பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வை வழங்குவதில் கூட்டு அரசு மந்தகதியிலேயே செயற்படுகின்றது என்பதை நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும். இன்னமும் அரசியல் கைதிகளின் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படவில்லை. தமிழ் மக்களின் காணிகள் குறித்து இறுதித் தீர்மானங்கள் எடுக்கப்படவில்லை.
காணாமற்போனோர் விடயம் எனப் பல்வேறு அடிப்படைப் பிரச்சினைகளுக்கு நாம் இன்னமும் தீர்வு காணவில்லை. இதன் காரணமாக அனைத்து விடயங்களிலும் சாதகத்தன்மை எட்டப்பட்டுள்ளது என்று எம்மால் தெரிவிக்கமுடியாது” இவ்வாறு தெரிவித்தார் சுகாதார அமைச்சரும் அமைச்சரவை இணைப் பேச்சாளருமான ராஜித சேனாரத்ன.
மேலும் ஐ.நா. சபையுடன் அமைச்சர் விஜயதாச ராஜபக்ச முரண்பட்டதையும் அவர் கடுமையாகச் சாடினார். “மூளை இல்லாதவர்கள்தான் ஐ.நா.வுடன் மோதுவார்கள்” என்றார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர்கள் மாநாடு அரச தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்றது.
“ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் பென் எமர்சன் அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தார். அது குறித்து அரசின் நிலைப்பாடு என்ன? ஐ.நா. சிறப்பு அறிக்கையாளருடன் நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச கடும் வாக்குவாதப்பட்டுள்ளார்.
இது தொடர்பிலும் அரசின் கருத்து என்ன? என்று எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அமைச்சர் ராஜித சேனாரத்ன பதிலளிக்கும்போது மேலும் கூறியதாவது:
எவருடன் மோதுவது என்று தெரிந்துகொள்ளவேண்டும். சிலர் ஐக்கிய நாடுகள் சபையுடன் மோதப் பார்க்கின்றார்கள். இலங்கையும் ஐ.நாவின் அங்கத்துவ நாடே. மூளையில்லாதவர்களே ஐ.நாவுக்கு எதிரான கருத்துகளை வெளியிடுகின்றனர்.
ஐ.நாவிலிருந்து வரும் சிறப்பு நிபுணர்களுக்கு நாம் விளக்கமளிக்கவேண்டும். அவர்கள் எமக்கு எதிராக முன்வைக்கப்படும் முறைப்பாடுகளை எடுத்துக்கொண்டே வருவார்கள். ஐ.நாவின் அங்கத்துவ நாடென்பதால் அவர்களின் கேள்விக்கு நாம் பதிலளிக்கவேண்டும்.
மனித உரிமைகளைப் பாதுகாப்பது தொடர்பான அனைத்து உடன்படிக்கைகளிலும் இலங்கை கையெழுத்திட்டுள்ளது. விசாரணைகளுக்கு அனுமதியளிக்கவும் உடன்படிக்கையில் கையெழுத்திடப்பட்டுள்ளது. விசாரணைகளின் பின்னர் கைதுசெய்யப்படுவதற்கு மாத்திரமே நாம் அனுமதியளித்திருக்கவில்லை.
2009ஆம் ஆண்டு போர் நிறைவடைந்த பின்னர் நல்லிணக்க விடயங்களை நாம் மேற்கொண்டிருந்தால் இந்தநிலை ஏற்பட்டிருக்காது. 2015ஆம் ஆண்டு நாம் வெற்றிபெற்றிருக்காவிடின் இந்த வருடம் மார்ச் மாதம் இலங்கைக்கு எதிராகப் பன்னாட்டுப் பொருளாதாரத் தடை வருவதை எவராலும் தடுத்திருக்கமுடியாது.
அவ்வாறு பொருளாதார தடை விதித்திருக்கும் பட்சத்தில் இலட்சக்கணக்கான மக்கள் வேலையில்லாமல் வீதிக்கு வந்திருப்பார்கள். அந்நிய வருமானமற்று எமது நாடு படுகுழியில் வீழ்ந்திருக்கும்.
நாடு என்ற ரீதியில் பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வை வழங்குவதில் நாம் மந்தகதியிலேயே செயற்படுகின்றோம் என்பதை ஏற்றுக்கொள்ளவேண்டும்.
இன்னமும் அரசியல் கைதிகளின் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படவில்லை. தமிழ் மக்களின் காணிகள் குறித்து இறுதித் தீர்மானங்கள் எடுக்கப்படவில்லை, காணாமற்போனோர் விடயம், மீள்குடியேற்றம் எனப் பல்வேறு அடிப்படைப் பிரச்சினைகளுக்கு நாம் இன்னமும் தீர்வு காணவில்லை.
இதன் காரணமாக அனைத்து விடயங்களிலும் சாதகத்தன்மை எட்டப்பட்டுள்ளது என்று எம்மால் தெரிவிக்கமுடியாது.
நாட்டிலுள்ள அனைத்துத் தரப்புக்கும் பன்னாட்டுச் சமூகத்துக்குப் பதிலளித்துத்தான் முன்னோக்கிப் பயணிக்கவேண்டும்.
கேள்வி: அந்த அறிக்கையில் கைதுசெய்யப்பட்டுச் சிறைகளில் 5 வருடங்களுக்கு மேலாக அடைக்கப்பட்டுள்ள 70இற்கும் மேற்பட்டோருக்கு வழக்குப் பதிவுசெய்யப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளதே?
பதில்: அதில் கூறப்படுவது தமிழ் அரசியல் கைதிகளையாகும். கடந்த அமைச்சரவைக் கூட்டத்திலும் அதுபற்றி நான் கலந்துரையாடினேன். வழக்குப் பதிவுசெய்பவர்கள் மீது வழக்குப் பதிவைச் செய்யுமாறும், ஏனையவர்களை விடுவிக்குமாறும் கூறியிருந்தேன். 1971, 1977ஆம் ஆண்டு புரட்சியின்போது கைதுசெய்யப்பட்டு விடுவிக்கப்பட்டதுபோன்று இவர்களையும் விடுக்கவேண்டும் என்று வலியுறுத்தினேன்.
கேள்வி: ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் எமர்சன் சிறைச்சாலைக்குச் செல்ல அனுமதியளித்தது யார்? என்று அமைச்சரவைக் கூட்டத்தில் அரச தலைவர் கேள்வியெழுப்பியுள்ளார் என வெளியாகியுள்ளதே?
பதில்: அரச தலைவர் எதிர்மறையாகக் கேட்கவில்லை. யாரிடம் அனுமதி பெற்றுச் சிறைச்சாலைக்குச் சென்றார் என்றுதான் கேட்டார். அவர் பாதுகாப்பு அமைச்சராக உள்ளமையாலேயே இந்தக் கேள்வியைக் கேட்டார். எனினும், சிறைச்சாலைகள் தொடர்பான பன்னாட்டு விடயத்தை அயலுறவு அமைச்சு நீண்டகாலமாகக் கையாள்வதால் அந்த அமைச்சே இதற்கு அனுமதியளித்துள்ளது.
Post a Comment