Ads (728x90)

நடிப்பு: நிகில், ஆகாஷ், இனியா, சுவாதி தீக்‌ஷித், கோவை சரளா, எம்.எஸ்.பாஸ்கர்.
ஒளிப்பதிவு: பிரான்சிஸ்
இசை: கணேஷ் ராகவேந்திரா
தயாரிப்பு: ரைட் வியூ சினிமாஸ்
இயக்கம்: ஜாய்சன்

கட்டிடத்துறையில் சாதிக்கத் துடிக்கும் இன்ஜினியர், தனது கனவு பில்டிங்கை உருவாக்கும்போது, அதே கட்டிடத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்கிறார். பிறகு அந்தக் கட்டிடத்தில் அவரது ஆவி சுற்றுவதாகவும், அங்கு செல்பவர்களை அது அடித்துக் கொல்வதாகவும் செய்தி பரவுகிறது. இதை விசாரிக்கும் போலீஸ் அதிகாரிகளையும் ஆவி பயமுறுத்துகிறது.

பிறகு இந்த சிக்கலான வழக்கு, போலீஸ் அதிகாரி நிகில் கைக்கு வருகிறது. அவர் விசாரிக்கும்போது பல திடுக்கிடும் சம்பவங்கள் நடக்கிறது. இறுதியில் அந்த ஆவி என்ன ஆனது என்பது கதை.

பேய் பட வரிசையில் இது 1,001வது படம் என்றாலும், புதுமையான திருப்பங்கள் வைத்து சுவாரஸ்யப்படுத்த முயற்சி செய்திருக்கிறார்கள்.

ஆனால், எதிலுமே லாஜிக் இல்லை. நிகில், ஆகாஷ் முகத்தில் மலையாளச் சாயல். இன்னும் நடிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். சுவாதி தீக்‌ஷித்துக்கு காதலனிடம், ‘என்னை எப்ப கல்யாணம் பண்ணிக்கப்போற?’ என்று கேட்பதைத் தவிர வேறு வேலையில்லை. போலீஸ் அதிகாரி ரகுமான், தாதா பிரதாப் போத்தன், டாக்டர் மனோபாலா சில காட்சிகளில் வந்தாலும், மனதில் பதிகிறார்கள்.

இனியா பேயாக நடித்து பயமுறுத்துவதைக் காட்டிலும், அதீத மேக்கப்பில் அதிகமாகப் பயமுறுத்துகிறார். கோவை சரளா, எம்.எஸ்.பாஸ்கர் காமெடிக்கு தனியாக ஏ சான்றிதழ் கொடுக்கலாம்.ஒளிப்பதிவாளர் பிரான்சிஸ், இசை அமைப்பாளர் கணேஷ் ராகவேந்திரா இருவரும் தங்களுக்குக் கொடுத்த வேலையைச் செய்திருக்கிறார்கள்.

குத்துப்பாடல்களும், அதைப் படமாக்கிய விதமும் ரசிக்க வைக்கிறது.ரியல் எஸ்டேட் மோசடி பற்றி ஆரம்பத்தில் பெரிய பில்டப் கொடுக்கப்படுகிறது. அதற்குப் பிறகு படம், பேய் பின்னாலேயே ஓடுகிறது. கொலைகார ரவுடியை, நண்பனைப் போல் கூடவே வைத்துக்கொண்டு திரிகிறார் போலீஸ் அதிகாரி. பேய் கலந்த திகில் கதை என்று முடிவான பிறகு புகுந்து விளையாடி இருக்கலாம். ஏனோ அதை தவறவிட்டு இருக்கிறார்கள்.

Post a Comment

Recent News

Recent Posts Widget