வடக்கு மாகாண சபை அமைக்கப்பட்டு வழங்கப்பட்ட அமைச்சுப் பொறுப்புக்கள் 4 ஆண்டுகளில் 6 தடவைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆறாவது தடவையாக மாற்றம் செய்யப்பட்ட புதிய அமைச்சரவை வடக்கு மாகாண ஆளுநர் குரே முன்பாக நேற்றுப் பதவியேற்றது.
வடக்கு மாகாண அமைச்சரவையை தன்னைத் தவிர்த்து ஏனை யோரை மாற்றுவதற்கு வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் விரும்பியிருந்தார். அதில் அவர் விடாப்பிடியாகவும் நின்று கொண் டார். இதனால் மாகாண சபைக்குள்ளும், தமிழ்த் தேசியக் கூட்ட மைப்புக்குள்ளும், அதன் அங்கத்துவக் கட்சிகளுக்குள்ளும் பெரும் குழப்பங்கள் ஏற்பட்டிருந்தன.
இந்த நிலையில் பெரும் சர்சைகளுக்கு மத்தியில் புதிய அமைச்சரவை நேற்றுப் பதவியேற்றுக் கொண்டது. ஜி.குணசீலன், க.சிவநேசன் ஆகியோர் அமைச்சரவைக்குப் புதுமுகங்களாக உள்வாங்கிக் கொள்ளப்பட்டனர். ஏற்கனவே அமைச்சுப் பொறுப்புக்களை வகிக்கும் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் திருமதி அனந்தி சசிதரன் ஆகியோர் சில அமைச்சுப் பொறுப்புக்களை நேற்று ஏற்றுக் கொண்டனர்.
அமைச்சுப் பொறுப்புக்கள்
கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரனின் அமைச்சுப் பொறுப்புக்களில் மாற்றம் ஏதும் இல்லாதமையால் அவர் நேற்றுப் புதிதாக சத்தியப்பிரமாணம் செய்யவில்லை. வடக்கு மாகாண நிதி திட்டமிடல், சட்டம் ஒழுங்கு, காணி விவகாரம், வீடமைப்பு, போக்குவரத்து, மின்சாரம், சுற்றுலாத்துறை, உள்ளூராட்சி, மாகாண நிர்வாகம் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சராக முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆளுநர் முன்னிலையில் உறுதியுரையெடுத்து தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.
விவசாயம், நீர்ப்பாசனம், கால்நடை, மீன்பிடி, நீர் வழங்கல் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சராக புளொட் அமைப்பின் முல்லைத்தீவு மாவட்ட மாகாண சபை உறுப்பினர் கந்தையா சிவநேசன் உறுதி உரையெடுத்துக் கடமைகளைப் பொறுப்பேற்றார்.
சுகாதாரம் சுதேச மருத்துவம், நன்னடத்தை மற்றும் சிறுவர் விவகார அமைச்சராக ரெலோ அமைப்பின் மன்னார் மாவட்ட மாகாண சபை உறுப்பினர் ஞானசீலன் குணசீலன் உறுதி உரைய எடுத்துக் கடமைகளைப் பொறுப்பேற்றார்.
பெண்கள் விவகாரம், மறுவாழ்வு, சமூக சேவை, கூட்டுறவு, வர்த்தக வாணிபம், உணவு வழங்கல் விநியோகம் சிறுதொழில் முயற்சி ஊக்குவிப்பு அமைச்சராக திருமதி அனந்தி சசிதரனும் ஆளுநர் முன்னிலையில் உறதி உரை செய்துகொண்டனர்.
பெண்கள் விவகாரம், மறுவாழ்வு, சமூக சேவை, கூட்டுறவு, வர்த்தக வாணிபம், உணவு வழங்கல் விநியோகம் சிறுதொழில் முயற்சி ஊக்குவிப்பு அமைச்சராக திருமதி அனந்தி சசிதரனும் ஆளுநர் முன்னிலையில் உறதி உரை செய்துகொண்டனர்.
அமைச்சரவை மாற்றங்கள்
2013ஆம் ஆண்டு வடக்கு மாகாணசபை கைப்பற்றப்பட்ட பின்னர் அதே ஆண்டு ஒக்ரோபர் மாதம் முதலாவது அமைச்சரவை பதவியேற்றிருந்தது. 2014ஆம் ஆண்டு முதலமைச்சர் தன்வசம் வைத்திருந்த சில அமைச்சுப் பொறுப்புக்களை, அப்போதைய அமைச்சர்களாக இருந்த பொ.ஐங்கரநேசன், ப.சத்தியலிங்கம், பா.டெனீஸ்வரன் ஆகியோருக்குப் பகிர்ந்து கொடுத்து இரண்டாவது தடவையாக அமைச்சுப் பதவியேற்பு நடைபெற்றது.
2016ஆம் ஆண்டு அப்போதைய சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கத்திடமிருந்து சில அமைச்சுப் பொறுப்புக்களை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மீண்டும் பிடுங்கி எடுத்து, அமைச்சுப் பதவியேற்பு மூன்றாவது தடவையாகவும் நடைபெற்றது.
ஊழல் குற்றச்சாட்டுக்களைத் தொடர்ந்து கல்வி மற்றும் விவசாய அமைச்சர்கள் பதவி விலகியதைத் தொடர்ந்து அந்த அமைச்சுக்களை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பொறுப்பேற்றுக் கொண்டார். இதற்கான பதவியேற்பு நான்காவது தடவையாக ஜூன் மாதம் நடைபெற்றது. ஜூலை மாதம், கல்வி மற்றும் மகளிர் விவகார அமைச்சுப் பதவி பொறுப்பேற்பு நடைபெற்றது. ஆறாவது தடவையாக அமைச்சுப் பதவி பொறுப்பேற்பு நேற்று நடைபெற்றது.

Post a Comment