மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் மீதான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்த உப பொலிஸ் பரிசோதகர் ஹேமசந்திரவுக்கு, சமூக வலைத் தளங்களில் தமிழ் இளைஞர்கள் உள்ளிட்ட பலரும் அஞ்சலியையும், இரங்கல்களையும் வெளிப்படுத்தினர்.
அத்துடன், உயிரிழந்த பொலிஸ் அலுவலரின் மனைவியின் காலில் நீதிபதி வீழ்ந்து அழுத சம்பவம் தொடர்பில் சிங்கள மக்கள் நெகிழ்ச்சியான கருத்துக்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர்.
நல்லூரில் நேற்று முன்தினம் மாலை, மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனை நோக்கி மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் அவரது மெய்ப்பாதுகாவலர் உயிரிழந்தார்.
ஹேமசந்திரவின் உயிரிழப்புத் தொடர்பில் தமிழ் இளையோர் சமூகவலைத் தளங்களில் தங்களது ஆழ்ந்த இரங்கல்களை வெளிப்படுத்தினர்.‘நீங்கள் காப்பாற்றியது நீதிபதியை அல்ல, யாழ்ப்பாண மக்களின் நம்பிக்கையை. ஆழ்ந்த அனுதாபங்கள்!!’, ‘சொந்த இனத்தில் துரோகிகள்…..!!! ஆனால் நம் எதிரிகள் என்று வசைபாடிய சிங்கள இனத்தில் தியாகிகளும் உள்ளனர் என நிரூபித்தவன்’, ‘ஓ வீரனே….உந்தன் பெயரும் எங்கள் மண்ணில் எழுதி வைக்கப்படும்! எம் நீதிதேவனுக்காய் உயிர்த்தியாகம் செய்த காவலனும் தன் காவலனுக்காய் தலை குனிந்து கதறிய நீதிதேவனும் மனிதம் இன்னும் செத்துவிடவில்லை என்பதற்கான உதாரண புருசர்கள்! வீர அஞ்சலிகள் காவலா!’, ‘நீ காப்பாற்றியது ஒரு உயிர் அல்ல.
அது பல உயிர்களுக்கு வாழும்போதே நிம்மதி கிடைக்கக்கூடிய சட்டத்தை நிலையாட்ட கூடிய நீதியை’ என்றவாறு பல்வேறு கருத்துக்கள் பதிவிடப்பட்டுள்ளன. பொலிஸ் உத்தியோகத்தரது பணியை மெச்சும் வகையில் அவை அமைந்திருந்தன.
இதேவேளை, தனது மெய்ப்பாதுகாவலரின் இழப்பை தாங்க முடியாத மேல் நீதிமன்ற நீதிபதி, ஹேமச்சந்திரவின் குடும்பத்தினர் முன்னிலையில் கதறி அழுதார். இந்த உருக்கமான சம்பவம் தமிழ் மக்கள் மத்தியில் மட்டுமன்றி, ஒட்டுமொத்த நாட்டு மக்களின் இதயங்களை கனக்கச் செய்துள்ளது.
மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனின் இந்தக் குணத்தை தென்னிலங்கை ஊடகங்கள் வெகுவாகப் பாராட்டி செய்தி வெளியிட்டுள்ளன. சமூக ஊடகங்களிலும் சகல இனங்களைச் சேர்ந்தவர்களும் நீதிபதியின் குணாதிசயத்தை வரவேற்றுள்ளனர்.
இலங்கையில் இவ்வாறு எந்தவொரு அரசியல்வாதியும் தனது மெய்ப்பாதுகாவலரின் உயிரிழப்பை மதித்தில்லை. நீதிபதியான இளஞ்செழியன், ஹேமச்சந்திரவின் குடும்பத்தினர் முன்னிலையில் கதறி அழும் காட்சி நெகிழ வைப்பதாக அவர்கள் பதிவிட்டுள்ளனர்.
படித்தவர், பதவி பெற்றவர் என்ற போதிலும், மனித உயிருக்கு முன்னால் இவ்வளவு நெகிழ்ச்சியடைவதென்பது பாராட்டப்பட வேண்டிய விடயம் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Post a Comment