பல்லெகலே சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இந்திய அணியுடன் நடந்த 2வது ஒருநாள் போட்டியில், இலங்கை சுழற்பந்துவீச்சாளர் அகிலா தனஞ்ஜெயா அபாரமாகப் பந்துவீசி அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார். இவர் 10 ஓவரில் 54 ரன் விட்டுக்கொடுத்து 6 விக்கெட் கைப்பற்றியது இந்திய அணியை தோல்விப் பாதையில் தள்ளிவிட்டது என்றே சொல்ல வேண்டும்.
131 ரன்னுக்கு 7 விக்கெட் இழந்து தடுமாறிய அணியை டோனி - புவனேஷ்வர் ஜோடி போராடி மீட்டு நம்ப முடியாத வகையில் வெற்றியை வசப்படுத்தியது. இறுதி வெற்றி இந்திய அணிக்கே என்றாலும், டாப் கிளாஸ் பேட்ஸ்மேன்களுக்கு தண்ணி காட்டிய வகையில் ‘ஆட்ட நாயகன்’ விருதை அபகரித்தார் அகிலா. தொடர் தோல்விகளால் துவண்டு கிடக்கும் இலங்கை அணிக்கு, புதிய நம்பிக்கை நட்சத்திரமாக ஜொலிக்கத் தொடங்கியிருக்கிறார் இந்த 23 வயது ஸ்பின்னர்.
மகாமரக்கல குருகுலசூரியா பட்டாபெடிங்கே அகிலா தனஞ்ஜெயா பெரேரா. இது தான் அவரது முழுப் பெயராம். இலங்கை அணிக்காக இதுவரை 4 ஒருநாள், 5 டி20 போட்டியில் விளையாடி இருக்கிறார். இந்தியாவுக்கு எதிராக 54 ரன்னுக்கு 6 விக்கெட் கைப்பற்றியதே சிறந்த பந்துவீச்சு. இது டிரெய்லர் தான்... மெயின் பிக்சர் இனிமே தான் என மிரட்டுகிறார்.
மீண்டும் ஒரு முத்தையா முரளிதரன் கிடைத்துவிட்டதாகவே குதூகலிக்கிறார்கள் இலங்கை ரசிகர்கள். அடுத்தடுத்த போட்டிகளில் அசத்துவாரா? பொறுத்திருந்து பார்க்கலாம்.
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment