கல்வியங்காட்டு பொதுச் சந்தை வியாபாரிகள் வடமாகாண முதலமைச்சரிடம் சந்தையில் உள்ள நிர்வாக சீர்கேடுகள் கட்டடத் தொகுதிகள் வாடகைக்கு விடப்பட்ட விடயங்கள் தொடர்பாக நேரில் விஜயம் மேற்கொள்ளுமாறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.
குறிப்பாக கடந்த 2015 தொடக்கம் மாநகர சபைக்கு முறையிட்டும் உரிய வசதிகள் செய்து தரப்படவில்லை எனவும் மலசலகூட வசதிகள் சீரில்லை. உரிய முறையில் சந்தை சுத்தப்படுத்தப்படுவதில்லை என்றும் சந்தைத் கட்டடத் தொகுதியில் மேல் மாடியில் அமைந்துள்ள கடைகள் ஒப்பந்த அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் அவை திறக்கப்படுவதில்லை. அவற்றை வேறு ஆட்களுக்கு மாற்றிக் கொடுக்க வேண்டும் என்றும் சந்தைவியாபாரிகளும் பொதுமக்களும் முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர்.
மேலும் குறித்த பகுதியில் இயங்கி வரும் 24 வர்த்தக நிலையங்களுக்கும் மலசல கூடங்களோ பொதுக் கழிப்பறைகளோ இல்லாமையினால் இங்கு பணிபுரிபவர்களும் நுகர்வோரும் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இவை தொடர்பில் யாழ்.மாநகர சபை ஆணையாளருக்கும் துறைசார்ந்த அதிகாரிகளுக்கும் அறிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவே இவற்றிற்கு துரிதமாக நடவடிக்கை எடுக்கும்படி வேண்டுகோள் விடுத்தனர்.
குறித்த விடயங்கள் தொடர்பில் மாநகர சபை மற்றும் உள்ளூராட்சி அதிகாரிகளுடன் கலந்துரையாடிய முதலமைச்சர் நீர் வசதி, சுகாதார விடயங்களை உடன் நடைமுறைப்படுத்தவேண்டும் எனவும் மாநகர சபை அதிகாரிகளுக்குப் பணிப்புரைவிடுத்ததுடன் குறித்த விடயங்கள் தொடர்பாக 3 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.
Post a Comment