மாணவி வித்தியா படுகொலை வழக்கின் சந்தேகநபர் சுவிஸ்கு மாரை புங்குடுதீவில் வைத்துக் கைது செய்து யாழ்ப்பாணத்துக்கு அழைத்து வந்த உப பொலிஸ் பரிசோதகர் சிறிகஜன், அவரை யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலையத்தில் முற்படுத்து வதற்கு அறவே மறுத்துவிட்டார் என்று யாழ்ப்பாபாண முன்னாள் மூத்த பொலிஸ் அத்தியட்சகர் லக்ஸ்மன் வீரசேகர தீர்ப்பாயத்திடம் நேற்றுச் சாட்சியமளித்தார்.
“சுவிஸ்குமாருக்கு எதிராக சாட்சியங்கள் இல்லை என்று உப பொலிஸ் பரிசோதகர் சிறிகஜன் என்னிடம் கூறினார். எனினும் சந்தேகநபர் என்ற அடிப்படையில் சுவிஸ்கு மாரை பொலிஸ் நிலையத்தில் முற்படுத்து மாறு அவருக்குப் பணிப்புரைவிடுத்தேன். அதனை ஏற்க அவர் மறுத்துவிட்டார். பின்னர் வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபரின் அறிவுறுத்தலில் சுவிஸ் குமார் விடுவிக்கப்பட்டார்” என்று மூத்த பொலிஸ் அத்தியட்சகர் லக்ஸ்மன் வீரசேகர சாட்சியமளித்தார்.
புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா 2015ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி கூட்டு வன்புணர்வின் பின் கோரமாகக் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொடூரச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையில் மேல் நீதிமன்ற நீதிபதிகள் அன்னலிங்கம் பிரேமசங்கர், மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகியோர் அடங்கிய தீர்ப்பாயத்தின் இரண்டாம் கட்ட அமர்வு நேற்றுக் காலை 9 மணியளவில் யாழ்ப்பாணம் நீதிமன்றக் கட்டடத் தொகுதியின் 2ஆவது மாடியிலுள்ள திறந்த மன்றில் கூடியது.
வழக்குத் தொடுநர் சார்பில் பிரதி மன்றாடியார் அதிபதி பி. குமாரரட்ணம் தலைமையில் அரச சட்டவாதிகள் நாகரத்தினம் நிஷாந்த், லக்சி டீ சில்வா, மாலினி விக்னேஸ்வரன் மற்றும் பிரிந்தா ரெஜிந்தன் ஆகியோர் முன்னிலையாகியிருந்தனர்.
பூபாலசிங்கம் இந்திரகுமார், பூபாலசிங்கம் ஜெயக்குமார், பூபாலசிங்கம் தவக்குமார், மகா லிங்கம் சசிதரன் , தில்லைநாதன் சந்திரகாசன், சிவதேவன் துஷாந்த் , பழனி ரூபசிங்கம் குகநாதன் , ஜெயதரன் கோகிலன் , மற்றும் மகாலிங்கம் சசிக்குமார் ஆகிய ஒன்பது எதிரிகளும் தீர்ப்பாயத்தில் முற்படுத்தப்பட் டனர்.
அதனைத் தொடர்ந்து ஏழாம் நாள் சாட்சிப் பதிவுகள் ஆரம்பமானது.
இந்த வழக்கில் மேலும் இரு சாட்சியங்களையும் மூன்று சான்றுப் பொருள்களையும் இணைப்பதற்கு பிரதி மன்றாடியார் அதிபதி தீர்ப்பாயத்திடம் விண்ணப்பம் செய்தார்.
அதற்கு எதிரிகள் தரப்பு சட்டத்தரணி மகிந்த ஜெயவத்தன ஆட்சேபனை தெரிவித்து தீர்ப்பாயத்திடம் விண்ணப்பம் செய்தார். அதனை தீர்ப்பாயம் ஏக மனதாக நிராகரித்து. “இந்த வழக்கின் தீர்ப்பு வெளிப்படுத்தப்படும் வரையில் குற்றப்பகிர்வுப் பத்திரத்தில், தேவைக்கேற்ப திருத்தங்கள் செய்வதற்கு சட்டமா அதிபருக்கு உரித்துண்டு. அதன் பிரகாராம் புதிதாக இணைக்கப்பட இருக்கும் சாட்சியங்கள் இரண்டும் நிபுணத்துவ சாட்சியங்கள். அதனால் அவற்றை புதிதாக சேர்த்துக் கொள்வதற்கு வழக்குத் தொடுநருக்கு அனுமதியளிக்கப்படுகிறது” என்று தீர்ப்பாயம் கட்டளையிட்டது.
புதிதாக 52ஆவது சாட்சியாக இரசாயனப் பகுப்பாய்வுத் திணைக்கள மூத்த அதிகாரியும், 53ஆவது சாட்சியாக ஜின்டெக் நிறுவனத்தின் மூத்த விஞ்ஞானியும் நிபுணத்துவ சாட்சியங்களாக இணைத்துக்கொள்ளப்பட்டனர். அதேவேளை சான்றுப் பொருள்களாக பற்றுசீட்டுக்கள் , இரசாயனப் பகுப்பாய்வு அறிக்கை , மரபணுப் பரிசோதனை அறிக்கை ஆகியவை புதிதாக இணைக்கப்பட்டன.
எஸ்.ஐ. சாட்சியம்
இந்த வழக்கின் 21ஆவது சாட்சியான உப பொலிஸ் பரிசோதகர் மரகல இரான் சாட்சியமளித்தார்.
“சம்பவம் நடைபெற்ற காலப் பகுதியில் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்தேன்.அந்த பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் பணிப்பின் பேரில் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தின் கீழ் இயங்கும் குறிகாட்டுவான் பொலிஸ் காவலரணில் பொறுப்பதிகாரியாகப் பணிபுரிந்தேன்.
2015 மே மாதம் 14ஆம் திகதி காலை நான் குறிகாட்டுவான் பொலிஸ் காவலரணில் கடமையில் இருந்தேன் , புங்குடுதீவு ஆலடிச் சந்திக்கு அருகில் மக்கள் கூட்டமாக காணப்ப டுவதாக எனக்குத் தகவல் கிடைத்தது. அந்தப் பகுதிக்கு நான் எனது பொலிஸ் குழுவுடன் சென்றேன்.
ஆலடிச் சந்தியில் இருந்து சிறிது தூரம் உள்ளே சென்றால் , பற்றைக்காடுகளுக்கு மத்தியில் பாழடைந்த கட்டடங்கள் உள்ள பகுதியில் மக்கள் கூட்டம் காணப்பட்டது. அந்தப் பகுதியில் பாடசாலை மாணவி ஒருவரின் சடலம் காணப்பட்டது. நான் நின்ற இடத்தில் இருந்து சுமார் 15 மீற்றர் தூரத்தில் சடலம் காணப்பட்டது” எனத் தெரிவித்து சடலம் காணப்பட்ட நிலையை திறந்த மன்றில் சாட்சி விவரித்துக் கூறினார்.
அவ்வேளை எதிரிகள் தரப்பு சட்டத்தரணி மகிந்த ஜெயவர்த்தன, குறித்த பொலிஸ் சாட்சி , தகவல் புத்தகத்தை பார்த்து சாட்சியம் அளிக்காமல் தனது வாக்கு மூலத்தைப் பார்த்து சாட்சியம் அளிக்கின்றார். அதனை அனுமதிக்க கூடாது என மன்றில் கோரினார்.
அதனை அடுத்து தீர்ப்பாயம், சாட்சியத்திடம், வாக்குமூலத்தை பார்த்து சாட்சியம் அளிக்காமல் தகவல் புத்தகத்தைப் பார்த்து சாட்சியம் அளிக்குமாறு அறிவுறுத்தியது. அதனை அடுத்து சாட்சியம் அளிப்பவர் , தொடர்ந்து தனது சாட்சியத்தை அளித்தார்.
“நாம் அன்றைய தினம் சடலத்தை `உடற்கூற்றுப் பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவிட்டு, எமது பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி குயிண்டஸ் குணால் பெரேரா (அப்போதைய ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி) தலைமையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.
அதன் பிரகாரம் அன்றைய தினம் (14ஆம் திகதி) இரவு 10 மணியளவில் பூபாலசிங்கம் இந்திரகுமார், பூபாலசிங்கம் ஜெயக்குமார் மற்றும் பூபாலசிங்கம் தவக்குமார் ஆகிய மூவரையும் அவர்களது வீட்டுகளுக்கு அருகில் வைத்துக் கைது செய்தோம்.
மறுநாள் (15ஆம் திகதி ) மாணவியின் இறுதிச் சடங்கு இடம்பெற்றது. அன்றைய தினம் காலை முதல் இறுதிச் சடங்கு முடிவடைந்து சடலம் நல்லடக்கம் செய்யப்படும் வரையில் , நான் மாணவி கல்வி கற்ற பாடசாலைக்கு அரு கில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்தேன்.
அதன் பின்னர் 17ஆம் திகதி மாலை எமது பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி குயிண்டஸ் குணால் பெரேரா எம்மை புங்குடுதீவில் உள்ள நாதன் கடைக்கு முன்பாக வருமாறு அழைத்தார். அதனை அடுத்து நாம் அந்த இடத்துக்குச் சென்று இருந்தோம்.
அந்தக் கடையில் இருந்து சுமார் 400 மீற்றர் தூரத்துக்கு அப்பால் உள்ள இடத்துக்கு பொறுப்பதிகாரி எம்மை வரச் சொன்னார். நாம் அங்கு சென்ற போது மகாலிங்கம் சசிதரன் , தில்லைநாதன் சந்திரகாசன் , சிவதேவன் துஷாந்த் , பழனி ரூபசிங்கம் குகநாதன் மற்றும் ஜெயதரன் கோகிலன் ஆகிய 5 சந்தேக நபர்களையும் பொறுப்பதிகாரிக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் கைது செய்தோம். அவர்களைக் கைது செய்த போது அவர்களில் ஒரு சிலர் ஆலயத்துக்குச் செல்வதற்கு தயாரான நிலையில் வேட்டியுடன் மேலங்கி இல்லாமல் நின்று இருந்தார்கள். அவர்கள் ஐவரையும் ஒரே இடத்தில் வைத்தே கைது செய்தோம்.
சந்தேகநபர்களின் நெருங்கிய உறவினர் பொலிஸ் உத்தியோகத்தர்
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை எமது பொலிஸ் நிலையத்துக்குக் கொண்டு செல்லவில்லை. ஏனெனில் சந்தேகநபர்களில் ஒருவரின் நெருங்கிய உறவினர் ஒருவர் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றுவதனால் நாம் அவர்களை பொலிஸ் நிலையம் கொண்டு செல்லாது குறிகாட்டு வான் பொலிஸ் காவலரணுக்கு விசாரணைக்காகக் கொண்டு சென்றோம்.
நாம் அவர்களை குறிகாட்டுவான் பொலிஸ் காவலரணுக்கு கொண்டு சென்று வாக்குமூலங்களை பெற முயற்சிக்கும் போது , ஊரவர்கள் ஒன்று திரண்டு ,சந்தேகநபர்களைத் தம்மிடம் ஒப்படைக்குமாறு கோரி காவலரணைத் தாக்கினார்கள்.
அதனால் எமது பொறுப்பதிகாரி மேல் அதிகாரிகளின் கவனத்துக்கு அதனை கொண்டு சென்று கடற்படையின் உதவியுடன் சந்தேகநபர்களை கடல் வழியாக நீருந்து விசை படகு (வோட்டர் ஜெட்) மூலம் காரைநகர் கடற்படைத் தளத்துக்குக் கொண்டு சென்று அங்கிருந்து வட்டுக்கோட்டை பொலிஸாரின் உதவியுடன் சந்தேகநபர்களை யாழ்ப்பாணத் தலைமை பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தோம்.
அன்றைய தினம் இரவு சந்தேகநபர்கள் வாக்குமூலம் அளிக்கும் நிலைமையில் இல்லாத காரணத்தால் அவர்கள் ஓய்வெடுக்க அனுமதிக்கப்பட்டனர். நாம் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்துக்குத் திரும்பிவிட்டோம் என்று சாட்சியமளித்தார்.
பின்னர் மறுநாள் 18ஆம் திகதி அதிகாலை மீண்டும் யாழ்ப்பாண பொலிஸ் நிலையம் சென்று சந்தேகநபர்களின் வாக்குமூலங்களை கோபி எனும் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தரின் உதவியுடன் பெற்றுக்கொண் டேன்.
இதேவேளை, இந்தச் சாட்சி தீர்ப்பாயம் முன்னிலையில் நேற்று சுமார் 6 மணித்தியாலங்கள் சாட்சியமளித்தார்.
இந்த வழக்கின் 31ஆவது சாட்சியான யாழ்ப்பாண முன்னாள் மூத்த பொலிஸ் அத்தியட்சகர் லக்ஸ்மன் வீரசேகர சாட்சியமளித்தார்.
“2015ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி காலை 8.45 மணியளவில் என்னை யாழ்ப்பாண மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அலுவலகத்துக்கு வருமாறும் அங்கு வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் வரவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.
அதன் பிரகாரம் நான் அங்கு சென்றேன். அங்கு யாழ்ப்பாணப் பிரதிப் பொலிஸ்மா அதிபரும் யாழ்ப்பாண பொலிஸ் நிலைய உப பொலிஸ் பரிசோதகர் சிறிகஜனும் இன்னும் சில பொலிஸ் உத்தியோகத்தர்களும் இருந்தார்கள்.
காலை 9 மணியளவில் வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் லலித் ஜெயசிங்க அங்கு வந்தார். அவர் வந்து சில நிமிடங்களில் சட்டத்துறை பீடாதிபதி தமிழ்மாறனும் அங்கு வந்தார்.
பின்னர் சட்ட பீடாதிபதி தமிழ்மாறன், வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபருடன் சட்ட ஒழுங்குகள் குறித்துப் பேசினார். புங்குடுதீவு மாணவி படுகொலைச் சம்பவம் தொடர்பிலும் பேசினார். அதன்போது இந்த சம்பவத்துக்கு சுவிஸ்குமார் என்பவர் பணம் வழங்கியதாகவும் அங்கு பேசப்பட்டது. அதனையடுத்து மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபர், உப பொலிஸ் பரிசோதகர் இரானை அங்கு வரு மாறு அழைத்தார். அங்கு இரானிடம் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் தொடர்பில் விவரங்களை அவர் கேட்டார்.
சம்பவத்துடன் தொடர்புடையவர்களில் சுவிஸ்குமார் என்பவர் இல்லை. அந்தச் சந்தர்ப்பத்தில் சட்ட பீடாதிபதி தமிழ்மாறன், தன்னால் சுவிஸ்குமாரைப் பிடித்து தர முடியும் எனக் கூறினார். இரு பொலிஸ் அதிகாரிகளைத் தன்னுடன் அனுப்பி வைத்தால் சுவிஸ்குமாரைப் பிடித்து வர முடியும் எனவும் அவர் கூறினார். அதனை அடுத்து தமிழ்மாறனின் வெள்ளை நிற கப் ரக வாகனத்தில் உப பொலிஸ் பரிசோதகர் சிறிகஜனும் மற்றுமொரு பொலிஸ் உத்தியோகத்தரும் சென்றிருந்தனர்.
அவர்கள் சென்று 2 மணி நேரத்துக்குப் பின்னர் என்னை தொலைபேசி ஊடாகத் தொடர்பு கொண்ட சிறிகஜன், “சுவிஸ் நாட்டைச் சேர்ந்த ஒருவரைக் கைது செய்து இருக்கின்றோம். அவரைக் கொண்டு வருவதற்கு வாகன ஒழுங்கைச் செய்து தருமாறு” கோரினார்.
அது தொடர்பில் நான் யாழ்ப்பாண தலைமைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு அறிவித்தேன்”என்று முன்னாள் மூத்த பொலிஸ் அத்தியட்சகர் சாட்சியமளித்தார்.
தீர்ப்பாயம் சாட்சியிடம் கேள்வி எழுப்பியது.
கேள்வி :- நீர் மூத்த பொலிஸ் அத்தியட்சகர்தானே ?
பதில் :- ஆம்.
கேள்வி :- சாதரணமானவர்களுக்கே தெரியும், குற்றச்செயல் இடம்பெற்ற அருகில் உள்ள பொலிஸ் நிலையத்துக்குத்தான் அறிவிக்க வேண்டும் என்று. அவ்வாறு இருக்கையில் நீர் ஏன் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்துக்கு அறிவிக்காமல் , யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்திற்கு அறிவித்தீர் ?
பதில்:- சந்தேகநபர்கள் தொடர்பான விசாரணைகள் ஊர்காவற்றுறை பொலிஸாரால் யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டமையால் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்துக்கு அறிவித்தேன். ஓய்வுபெற்ற மூத்த பொலிஸ் அத்தியட்சகர் லக்ஸ்மன் வீரசேகர தொடர்ந்து சாட்சியமளித்தார்.
சிறிது நேரத்தில் சிறிகஜன் என்னைத் தொலை பேசி ஊடாகத் தொடர்பு கொண்டு தமக்கு வாகனம் தேவையில்லை எனவும் கைது செய்த நபருடன் வாகனம் ஒன்றில் தாம் வந்து கொண்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.
பிற்பகல் 1 மணி அல்லது 2 மணி இருக்கும் சுவிஸ்குமார் என்பவரை உப பொலிஸ் பரிசோதகர் சிறிகஜன் யாழ்ப்பாணத்துக்கு அழைத்து வந்திருந்தார். நான் சுவிஸ்கு மாரை யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முற்படுத்துமாறு அவருக்குப் பணித்தேன்.
அதற்கு சிறிகஜன் , “சுவிஸ்குமார் என்பவருக்கும் இந்த கொலைக்கும் எந்த தொடர்பும் இல்லை என தனக்கு ஊர்காவற்றுறை பொலிஸ் நிலைய உப பொலிஸ் பரிசோதகர் இரான் கூறியதாகவும் , சுவிஸ் குமாருக்கு எதிராக சாட்சியங்கள் எதுவும் இல்லாத நிலையில் அவரை பொலிஸ் நிலையத்தில் முற்படுத்த முடியாது” எனவும் என்னிடம் கூறினார்.
அதற்கு நான் அவரை சந்தேகநபராக முற்படுத்துங்கள் எனக் கூறினேன். அவ்வாறும் முற்படுத்த முடியாது என சிறிகஜன் கூறினார்.
இது தொடர்பில் யாழ்ப்பாண மாவட்டப் பிரதி பொலிஸ்மா அதிபர் பேரேராவுக்கு தொலைபேசி ஊடாக அறிவித்தேன். அவர் சிறிகஜனை தன்னுடைய அலுவலகத்துக்கு வருமாறு அழைத்தார். அதனை அடுத்து அவரது அலுவலகத்துக்கு சிறிகஜன் சென்றார்.
சிறிது நேரத்தில் மீண்டும் என்னை சந்தித்த சிறிகஜன் , “சாட்சியம் இல்லாத காரணத்தால், சுவிஸ்குமாரை பொலிஸ் நிலையத்தில் முற்படுத்தத் தேவையில்லை. அவருக்கு சட்ட மருத்துவ சோதனை விண்ணப்பம் வழங்கி, அவரை வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு யாழ்ப்பாண மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் எனக்குப் பணித்துள்ளார்” என்று கூறினார்.
நான் உடனேயே பிரதிப் பொலிஸ்மா அதிபரைத் தொடர்பு கொண்டு அது தொடர்பில் கேட்டேன். “சுவிஸ்குமாருக்குக் காயங்கள் இருக்குமானால் அது தொடர்பில் அவரிடம் விரிவான வாக்குமூலத்தைப் பெற்று அவருக்கு சட்ட மருத்துவ சோதனை விண்ணப்பத்தை வழங்கி அனுப்புமாறு வடக்கு மாகாண மூத்த பிரதி பொலிஸ்மா அதிபர் அறிவுறுத்தல் வழங்கினார்’’ என பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஜி.கே.பெரேரா என்னிடம் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து பிரதிப் பொலிஸ்மா அதிபர் கூறியது போன்றே நடவடிக்கை எடுக்குமாறு நான் சிறிகஜனிடம் கூறினேன்.
அதன் பின்னர் மறுநாள் 19ஆம் திகதி புங்குடுதீவு சர்வோதய மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு சென்றிருந்தேன் அங்கு பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஜி.கே.பெரேரா, வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் லலித் ஜயசிங்க மற்றும் சட்டத்துறைப் பீடாதிபதி தமிழ்மாறன் ஆகியோர் அங்கு வந்து உரையாற்றினார்கள்.
அப்போது மக்கள் சத்தமிட்டார்கள். நாங்கள் பிடித்துக்கொடுத்த சுவிஸ்குமாரை விடுவித்து விட்டீர்கள். பணம் வாங்கிக்கொண்டுதான் அவரை விடுவித்துவிட்டீர்கள் என அவர்கள் கொதிப்படைந்தார்கள்.
அப்போது , சந்தேகநபருக்கு எதிராக சாட்சியங்கள் எவையும் இல்லை. நீங்கள் அந்தச் சாட்சியத்தை வழங்கினால் அவரை மீண்டும் கைது செய்வதாக வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் லலித் ஜயசிங்க கூறினார்.
அதன் போது அங்கிருந்த அரசியல்வாதியின் சகோதரர் ஒருவர் தான் சாட்சியம் வழங்குவதாகக் கூறினார். அவரது சாட்சியம் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரால் பதிவு செய்ய கட்டளையிடப்பட்டது.
அதன் பின்னர் நானும் பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஜி.கே.பெரேராவும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோர் வெளியே வந்து வெள்ளவத்தைப் பொலிஸ் நிலையத்துக்கு தொடர்பு கொண்டோம். ஏனெனில் வெள்ளவத்தைப் பகுதியில் தான் சுவிஸ்குமார் நிற்பதாக கூட்டத்தில் இருந்தவர்கள் கத்தினார்கள். அதன் காரணமாக வெள்ளவத்தைப் பொலிஸாருக்கு தொடர்பு கொண்டு சுவிஸ் குமார் கைது செய்யப்பட்டமை குறித்துக் கேட்டோம். அவர்கள் சுவிஸ்குமாரைக் கைது செய்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
வெள்ளவத்தையில் இருந்து சந்தேகநபரை இங்கே கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஜி.கே.பெரேரா என்னிடம் கூறினார்.
நான் எனது பிரத்தியேக உதவியாளர் தலைமைப் பொலிஸ் பரிசோதகருடன் தொடர்பு கொண்டு, மானிப்பாய் பொலிஸ் நிலையத் தின் வாகனத்தைக் கொண்டு யாழ்ப்பாண பொலிஸ் நிலைய உப பொலிஸ் பரிசோதகரை ஆயுதம் தாங்கிய பொலிஸாருடன் வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்துக்குச் சென்று கைது செய்யப்பட்ட சந்தேகநபரை இங்கே கொண்டு வருமாறு கூறினேன்.
சுவிஸ்குமாரை நீதிமன்றில் முற்படுத்தும் நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு ஊர்காவற்றுறை பொலிஸ் நிலைய தலைமைப் பொலிஸ் பரிசோதகருக்கு கூறினேன். ஆனால் அவர் அதனைச் செய்யவில்லை. அதன் பின்னர் இது தொடர்பாக எழுத்து மூலமாக ஊர்காவற்றுறை பொலிஸ் நிலைய தலை மைப் பொலிஸ் பரிசோதகருக்கு தெரியப்படுத்தினேன். அப்போதும் அவர் அதனைச் செய்யவில்லை. இதன்பின்னர் ஒழுக்க விசாரணை மேற்கொள்ளுமாறு பிரதிப்பொலிஸ்மா அதிபருக்கு எழுத்து மூலமாக தெரிவித்தேன்.
பின்னர் குற்றவியல் நடவடிக்கை சட்டக்கோவையின் 125ஆவது பிரிவின் கீழ் எனக்கு வழங்கப்பட்டிருந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் பொலிஸ் பரிசோதகர் சிந்தக்க பண்டார உட்பட ஆறு உத்தியோகத்தர்களும் இதனை பொறுப்பெடுத்து மேற்கொள்ளுமாறு கட்டளை வழங்கினேன். அவர்களால் சுவிஸ்குமார் நீதிவான் முன்னிலையில் 21ஆம் திகதி முற்படுத்தப்பட்டார்”என தனது சாட்சியத்தில் தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து எதிரிகள் தரப்பு சட்டத்தரணிகளின் குறுக்கு விசாரணைகள் முடிவடைந்த பின்னர் ஓய்வுபெற்ற மூத்த பொலிஸ் அத்தியட்சகர் லக்ஸ்மன் வீரசேகரவின் சாட்சியம் முடிவுறுத்தப்பட்டு சாட்சி வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
அதன் பின்னர் 17ஆம் திகதி மாலை எமது பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி குயிண்டஸ் குணால் பெரேரா எம்மை புங்குடுதீவில் உள்ள நாதன் கடைக்கு முன்பாக வருமாறு அழைத்தார். அதனை அடுத்து நாம் அந்த இடத்துக்குச் சென்று இருந்தோம்.
பதில் :- ஆம்.
சிறிது நேரத்தில் சிறிகஜன் என்னைத் தொலை பேசி ஊடாகத் தொடர்பு கொண்டு தமக்கு வாகனம் தேவையில்லை எனவும் கைது செய்த நபருடன் வாகனம் ஒன்றில் தாம் வந்து கொண்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.
பிற்பகல் 1 மணி அல்லது 2 மணி இருக்கும் சுவிஸ்குமார் என்பவரை உப பொலிஸ் பரிசோதகர் சிறிகஜன் யாழ்ப்பாணத்துக்கு அழைத்து வந்திருந்தார். நான் சுவிஸ்கு மாரை யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முற்படுத்துமாறு அவருக்குப் பணித்தேன்.
இது தொடர்பில் யாழ்ப்பாண மாவட்டப் பிரதி பொலிஸ்மா அதிபர் பேரேராவுக்கு தொலைபேசி ஊடாக அறிவித்தேன். அவர் சிறிகஜனை தன்னுடைய அலுவலகத்துக்கு வருமாறு அழைத்தார். அதனை அடுத்து அவரது அலுவலகத்துக்கு சிறிகஜன் சென்றார்.
சிறிது நேரத்தில் மீண்டும் என்னை சந்தித்த சிறிகஜன் , “சாட்சியம் இல்லாத காரணத்தால், சுவிஸ்குமாரை பொலிஸ் நிலையத்தில் முற்படுத்தத் தேவையில்லை. அவருக்கு சட்ட மருத்துவ சோதனை விண்ணப்பம் வழங்கி, அவரை வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு யாழ்ப்பாண மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் எனக்குப் பணித்துள்ளார்” என்று கூறினார்.
Post a Comment