
கிரீஸ் நாட்டு நிதி நிலை தொடர்பாக ஐரோப்பிய யூனியன் தலைவர்கள் அவசர உச்சி மாநாட்டில் சந்திக்க உள்ளனர். இதில் கிரீஸ் பிரதமர் புதிய திட்டங்களை முன்மொழிவார் என்று தெரிவிக்கப்படுகிறது.
கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள கிரீஸை கடனில் இருந்து மீட்க ஐரோப்பிய யூனியன், ஐரோப்பிய மத்திய வங்கி, சர்வதேச நிதியம் ஆகியவை பரிந்துரைத்த கடன் மீட்புத் திட்டத்தை அந்நாட்டு மக்கள் பொதுவாக்கெடுப்பின் மூலம் நிராகரித்தனர்.
இதனையடுத்து பிரான்ஸ் அதிபர் ஹாலந்தே மற்றும் ஜெர்மனி பிரதமர் ஏஞ்செலா மெர்கல் ஆகியோர் ஆலோசனைக்கு கிரீஸ் அமைச்சரவைக்கு அழைப்பு விடுத்துள்ளனர். இது குறித்து பிரான்ஸ் அதிபர் ஹாலந்தே கூறும்போது, "இந்த கடுமையான சூழலில் அலெக்சிஸ் சிப்ரஸ் அரசு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த முடிவை எடுத்தாக வேண்டும். ஐரோப்பிய யூனியனில் கிரீஸ் நீடிக்க வேண்டிய நிலைப்பாட்டிலே இருக்கும் என நம்புகிறோம். இருப்பினும் இந்த முடிவு கிரீஸிடமே விடப்படுகிறது" என்றார்.
இன்று மாலை கூட இருக்கும் உச்சி மாநாட்டில், கிரீஸ் மக்களின் உணர்வுகளை மதித்து அதற்கு கூடுதலாக நிதி உதவி அளிப்பது பற்றி ஆலோசனை நடத்தப்படும் என்றும் நம்பப்படுகிறது. மறுபுறம், ஐரோப்பிய மத்திய வங்கி கிரீஸ் நாடு தங்களிடம் வாங்கிய 350 கோடி யூரோ கடன் தொகையை வருகிற 20 ஆம் திகதிக்குள் செலுத்த வேண்டும் இல்லை என்றால், அவசர கால கடன் உதவியை ரத்து செய்ய வேண்டிய சூழல் உள்ளதாக திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
கடன் சுமையால் கிரீஸ் மக்கள் வங்கிகள் பணமின்றி மிகவும் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர். ஐரோப்பிய மத்திய வங்கியின் அவசர கால கடன் உதவியும் நிறுத்தப்பட்டால், கிரீஸின் சூழல் முற்றிலும் மோசமடையும் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய உச்சி மாநாட்டில், இவை அனைத்துக்குமான முடிவே எட்டப்படும் என்று கிரீஸ் தரப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Post a Comment