தென்னிந்தியாவையும் தாண்டி பாலிவுட்டிலும் வெற்றி பெற்ற நாயகி ஸ்ரீதேவி. 50 வயதை கடந்துவிட்ட போதும் இன்னும் இளமையுடன் வலம் வருகிறார். இங்கிலீஷ் விங்கிலீஷ் படத்திற்கு பிறகு கதையின் நாயகியாக ஸ்ரீதேவி நடித்துள்ள மாம் படம் இந்தவாரம் திரைக்கு வருகிறது. புரொமோஷனில் பிஸியாக இருந்த ஸ்ரீதேவி, நமக்கு அளித்த சிறப்பு பேட்டி...
மாம் படம் ரிலீஸாக போகிறது உங்களின் மன நிலை எப்படி.?
மாம் படத்தை ரொம்பவே எதிர்பார்க்கிறேன், ஏனென்றால் என் சினிமா கேரியரில் மிகவும் முக்கியமான படம் மாம். முதன்முறையாக நான் நடிக்காத பல திரைப்பிரபலங்களுடன் நடித்துள்ளேன். அனைவரும் திறமையான நடிகர்கள். தேர்வு எழுதிவிட்டு ரிசல்ட்டுக்காக காத்திருக்கும் மாணவி போன்று என் மன நிலை உள்ளது. ரசிகர்களிடம் படத்தை ஒப்படைத்து விட்டேன். இனி அவர்கள் தான் நல்ல முடிவை தரணும், நிச்சயம் இந்தப்படம் ரசிகர்களை கவரும் என நம்புகிறேன்.
கிட்டத்தட்ட 5 ஆண்டு(பாலிவுட்) இடைவெளி ஏன்?
சுமார் 15 ஆண்டுகளுக்கு பிறகு தான் இங்கிலீஷ் விங்கிலீஷ் படத்தில் நடித்தேன். இப்போது 5 ஆண்டுகள் கழித்து மாம் படத்தில் நடித்திருக்கிறேன். ஆகையால் இதை இடைவெளி என்றே கருதவில்லை. நான் படங்களில் நடிக்க தயாராக தான் உள்ளேன். ஆனால் அப்படி நடிக்கும் படம், என் மனதை தொடும்படியான நல்ல கதையாக இருக்க வேண்டும் என்றே விரும்புகிறேன். மாம் படத்தின் கதை என் மனதை தொட்டதால் நடித்தேன்.
அக்ஷ்ய் கண்ணாவுடன் நடித்த அனுபவம் பற்றி சொல்லுங்க?
அக்ஷ்ய் கண்ணா போன்ற திறமையான நடிகர்கள் வெகு சிலர் தான் உள்ளனர். அவருடன் நடித்தது நல்ல அனுபவமாக இருந்தது. கேமிரா முன்பு வந்துவிட்டால் தன்னை மறந்து முழு ஈடுபாட்டுடன் நடிப்பார். படம் முழுக்க தனது நடிப்பு திறனால் அசத்தி இருக்கிறார். தனது அப்பா வினோத் கண்ணாவை போன்று அழகாக உள்ளார் அக்ஷ்ய். ஆனால் இருவரின் நடிப்பு திறன் வித்தியாசமாக உள்ளது.
நிஜ வாழ்க்கையில் நீங்கள் எப்படிப்பட்ட அம்மா?
நிஜ வாழ்க்கையில் ஒரு நல்ல அம்மாவாக, கண்டிக்கின்றன சமயத்தில் கண்டிப்பான அம்மாவாக உள்ளேன். பெரும்பாலும் கண்டிப்பாக இருப்பதற்கு வாய்ப்பு இருக்காது. ஏனென்றால் எனது மகள்கள் இருவரும் என்னை கோபம் அடைய விடமாட்டார்கள். என்னை புரிந்து கொண்டு, நான் சொல்வதை கேட்டு, எனக்கு பக்கபலமாக இருப்பார்கள். ஜான்வி, குஷி போன்ற மகள்கள் கிடைத்தது மகிழ்ச்சி.
இன்று நீங்கள் ஒரு பெரிய ஸ்டார், உங்கள் வாழ்க்கையில் இன்னும் ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்களா?
நான் என்றுமே என்னை ஒரு பெரிய ஸ்டாராக நினைத்தது கிடையாது. ஒவ்வொரு நடிகர்களும் தங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் நிறைய கற்று கொள்ள வேண்டும். நான் இன்றும் ஏதாவது கற்று கொண்டு தான் வருகிறேன். என்னுடைய படங்களை பார்த்தால் கூட இந்த காட்சியில் இன்னும் கொஞ்சம் நன்றாக நடித்திருக்கலாமோ என்று எண்ணுவது உண்டு. நமக்கு எல்லாம் தெரியும் என்று நினைப்பது தவறானது.
நன்றி! என்று சிரித்த முகத்துடன் விடைபெற்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment