
ஒரே இடத்தில் 108 விநாயகரும் அமர்ந்திருக்கும் அற்புத கோயில்கள் ஒரு சில இடங்களில் மட்டுமே உள்ளன. அவற்றை பார்க்கலாம்.
ஆனந்தத்தை அள்ளி வழங்கும் ஆனை முகனை சரணடைந்து குட்டி கொண்டு, தோப்பு கரண மிட்டால், அளவற்ற செல்வங்களையும், வரங்களையும் வழங்கிடுவான். ஒற்றை விநாயகனாய் அருள்பாலித்தாலே இத்தனை அளிவில்லா ஆனந்தம் வழங்கும் விநாயகப்பெருமான் 108 விநாயகராய் அருள்புரிந்தால், எத்தனை எத்தனை வரங்களை அருள்வான் என்பதற்கு அளவே இல்லை. ஒற்றை, இரட்டை விநாயகரை இதுவரை வணங்கியிருப்போம். ஒரே இடத்தில் 108 விநாயகரும் அமர்ந்திருக்கும் அற்புத கோயில்கள் ஒரு சில இடங்களில் மட்டுமே உள்ளன. அத்தகைய 108 விநாயகர் அருள் புரியும் சில ஆலயங்களில் தரிசிப்போம்.
கோவை ஸ்ரீ செல்வ விநாயகர்:-
கோயம்புத்தூர் ரேஸ் கோர்ஸ் சாலையில், ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தின் அருகிலேயே ஸ்ரீசக்ர வடிவத்தில் 108 விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் 108 விநாயகரின் திருநாமங்களின் படி அதன் பெயருக்கு ஏற்ற உருவ வேறுபாடுகளுடன் இருக்கின்றன. 108 விநாயகரும் 5 அடுக்குகளாக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதால் சுலபமாக 108 விநாயகரையும் சுற்றி விடலாம். விநாயகர் சதுர்தியன்று 108 விநாயகரும் மாலை அணிவித்து அலங்காரம் செய்யப்பட்டு அர்ச்சனை செய்யப்படும் அழகே அலாதியானது.
திண்டுக்கல் 108 விநாயகர் திருக்கோயில்:-
பல சிறப்புகளை பெற்ற திண்டுக்கல் நகரின் மத்தியில் கோபால சமுத்திர கரையில் 1000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே அருள்பாலித்து வருபவர் ஆதி விநாயகர். 2002-ம் ஆண்டு இவ்விநாயகரிடம் திருவுளசீட்டு மூலம் ஆசிபெற்று இங்கு 108 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. நன்மை தரும் 108 விநாயகர் திருக்கோவில் என்று பெயர் பெற்ற இக்கோவில் 108 விநாயகரும் மூல விநாயகரின் இருபுறமும் வரிசைக்கிரமமாக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளனர். இங்குள்ள 108 விநாயகருக்கும் நமது கரங்களின் மூலம் அபிஷேகம் செய்து நமக்கு வேண்டி விபரங்களை பெறலாம். அதிசயத்தின் அடிப்படையில் பக்தர்கள் பலர் பல அபிஷேகங்கள் தங்கள் கைகளால் செய்து நல்ல பலன்களை பெற்று உள்ளனர்.
காரைக்குடி வயிரன்பட்டி 108 விநாயகர்கள்:-
காரைக்குடியிலிருந்து வயிரவன்பட்டி செல்லும் வழியிலுள்ள சிவன் கோவிலில் 108 விநாயகர்கள் எழுந்தருளியுள்ளனர். அதுபோல் சிதம்பரம் நர்த்தன விநாயகர் கோவிலும் 108 விநாயகர் ஸ்தலங்களில் ஒன்றாக உள்ளது.
Post a Comment