
2017ம் ஆண்டின் அரையாண்டு கடந்து சில நாட்களாகிவிட்டது. தமிழ்த் திரையுலகத்தைப் பொறுத்தவரை இந்த அரையாண்டின் கடைசி நாள் மறக்க முடியாத ஒரு நாளாகிவிட்டது.
அரையாண்டின் கடைசி நாளான ஜுன் 30ம் தேதி வெளிவந்த படங்கள் தியேட்டர்காரர்களால் 'ஸ்டிரைக்' என்ற ஒரு காரணத்தால் ஒரு சில நாட்கள் மட்டுமே தியேட்டர்களில் இருக்கும் நிலை உருவாக்கப்பட்டது. இதற்கு முன் இப்படி திட்டமிடாமல் திடீரென 'ஸ்டிரைக்' என்ற ஒரு அறிவிப்பை வெளியிட்டிருப்பார்களா என்பது சந்தேகம்தான்.
ஜுன் மாதக் கடைசி நாளன்று வெளியான படங்களுக்கு தியேட்டர்காரர்கள் குழி பறித்தார்கள் என்றால் இந்த அரையாண்டில் திரையுலகத்தினரே அவர்களாகவே அவர்களது படங்களுக்கு குழிபறித்துக் கொண்டார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.
இந்த அரையாண்டில் வெளிவந்த 100 படங்களில் வியாபார ரீதியாக மிகப்பெரிய வெற்றி பெற்றது ஒரே ஒரு படம் என்பதுதான் அதிர்ச்சித் தகவல். அந்த ஒரு படமும் முழுமையான நேரடித் தமிழ்ப் படம் கிடையாது. தெலுங்கிலிருந்து தயாராகி தமிழுக்கும் வந்த 'பாகுபலி 2' தான் அந்த ஒரு படம். அந்த வெற்றியை தமிழ்த் திரையுலகத்தின் வெற்றி என்று சொல்லவே முடியாது.
இந்த 2017ம் ஆண்டின் அரையாண்டில் ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டு, அவர்களுக்கு ஏமாற்றம் தந்த படங்களே அதிகம். இதில் பல முன்னணி நடிகர்களின் படங்களும் அடக்கம்தான் என்பது அடுத்த அதிர்ச்சித் தகவல்.
கடந்த ஆறு மாதங்களில் சுமார் 100 படங்கள் வெளிவந்திருக்கின்றன. ஆறு மாதங்களில் சராசரியாக 26 வெள்ளிக்கிழமைகள் வந்துள்ளன. வாரத்திற்கு ஏறக்குறைய 4 படங்கள் சராசரியாக வெளிவந்துள்ளன. அதிகபட்சமாக 7 படங்கள் வரையும் குறைந்த பட்சமாக ஒரு படம் வரையும் ஒரு வாரத்திற்கு வெளிவந்துள்ளன.
இந்த அரையாண்டில் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு, இந்தப் படங்கள் எப்படியும் வசூலித்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டு ஏமாற்றமடைந்த படங்கள்தான் அதிகம். வெற்றிப் படங்கள் என்று குறிப்பிடமுடியாத பட்டியலே இந்த ஆறு மாதங்களில் வருகிறது. இருந்தாலும் ஆறு மாதங்களில் அதிகம் பேரின் கவனத்தை ஈர்த்த, எதிர்பார்ப்பை ஏமாற்றிய படங்கள் எவை என்பதைப் பற்றிப் பார்ப்போம்.
பைரவா
விஜய் நடித்த 'அழகிய தமிழ் மகன்' படத்தை இயக்கிய பரதன் இயக்கத்தில் வெளிவந்த படம் 'பைரவா'. 'தெறி' படத்திற்குப் பிறகு விஜய், யார் இயக்கத்தில் நடிக்கப் போகிறார் என்ற கேள்வி பெரிய அளவில் எழுந்த போது, யாரும் எதிர்பார்க்காத விதத்தில் படம் இயக்கிய சில ஆண்டுகள் ஆன பரதனை அழைத்து 'பைரவா' படத்தை இயக்கும் வாய்ப்பைக் கொடுத்து பலரையும் ஆச்சரியப்படுததினார் விஜய். பெரிய அளவில் இந்தப் படம் வெற்றியைப் பெறவில்லை என்றாலும் விஜய் ரசிகர்களை பெரிதாக ஏமாற்றவில்லை. தயாரிப்பு தரப்பிலேயே நான்கு நாட்களில் 100 கோடி வசூலைப் பெற்றோம் என்று அறிவித்தார்கள். ஆனால், இந்தப் படம் அவ்வளவு வசூலைப் பெறவில்லை என்பதே உண்மை.
சி 3
ஹரி இயக்கத்தில் சூர்யா, அனுஷ்கா, ஸ்ருதிஹாசன் மற்றும் பலர் நடிக்க வெளிவந்த படம். ஹரி - சூர்யா கூட்டணியில் மூன்றாவது பாகமாக வந்த 'சிங்கம்' பட வரிசைப் படம் இது. முதலிரண்டு பாகங்களே பரவாயில்லை என்று சொல்லுமளவிற்கு இந்தப் படத்தைக் கொடுத்திருந்தார் இயக்குனர் ஹரி. பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு தோல்வியைத் தழுவிய படம். பட வெளியீட்டிற்கு முன்பு 100 கோடியைக் கடந்த வியாபாரம் என்றார்கள். ஆனால், படம் வெளிவந்த பிறகு எத்தனை கோடி வசூலானது என்று வாயைத் திறக்கவில்லை. சூர்யாவுக்கு அடுத்து உடனடியாகத் தேவைப்படுவது ஒரு வெற்றி மட்டுமே.
மாநகரம்
சிட்டி தியேட்டர்களில் மட்டும் ஓரளவிற்கு வசூலை அள்ளிய படம். தமிழில் வளர்ந்து வரும் நட்சத்திரங்கள் இந்தப் படத்தில் நடித்திருந்தாலும் வித்தியாசமான திரைக்கதை இந்தப் படத்தை ரசிக்க வைத்தது. த்ரில்லர் படங்களின் வெற்றியே அதன் திரைக்கதையில்தான் இருக்கிறது. அந்த விதத்தில் இந்தப் படத்தின் அறிமுக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அனைவரது கவனத்தையும் ஈர்த்த ஒரு இயக்குனராக இருந்தார்.
கடுகு
விஜய் மில்டன் இயக்கத்தில் ராஜகுமாரன், பரத் மற்றும் பலர் நடித்து வெளிவந்த படம். கடந்த வாரம்தான் இந்தப் படத்தின் 100வது நாள் விளம்பரத்தை வெளியிட்டு ஆச்சரியப்படுத்தினார்கள். இந்தப் படத்தை சூர்யாவின் தயாரிப்பு நிறுவனம் பார்த்து பிரமித்து வாங்கியதாகச் சொன்னார்கள். அப்படி பிரமிக்கும் அளவிற்கு படத்தில் என்ன இருந்தது என்பதை சூர்யா அடுத்த முறை சொன்னால் நன்றாக இருக்கும். 100 நாள் வரையில் எப்படி தியேட்டரில் இந்தப் படத்தை ஓட்டினார்கள் என்பது புரியாத புதிர்.
கவண்
'அயன்' படத்திற்குப் பிறகு கே.வி.ஆனந்த் இயக்கிய படங்கள் எதுவும் பெரிய அளவில் ஈர்க்கவில்லை. அவரும் என்னவெல்லாமோ செய்து பார்க்கிறார் ஆனால், கமர்ஷியல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் 'அயன்' படம் ஏற்படுத்திய தாக்கத்தை அதற்குப் பிறகு அவர் இயக்கிய படங்கள் எதுவும் ஏற்படுத்தவில்லை என்பதே உண்மை. அடுத்த படத்திலாவது 'அயன்' போன்று பிரமிக்க வைப்பார் என எதிர்பார்ப்போம்.
காற்று வெளியிடை
இந்த ஆண்டின் மிகப் பெரிய ஏமாற்றம் என்றால் அது 'காற்று வெளியிடை' படம் தான். மணிரத்னத்தின் பெரிய தோல்விப் படமான 'ராவணன்' படத்தைக் கூட இப்போது பார்க்கச் சொன்னால் பார்த்துவிடலாம். ஆனால், 'காற்று வெளியிடை' படத்தை அடுத்து டிவியில் ஒளிபரப்பினால் மக்கள் பார்ப்பார்களா என்பது சந்தேகம்தான். மணிரத்னமா அதிதி ராவ் ஹைதரி போன்ற ஒரு ஹீரோயினை அவருடைய படத்தில் நடிக்க வைத்தார் என்ற சந்தேகம் இன்னமும் இருந்து கொண்டிருக்கிறது.
ப பாண்டி
தனுஷ் இயக்குனராக அறிமுகமான முதல் படம். அவருடைய முந்தைய சில படங்களின் இயக்கத்தில் அவருடைய தலையீடு இருந்தது என்று கோலிவுட்டில் சொன்னார்கள். எதற்கு அந்த அவப் பெயர் என்று தனுஷே ப பாண்டி படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்துவிட்டார். இயக்குனராக ரசிக்க வைத்தவர் கதை சொல்வதில் கொஞ்சம் மெதுவான வேகத்தையே கொண்டிருந்தார். இருந்தாலும் தனுஷின் இயக்குனர் அறிமுகம் மோசமான அறிமுகமல்ல. அவரிடமிருந்து இப்படி ஒரு காதல் கதையா எனவும் வியக்க வைத்தார்.
பாகுபலி 2
தமிழ்ப் படமா இல்லை தெலுங்குப் படமான என இந்தப் படத்தைப் பற்றி ஒரு பட்டிமன்றமே வைக்கலாம். முதல் பாகத்திலாவது சில காட்சிகள் தமிழில் எடுக்கப்பட்டிருக்கும். ஆனால், இந்தப் படத்தில் அப்படிக் கூட எடுக்காமல் தமிழ் ரசிகர்களை ஏமாற்றிவிட்டார் ராஜமௌலி. இருந்தாலும் வசன உச்சரிப்பு பொருத்தங்களையும் மீறி இந்தப் படம் தமிழ்நாட்டிலேயே 100 கோடியைக் கடந்து வசூலித்தது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான். இந்த அரையாண்டில் 100 கோடியைக் கடந்த ஒரே படம் என அனைவராலும் சொல்லப்பட்ட படமும் இதுதான்.
மரகத நாணயம்
அரையாண்டின் கடைசியில் ஓரளவிற்கு வசூலைப் பெற்ற படமாக இந்தப் படம் அமைந்தது. எத்தனையோ பேய்க் கதைகளைப் பார்த்திருப்போம். அனைத்து பேய்ப் படங்களிலும் உயிரோடு இருப்பவர்கள் உடலுக்குள்தான் பேய் போகும். ஆனால், இந்தப் படத்துப் பேய்கள் இறந்தவர்கள் உடலுக்குள் மட்டுமே போகும். இந்த ஒரு லாஜிக்கலான விஷயமே இந்தப் படத்தில் வித்தியாசமாக அமைந்தது. சமீபத்தில் பார்த்து ரசித்த நகைச்சுவைப் பேய்ப் படங்களில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய படம் இது.
அன்பானவன் அசராதவன் அடங்காதவன்
அரையாண்டு தமிழ் சினிமாவின் திருஷ்டி இந்தப் படம். இப்படி ஒரு படத்தை இத்தனை கோடி செலவு செய்து எதற்காக எடுத்தார்கள் என்பது அவர்களுக்குத் தெரிந்ததா இல்லையா என்பதே தெரியாது. தனக்கு இருக்கும் மிச்ச சொச்சம் ரசிகர்களையும் நன்றாகவே ஏமாற்றிவிட்டார் சிம்பு. இந்தப் படத்தை இரண்டு பாகங்களாக வேறு எடுக்கப் போவதாக படத்தின் முடிவில் பயமுறுத்தினார்கள். தயவு செய்து மீண்டும் அப்படி ஒரு தண்டனையை தமிழ் ரசிகர்களுக்குத் தராதீர்கள், அவர்கள் தாங்க மாட்டார்கள்.
2017ன் ஆறு மாதங்களில் 100 படங்கள் வெளிவந்துள்ளன. இந்த 100 படங்களில் 100 கோடியை வசூலித்தது ஒரே படம்தான். மீதிப் படங்கள் மூலம் வசூல் வந்ததோ இல்லையோ கண்டிப்பாக பல கோடி ரூபாய் நஷ்டம் வந்திருக்கும்.
இந்த ஆறு மாதங்களில் அஜித், ரஜினிகாந்த், கமல்ஹாசன், கார்த்தி, சிவகார்த்திகேயன் ஆகியோர் நடித்து எந்த ஒரு படமும் வரவில்லை. ரஜினிகாந்த் தவிர மற்றவர்களின் படங்கள் 2017க்குள் வந்துவிடும்.
சூர்யா, ஜெயம் ரவி, ராகவா லாரன்ஸ், விஜய் ஆண்டனி, ஜி.வி.பிரகாஷ்குமார் ஆகியோர் இது வரையில் வெற்றியைத் தவற விட்ட நாயகர்களாக இருக்கிறார்கள். நடிகைகளில் பெரிய அளவில் யாரும் முத்திரை பதிக்கவில்லை.
முதல் ஆறு மாதங்களில் வந்த 100 படங்களே பெரிதாக சாதிக்காத நிலையில் தியேட்டர் டிக்கெட் கட்டணங்களுக்கான கேளிக்கை வரியை எதிர்த்து ஸ்டிரைக் ஆரம்பமாகியுள்ளது. அடுத்த ஆறு மாதத்தின் முதல் வாரத்திலேயே படங்கள் வருவது இன்று வரை சந்தேகம்தான். இந்த பிரச்சனைகளை மீறி அடுத்த ஆறு மாதங்களில் வெளிவரும் படங்கள் சாதனை படைக்கப் போகிறதா அல்லது சறுக்கப் போகிறதா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Post a Comment