Ads (728x90)

ரஜியின் மகள் சவுந்தர்யா, வேலையில்லா பட்டதாரி இரண்டாம் பாகத்தை இயக்கி உள்ளார். இதில் தனுஷ், அமலா பால், கஜோல் உள்பட பலர் நடித்துள்ளனர். வருகிற 28-ம் தேதி படம் வெளியாக உள்ளது. இதுகுறித்து நேற்று சவுந்தர்யா அளித்த பேட்டி வருமாறு:

வேலையில்லா பட்டதாரி இரண்டாம் பாகம் எப்படி வந்திருக்கிறது?
முதல் பாகத்தை விட சிறப்பாக வந்திருக்கிறது. செண்டிமெண்ட், ஆக்ஷ்ன், நல்ல கருத்துக்களுடன் தயாராகி இருக்கிறது. முதல் பாகத்தில் காதலியாக நடித்த அமலாபால், இரண்டாம் பாகத்தில் மனைவியாக நடித்திருக்கிறார். ஹீரோ தனுஷ் முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தில் கடுமையான சவால்களை எதிர் கொள்கிறார். முதல் பாகத்தில் வந்த அதே வீடும், அதே மோபா பைக்கும் இதில் இடம்பெறுகிறது. திமிரான, அழகாக கேரக்டர் கஜோலுக்கு, பெண்களால் எதையும் சாதிக்க முடியும் என்பதை அவர் கேரக்டர் பிரதிபலிக்கும், தமிழ் தவிர தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளிலும் தயாராகி உள்ளது. படத்தின் மூன்றாம் பாகமும் வெளிவரும் வாய்ப்பு உள்ளது.

கஜோலுக்கு தமிழ் தெரியாதே எப்படி சமாளித்தீர்கள்?
தமிழ் தெரியாது என்பதாலேயே அவர் நடிக்க தயங்கினார். ஆனால் உங்களுக்கு வசனம் குறைவு என்றுதான் நடிக்க அழைத்து வந்தோம். அவரது பார்வை, நடை, ஸ்டைல் இவைகள்தான் அதிகம் இருக்கும். பெரும்பாலும் நறுக்கென்று ஆங்கிலத்தில் தான் பேசுவார். கிளைமாக்ஸ் காட்சியில் தான் கொஞ்சம் அதிகமான டயலாக் வரும். அதை ஆங்கிலத்தில் எழுதி வைத்து பேசி அசத்தினார்.

தனுஷ் பெரிய நடிகர் அவரை நடிக்க வைத்தது பற்றி?
அவரை நடிக்க வைக்க வேண்டியதில்லை. காட்சியை சொன்னால் போதும் வசனத்தை படித்து பார்த்துவிட்டு ஒரு டேக்கில் நடித்து முடித்து விடுவார். கேமராவுக்கு முன்னால் தான் அவர் ஹீரோ, கேமராவுக்கு பின்னால் நல்ல நண்பர் ஸ்கிரிப்ட் உருவாகத்திலிருந்து பட உருவாக்கம் வரை நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார்.

அடுத்து யாரை இயக்க இருக்கிறீர்கள்?
கோச்சடையானில் அப்பாவை இயக்கி விட்டேன். இந்தப் படத்தில் தனுஷை இயக்கி விட்டேன். அடுத்து தமிழில் அஜித் படத்தையும், தெலுங்கில் சிரஞ்சீவி படத்தையும் இயக்க ஆர்வமாக இருக்கிறேன்.

கமல்ஹாசனின் மகள்கள் நடிக்கும்போது ரஜினி மகள்கள் நடிப்பதில்லையே ஏன்?
நடிக்க கூடாது என்று எதுவுமில்லை. எனக்கும் நிறைய வாய்ப்புகள் வந்தது. ஆனால் வந்த கதைகள் எதுவும் எனக்கு பிடிக்கவில்லை. நல்ல கதையும், நல்ல கேரக்டரும் அமைந்தால் நடிக்க எனக்கு எந்த தயக்கமும் இல்லை.

கமல்ஹாசன் அரசியலுக்கு வருவார் போலிருக்கிறதே?
கமல் உறுதியான மனம் படைத்தவர், எதையும் தெளிவாக பேசுகிறவர். எந்த விஷயமாக இருந்தாலும் அதை நன்றாக உணர்ந்தே பேசுவார். என் தந்தையின் நீண்ட கால நண்பர். எங்கள் குடும்ப நண்பர். அவர் எது செய்தாலும் சரியாக இருக்கும்.

உங்கள் தந்தை அரசியலுக்கு வருவாரா மாட்டாரா?
இதுகுறித்து அவரிடம் தான் கேட்க வேண்டும். நான் எந்த கருத்தும் சொல்ல இயலாது.

Post a Comment

Recent News

Recent Posts Widget