உங்களது நண்பர்கள் உதவியாக இருப்பார்கள். சேமிப்புகள் உங்களுக்கு உதவியாக இருக்கும். எல்லா காரியத்திலும் மிகவும் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். எதிலும் நிதானத்தைக் கடைப்பிடித்து நடப்பவர்களை குருபகவான் கெடுக்கமாட்டார். வீட்டில் சுபகாரியப் பேச்சுகள் கைகூடும். நன்கு விசாரித்து மணமக்களைத் தேர்வுசெய்ய வேண்டும். 40 வயதைக் கடந்தவர்கள் எச்சரிக்கையாக இருந்தால் போதுமானது. கூட்டாளிகளைச் சேர்க்காதீர்கள்.
தெளிவான பேச்சுகளை மட்டும் கையாளவேண்டும். பேச்சில் கனிவு இருக்கவேண்டும். யாருக்கும் வாக்கு கொடுக்கக்கூடாது. உங்கள் தாய்மாமன் நல்லவராக இருந்தாலும், தற்போது உதவி செய்யமுடியாத நிலையிலிருப்பார். தண்ணீர் வந்தவுடன் பிடித்து வைக்கும் பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும். பொதுவாக மீன ராசி அன்பர்கள் உறவுகளின் வீட்டிற்குச் செல்லும்போது மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
05-07-2015 முதல் 23-08-2015 வரை குரு, கேது சாரத்தில் நேர்கதியில் உலா
இந்த காலகட்டத்தில் பெரியவர்களிடம் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். அவர்களின் கோபத்துக்கு ஆளாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பெற்றோர்கள் வழியில் மருத்துவச் செலவுகள் கூடும். ஓரளவு மருத்துவம் செய்தால் போதும். உடல்நிலை சீராகும். குடும்பத்துடன் குலதெய்வ வழிபாடு செய்துவந்தால் சிரமங்கள் குறையும். சகோதரர்கள் மத்தியில் இருந்துவந்த பிரச்சினைகள் மறையும். சொத்துப் பிரச்சினைகள் சுமுகமான முடிவுக்கு வரும். கணவன்- மனைவி உறவில் விரிசல் வராது. குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிட்டும்.
24-08-2015 முதல் 27-10-2015 வரை குரு, சுக்கிரன் சாரத்தில் நேர்கதியில் உலா
இந்த காலகட்டத்தில் நீங்கள் மிகவும் நிதானத்துடன் செயல்பட வேண்டும். நினைத்த காரியங்களை செய்துமுடிப்பதில் தடை, தாமதங்கள் வரும். பணநிலையைப் பொறுத்தவரை தேவைகள் அதிகம் உண்டு. வருவாய் குறைந்த அளவே வரும். எனவே மிகவும் சிக்கனமாக இருக்கவேண்டும். உடலில் அடிக்கடி உபாதைகள் ஏற்படலாம். டென்ஷன் ஆகாமல் இருந்தாலே உடல் உபாதைகள் குறையும். கடன் வாங்கும்போது யோசித்து வாங்கவேண்டும். உடன் பிறந்தவர்கள் உங்களுக்கு எதிராக செயல்படுவார்கள். தொழில் செய்கின்றவர்களும், வியாபாரம் செய்கின்றவர்களும் புதிய கிளைகளை ஆரம்பிப்பதை தள்ளிப் போட வேண்டும். அந்நிய மதத்தவர் உங்கள் கடைகளில் வேலைக்கு இருந்தால், அவர்களிடம் பொறுப்புகளைக் கொடுக்காதீர்கள். பிள்ளைகள் வழியில் உள்ள சுபகாரியப் பேச்சுகளைத் தள்ளிவைப்பது நல்லது.
28-10-2015 முதல் 15-01-2016 வரை குரு, சூரியன் சாரத்தில் நேர்கதியில் உலா
கடந்த காலத்தில் அனைத்து நிலைகளிலும் நீங்கள் தடை, தாமதங்களை சந்தித்திருப்பீர்கள். இப்போது எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்திலும் வெற்றியைப் பெறலாம். வியாபாரத்தில் இருந்துவந்த மந்தநிலை மாறும். தொழிலதிபர்கள் உற்பத்திப் பொருட்களை விற்க நல்ல நேரமிது. வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். பொன், பொருள் வாங்கும் திட்டம் நிறைவேறும். குடும்பத்தில் குழப்பங்கள் நீங்கும். பிள்ளைகள் கல்வியில் உயர்ந்து வருவார்கள். வெளிநாடு செல்ல போட்ட திட்டம் நிறைவேறும். வெளிநாட்டில் இருந்து நல்ல தகவல்கள் வந்துசேரும். மனைவி வழியில் வரவேண்டிய சொத்துகள் பிரச்சினையின்றி வரும். வயது முதிர்ந்த தாய், தந்தையருக்கு இருந்த மருத்துவச் செலவுகள் குறையும். அவர்கள் உடல்நலனும் தேறும். அரசு ஊழியர்களைப் பொறுத்தமட்டில் விரும்பிய இடத்துக்கு மாறுதல் உண்டு. தற்காலிக பணிநீக்கத்தில் உள்ள ஒருசிலரது கோரிக்கை ஏற்கப்பட்டு மீண்டும் பணியில் சேர்வார்கள். குலதெய்வ வழிபாடு உண்டு.
16-01-2016 முதல் 07-02-2016 வரை குரு, சூரியன் சாரத்தில் வக்ரம்
கடந்த இரண்டு மாதமாக நிம்மதிப் பெருமூச்சு விட்டீர்கள். இப்போது மீண்டும் பிரச்சினைகள் ஆரம்பமாகின்றது. 6-ல் குரு உள்ள இந்த நேரத்தில் நீங்கள் எதிலும் நிதானமாகச் செல்லவேண்டும். யாருக்கும் கடனுக்காக ஜாமீன் போடாதீர்கள். அந்தக் கடனை நீங்கள்தான் கட்டவேண்டியது வரும். பெற்றோர்கள் உடல்நலன் பாதிக்கலாம். தகுந்த மருத்துவச் செலவுகள் செய்யவேண்டும். வாகனங்களில் செல்லும்போது மிகவும் நிதானித்துச் சென்றால் விபத்துகளைத் தவிர்க்கலாம். சகோதரர்கள் வழியில் ஒற்றுமைக் குறைவு ஏற்படும். எனவே விட்டுக்கொடுத்துச் செல்வது உத்தமம். மாணவர்கள் ஏற்ற- இறக்கத்துடன் படிப்பார்கள். மிகவும் கவனத்துடன் படித்தால் நல்ல மதிப்பெண்களைப் பெறலாம். தொழில்துறையை விரிவுபடுத்த நினைப்பவர்கள் அந்த முயற்சியை தள்ளிவைக்கவேண்டும். வியாபாரிகள் போட்டி வியாபாரி களிடம் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். அரசு ஊழியர்கள் தான் உண்டு- தன் வேலையுண்டு என்று இருப்பது நல்லது. கையூட்டு பெறும் அரசு ஊழியர்கள் பாடு கஷ்டம். பதவியில் சிரமம் வரும்.
08-02-2016 முதல் 14-06-2016 வரை குரு, சுக்கிரன் சாரத்தில் வக்ரம்
இந்த காலகட்டத்தில் அந்நிய மதத்தவர், அந்நிய மொழியினர் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள். ஒருசிலர் தொழிலுக்காக இருப்பிடத்தை மாற்றிக்கொள்வார்கள். கொடுக்கல்- வாங்கல் தொழில் செய்கின்றவர்களுக்கு ஏற்றமான நேரமிது. லாகிரி வஸ்துகள் விற்பனை செய்கிறவர்கள் அதிகமான லாபத்தைப் பெறுவார்கள். உடல்நிலையில் சற்று முன்னேற்றம் காணலாம். பிள்ளைகள் இப்போது உங்கள் சொல்லைக்கேட்டு நடப்பார்கள். அவர்களின் உயர்படிப்பு தொடரும். தொழிற்கல்வியிலுள்ள மாணவர்கள் புதிய கருவிகளைக் கண்டு பிடிப்பார்கள். அது மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். கடிதத் தொடர்புகளில் நல்ல தகவல் வந்துசேரும். ஒருசிலர் வெளிநாடு செல்ல போட்ட திட்டம் நிறைவேறும். நீண்டகாலமாக நடந்துவந்த வழக்குகளில் சாதகமான தீர்ப்புகள் வரும். கணவன்- மனைவி உறவில் விரிசல் வராது. அன்யோன்யமாக வாழ்வார்கள். பிரிந்துசென்ற தம்பதியர் மீண்டும் வந்துசேர்வார்கள். இனி சண்டை, சச்சரவு வராது.
15-06-2016 முதல் 09-07-2016 வரை குரு, சுக்கிரன் சாரத்தில் உலா
இந்த காலகட்டத்தில் உங்களுடன் பணியாற்றும் அல்லது பக்கத்தில் உள்ளவர்களிடம் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். சக ஊழியர்களில் கறுப்பாக இருப்பவர்களால் தொல்லைகள் வரலாம். எனவே எச்சரிக்கையாகச் செயல்பட வேண்டும். கொடுக்கல்- வாங்கல் சிறப்பில்லை. வாகனங்களில் அடிக்கடி பழுதுகள் வரும். எனவே பராமரிப்பு அவசியம். உடன்பிறந்த சகோதரர்கள் மறைமுகமான உதவிகளை உங்களுக்குச் செய்வார்கள். அரசாங்கத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். விரும்பிய இடத்துக்கு மாறுதல் வரும். நீண்ட காலமாக தள்ளிப்போன பதவி உயர்வுகள் கிடைக்கும். ஊதிய உயர்வும் வரும். தற்காலிக பணிநீக்கத்தில் உள்ளவர்கள் மீண்டும் வேலை வாய்ப்பைப் பெறுவார்கள். வாகனத்தில் மெதுவாகச் சென்றால் விபத்துகளைத் தவிர்க்கலாம். உங்கள் பெண் பிள்ளைகளுக்கு பிடித்த மில்லாத வரனைத் தேர்வுசெய்யாதீர்கள். அப்படிச் செய்தால் உங்கள் மகள் உங்களை குழப்பத்தில் ஆழ்த்திவிடுவார். எச்சரிக்கையோடு செயல்பட வேண்டும். காணாமல்போன பிள்ளை மீண்டும் வந்துசேரும். அதேபோல பெற்றோரைவிட்டுப் பிரிந்து மனைவியே கதியென்று இருந்த பிள்ளைகளும் பெற்றோரைத் தேடிவருவார்கள்.
10-07-2016 முதல் 01-08-2016 வரை குரு, சூரியன் சாரத்தில் வக்ரகதியில் உலா
பாலைவனத்தில் சோலையைப் பார்ப்பதுபோல, நீங்கள் இதுவரை சிரமம் அடைந்ததற்கு மாறாக செழிப்போடு வாழும் நிலை உருவாகும். இப்போது உங்கள் மனதில் புத்துணர்ச்சி பிறக்கும். காதல் திருமணம் செய்த மனைவியால் ஏற்பட்ட பிரச்சினைகள் நீங்கும். தாய், தந்தையர் உடல்நலன் தேறும். அவர்களும் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள். கணவன்- மனைவி ஒற்றுமை கூடும். குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். வெளிநாடுகளில் பிள்ளைகள் நல்ல சம்பளத்தைப் பெறுவார்கள். அவர்கள் தன் குடும்பத்துக்கும் பெற்றோருக்கும் உதவியாக இருப்பார்கள். ஏற்கெனவே இருந்துவந்த கஷ்டமும் நீங்கும். பொருளாதார நிலை உயரும். மாணவர்கள் கல்வியில் உயர்ந்து வருவார்கள். வழக்குகள் சாதகமாகும். பிள்ளைகளுக்கு வரன் தேடும் முயற்சிகள் வெற்றியாக முடியும். கொடுக்கல்- வாங்கல் தொழில் செய்கின்றவர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். பழைய கடன்கள் அனைத்தும் வசூலாகும். கூட்டுத் தொழில் செய்கின்றவர்கள் மத்தியில் இருந்துவந்த இறுக்கமான மனநிலை மாறி, சகஜ நிலைக்கு வருவார்கள். தொழில் உயரும்.
அரசு ஊழியர்கள்
குருபகவான் 6-ல் உள்ள இந்த காலகட்டங்களில் நீங்கள் மிகவும் பொறுமையுடன் செயல்பட வேண்டும். கிரகம் ஒத்துவரவில்லை என்றாலும், நமது நல்ல பழக்கவழக்கங்களால் காரிய வெற்றிகளை அடையலாம் என்பதை மறந்துவிடக்கூடாது. பதவி உயர்வு, ஊதிய உயர்வு தாமதமாகும். மற்ற பணியாளர்களையோ, அதிகாரிகளையோ விமர்சிக்காமல் இருப்பது நல்லது. அதிகாரிகள் இட்ட பணியைத் தட்டாமல் செய்தால் மட்டுமே நல்ல பெயரோடு பணியாற்றிட முடியும். கையூட்டு பெறும் அரசு ஊழியர்கள் குடும்ப நலனைக் கருதி பழக்கத்தை மாற்றிக்கொள்ள வேண்டும். ஒருசிலர் காவல்துறை நடவடிக்கைக்கு ஆளாவார்கள்.
வியாபாரிகள்
வியாபாரிகளைப் பொறுத்தமட்டில், புதிய வாடிக்கையாளர்களை விட, பழைய வாடிக்கையாளர்கள் உங்களைத் தவிர வேறு எந்தக் கடையிலும் பொருட்களை வாங்க மாட்டார்கள். வேறு பகுதியில் கிளை துவங்கும் திட்டத்தை நீங்கள் இப்போது அமுல்படுத்தக்கூடாது. பாத்திர வியாபாரம் செய்பவர்கள், இரும்பு வியாபாரம் செய்கின்றவர்கள் கூடுதலான லாபத்தைப் பெறுவார்கள். தொல்லை கொடுத்துவந்த போட்டி வியாபாரிகள் விலகிச்செல்வார்கள்.
தொழிலாளர்கள், தொழிலதிபர்கள்
தொழிலதிபர்கள் வெளிநாடுகளில் தங்கள் தொழிலை விரிவுபடுத்தும் திட்டத்தைக் கைவிட வேண்டும். உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்வதில் தடை, தாமதம் வரலாம். பங்குதாரர்களிடம் மிகவும் எச்சரிக் கையாகப் பேசி செயல்பட வேண்டும். அவர்கள் உங்களை விட்டுப் பிரிந்துசெல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். தொழிலாளிகள் வேலைப்பளு கூடும். அவர்கள் தாங்கள் வேலைசெய்யும் கம்பெனியின் நிலைமையை உணர்ந்து கோரிக்கைகளை வைக்க வேண்டும். யூனியன் நடவடிக்கைகள் கைகொடுக்காது.
பெண்கள்
பெண்கள் தியானம் மூலம் மன அமைதியை அடையலாம். பிள்ளைகளின் நடவடிக்கைகள் உங்களுக்கு மனக்கஷ்டத்தைக் கொடுக்கும். பிள்ளைகள்மீதும், ஆண்டவன்மீதும் நம்பிக்கை வையுங்கள். நிம்மதியுண்டு. உடல்நலனில் சிறுசிறு பிரச்சினைகள் வந்துபோகும். அதிகமான மருத்துவச் செலவுகளைத் தராது. விருந்தினர் வருகையால் செலவுகள் கூடும். சிக்கனம் ஒன்றே உங்களைக் காக்கும். கணவன்- மனைவி உறவுகளில் விரிசல் வராது. பிள்ளைகளின் சுபகாரியப் பேச்சுகளைத் தள்ளி வைக்கவேண்டும். ஒருசிலருக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். கோபித்துக்கொண்டுபோன மனைவி எந்தவிதமான நிபந்தனையுமின்றி வந்துசேர்வார்.
மாணவர்கள்
மாணவர்கள் குரு 6-ல் உள்ள இந்த நேரத்தில் பாடத்தை ஒன்றுக்கும் மேற்பட்ட முறை படிக்கவேண்டும். உங்களின் விடாமுயற்சி கை கொடுக்கும். உல்லாசப் பயணம் செல்லும் மாணவர்கள் தண்ணீரில் நீந்துவதைத் தவிர்க்கவேண்டும். தண்ணீர் கண்டம் உள்ளது. உடல் ரீதியாக சில பிரச்சினைகளைச் சந்திப்பீர்கள். ஹாஸ்டலில் தங்கிப் படிக்கும் மாணவர்கள் மாடிகளில், படிக்கட்டுகளில் உட்காருவதைத் தவிர்க்க வேண்டும். தடுமாற்றம் ஏற்பட்டு சிறு விபத்துகள் வரலாம். அதனால் மருத்துவச் செலவுகள் கூடும். உங்கள் நலன் உங்கள் கையில் உள்ளது.
கலைஞர்கள்
புதிய படவாய்ப்புகள் வந்துசேரும். ஒருசில கலைஞர்கள் வெளிநாட்டு படப்பிடிப்புக்குச் சென்றுவருவார்கள். விட்டுப்போயிருந்த பழைய படங்களை நடித்துக் கொடுப்பீர்கள். தாய்- தந்தை இருவரில் யாரேனும் ஒருவருக்கு மருத்துவச் செலவுகள் வரும். எனவே தாய்- தந்தையர்களின் உடல்நிலையை அடிக்கடி பரிசோதிக்க வேண்டும். காதல் திருமணம் செய்துகொண்ட நடிகர்கள் சிலரது குடும்பத்தில் பிரச்சினைகள் பூதாகரமாக வெடிக்கும். கணவன்-மனைவிக்குள் பிரிவினை வரும் சூழல் ஏற்படும். நீங்கள் அனுசரித்துச் செல்வது உத்தமம். வருவாய் கூடுதலாகவே உள்ளது. போதைப் பொருள் பழக்கமுள்ள சிலருக்கு பக்க விளைவுகள் வரும். எனவே போதைப் பழக்கத்தைக் கைவிடுவது நல்லது.
விவசாயிகள்
இந்த ஆண்டில் நல்ல மழை பெய்வதால் நீங்கள் பயிர் செய்த வகையில் கூடுதல் மகசூலைப் பெறுவீர்கள். பணப்பயிர்கள் மேலும் லாபத்தைத் தரும். புகையிலை வியாபாரம் செய்கின்றவர்கள் கூடுதல் லாபம் பெறுவார்கள். உற்பத்தியும் விற்பனையும் செய்கின்றவர்களுக்கு இரட்டிப்பு லாபம் வரும். ஒருசிலர் சொத்துக்கள் வாங்கிச்சேர்ப்பார்கள். கடினமாக பாடுபட்டு விவசாயம் செய்வீர்கள். டிராக்டர் போன்ற கருவிகளில் பழுதுகள் நேரலாம். அதனால் செலவுகள் கூடுதலாகும். தென்னை விவசாயம் செய்கின்றவர்கள் அதிக மகசூலைப் பெறுவார்கள். பூக்கள் உற்பத்தி செய்கின்றவர்களும் அதிக விளைச்சலைப் பெற்று எப்போதும் வரும் லாபத்தைவிட கூடுதலான லாபத்தைப் பெறுவார்கள்.
அரசியல் பிரமுகர்கள்
அரசியில் பிரமுகர்களின் செயல்பாடுகளை பொதுமக்கள் பாராட்டுவார்கள். ஒருசிலருக்கு எதிர்பார்த்தபடி வாரியத் தலைவர், அமைச்சர் பதவி வந்துசேரும். நீங்கள் நல்லதே செய்தால், குருபகவான் உங்களுக்கு நல்லதே செய்வார். மற்றவர்களுக்கு தீமை செய்தால் பதவியில் மாற்றம் வரும். தொட்ட காரியம் எதுவும் துலங்காமல் போகும். எனவே அரசியல் பிரமுகர்கள் எச்சரிக்கையுடன் செயல்படவேண்டும்.
பூரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு:
நீங்கள் மிகவும் மனத்தெளிவோடு இருக்கவேண்டும். குடும்பச் சண்டைகள் தீரும். கணவன்- மனைவி ஒன்றுசேர்வார்கள். மற்றவர்கள் சொல்வதை மறுத்துப்பேசும் குணத்தைக் கைவிடவேண்டும். பொருளாதார உயர்வுகள் ஓரளவு வரும். தாய்- தந்தையர் சொல்லைக் கேட்டு நடப்பவர்கள் அதிக பலனை அடைவார்கள். போதைப் பொருளால் அழிவுகள் உண்டு. அப்படிப்பட்டவர்கள் மருத்துவச் செலவுகளை அதிகம் அடைவார்கள். போதைப் பழக்கத்தை கைவிடுவது நல்லது. 60 சதவிகித நன்மையுண்டு.
உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு:
செயல்களில் தடை, தாமதங்களை சந்திப்பார்கள். ஆனால் எடுத்த காரியம் யாவும் வெற்றியாகும். சமூகத்தில் எப்போதும் உங்கள் பேச்சுக்கு முதலிடம் உண்டு. மற்றவர்கள் உங்கள் ஆலோசனைகளை ஏற்பார்கள். புதிய வாகனம் வாங்க போட்ட திட்டம் நிறைவேறும். எப்போதும் உற்சாகமாக இருப்பீர்கள். தூரதேசத்திலிருந்து நல்ல தகவல்கள் வந்து சேரும். சொத்துக்களில் நல்ல பலன்களை அடைவீர்கள். எப்போதும் பணம் பையை நிரப்பும். மனைவிவழி சொந்தங்களால் உபத்திரவத்தை அனுபவிப்பீர்கள். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். ஒருசிலர் வெளிநாடு செல்ல போட்ட திட்டம் நிறைவேறும். 80 சதவிகித நன்மையுண்டு.
ரேவதி நட்சத்திரக்காரர்களுக்கு:
வயிற்றுவலி போன்ற தொந்தரவுகள் ஏற்படலாம். ஒருசிலருக்கு மருத்துவ சிகிச்சைக்காக கூடுதல் செலவுகள் ஆகும். பணவரவுகளுக்கு பஞ்சமில்லை. பாக்கிகளை கட்டிமுடிப்பீர்கள். வாகனங்களில் பார்த்துச் செல்ல வேண்டும். விபத்து வர வாய்ப்புகள் அதிகமுள்ளது. உங்கள் தாய், தந்தையர் நலனில் அக்கறை அதிகம் வேண்டும். அவர்களைக் கண்காணித்து வருவது நல்லது.
பரிகாரம்
முருகப் பெருமானையும், குருபகவானையும் தரிசித்து வரவேண்டும். 27 கொண்டைக்கடலையை எடுத்து, அதனை மஞ்சள் துணியில் முடிந்து பர்சில் அல்லது பையில் வைத்துக் கொள்ளவேண்டும். விபத்துகள் எதுவும் வராது. நன்மையே நடக்கும்.
Post a Comment